Home நாடு செயசீலனார் மறைவுக்கு சுப.சற்குணன் இரங்கல்

செயசீலனார் மறைவுக்கு சுப.சற்குணன் இரங்கல்

1140
0
SHARE
Ad

ஈப்போ – தமிழ்த்தொண்டர், நற்றமிழ் அறிஞர், பேரா மாநிலக் கல்வித் திணைக்கள மேனாள் சிறப்பதிகாரி ஐயா குழ.செயசீலனார் (படம்) மறைவுக்கு பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“நல்லாசிரியராக இருந்து பின்னர் தலைமையாசிரியராகப் பணியாற்றித் தமிழ்க் கல்விப் பணிக்குப் பெருமையும் பீடும் சேர்த்த நல்லாசான் இவர். பேராக் மாநிலக் கல்வித் திணைக்களத்தில் நன்னெறிப் பாடச் சிறப்பதிகாரியாகவும் நல்ல தமிழை முழங்கும் அரிமாவாகவும் வளம் வந்தவர். ‘குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை’ எனும் நன்னூல் பாடலை ஒவ்வொரு கூட்டத்திலும் விளக்கிச் சொல்லி நல்லாசிரியர் பண்புநலன்களை வலியுறுத்தி தமிழாசிரியர்களை ஆற்றுப்படுத்தியவர்” என தனது இரங்கல் செய்தியில் சற்குணன் குறிப்பிட்டுள்ளார்.

“மிடுக்கான தோற்றத்தோடும் எடுப்பான நல்ல தமிழ்ப் பேச்சாலும் முனைப்பான செயல்களாலும் ஆசிரியர் சமூகத்திற்கு முன்னுவமியாகத் (Role Model) திகழ்ந்தவர். எந்நேரமும் புன்னகை தவழும் முகத்தோடும் உண்மை, நேர்மை ஆகிய உயர் பண்புகளோடும் வலம் வந்தவர். முதன் முறையாக அறிவியல் கலைச்சொல் கையேட்டை உருவாக்கி பேராக் மாநிலத்தில் தமிழைச் செழிக்கச் செய்தவர். பேசினாலும் எழுதினாலும் முழுக்க முழுக்க நல்ல தமிழையே பயன்படுத்த வேண்டும் எனும் கொள்கையில் உறுதிகொண்டவர். தனித்தமிழின் மீது ஆழ்ந்த அன்பும் நம்பிக்கையும் உடையவர்” என்றும் செயசீலனாருக்கு சற்குணன் புகழாரம் சூட்டினார்.

#TamilSchoolmychoice

“இளம் ஆசிரியர்களுக்கு தன்முனைப்பூட்டும் வழிகாட்டியாக இருந்து நல்லாசிரியர்கள் பலரை உருவாக்கியவர். பாவாணர், பெருஞ்சித்திரனார் முதலான தனித்தமிழ் அறிஞர்களை ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். தமிழே மூச்சாக தமிழ் வளர்ச்சியே சிந்தனையாக வாழ்ந்த நல்லதமிழ் உணர்வாளர் மறைந்தார் எனும் துயரச் செய்தி உளத்தையும் உணர்வுகளையும் மிகவும் வாட்டுகிறது; வருத்துகின்றது” என்றும் சற்குணன் (படம்) தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

“தமிழுக்கே தம் வாழ்வை ஒப்புக்கொடுத்த ஐயா குழ.செயசீலனாரின் அருமை ஊழியங்களைக் கைகூப்பி தொழுகின்றேன்; தலைதாழ்த்தி வணக்கஞ் செய்கின்றேன். அன்னாரின் மறைவு தமிழ்க்கல்விச் சமூகத்திற்கும் தமிழ்ப் பற்றாளர்களுக்கும் பேரிழப்பு என்றால் மிகையன்று. அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்திருக்கும் அவரின் அன்புத் துணைவியார் ஐயை.திருமதி தேவிஸ் அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எமது கண்ணீர் இரங்கலைத் தெரிவிக்கின்றேன். அன்னாரின் ஆதன் இறைமைத் திருவடி நிழலில் இளைப்பாற நெஞ்சாற இறைஞ்சுகின்றேன்” என்றும் சற்குணன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.