Home நாடு சாஹிட் ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்தார்!

சாஹிட் ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்தார்!

1169
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (காலை 10.30 மணி நிலவரம்) தனது மனைவி மற்றும் தனது சொந்த கடன் பற்று அட்டை (கிரெடிட் கார்ட்) பாக்கிக் கட்டணத்திற்காக தனது குடும்பம் தொடர்புடைய ஓர் அறவாரியத்தின் நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தன்மீது கொண்டுவரப்பட்டிருக்கும் புகார்கள் குறித்து ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் வழங்க அம்னோ தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அகமட் சாஹிட் ஹமிடி புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தான் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளப்போவதாகவும், ஊழல் தடுப்பு ஆணையத்துடன் ஒத்துழைக்கப் போவதாகவும் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்த சாஹிட் சம்பந்தப்பட்ட அறவாரியம் தானும் தனது நண்பர்களும் செலுத்திய நன்கொடைகளைக் கொண்டு இயங்குகிறது என்றும் தெரிவித்தார்.

பல்வேறு அறப்பணிகளையும், இஸ்லாமிய விவகாரங்கள் சார்ந்த நற்பணிகளையும் அந்த அறவாரியம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த அறவாரியத்தின் நிதிகள் கையாளப்பட்ட விவகாரத்தில் அவரை விசாரிக்க ஊழல் தடுப்பு ஆணையம் அவரை அழைத்திருக்கிறது.

சாஹிட் மற்றும் அவரது மனைவிக்கான கடன் பற்று அட்டைக்கான பாக்கித் தொகை சுமார் 8 இலட்சம் ரிங்கிட்டை அந்த அறவாரியம் செலுத்தியிருப்பதன் தொடர்பில் அவர் மீது விசாரணை நடத்தப்படவிருப்பதாகத் தெரிகிறது. அந்த அறவாரியத்தின் தலைவரும் சாஹிட் ஆவார்.

1997-இல் பதிவு செய்யப்பட்ட அந்த அறவாரியம் ஏழ்மை ஒழிப்புக்காக நிதிகளைப் பெறுவதற்கும் விநியோகிப்பதற்கும் உருவாக்கப்பட்டதாகும்.

மேலும், சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு வழங்கிய நன்கொடை தொடர்பில் சாஹிட், அந்த சவுதி அரச குடும்ப உறுப்பினரைச் சந்தித்த விவகாரம் தொடர்பிலும் அவர் இன்று ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படவிருப்பதாக ஊழல் தடுப்பு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 22 ஆகஸ்ட் 2015-ஆம் நாள் ஜோகூர், ஸ்ரீ காடிங் அம்னோ தொகுதி கூட்டத்தில் உரையாற்றும்போது நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 700 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடையை வழங்கிய சவுதி அரேபியா அரச குடும்ப உறுப்பினரை தான் சந்தித்திருப்பதாகத் சாஹிட் தெரிவித்திருந்தார்.