Home உலகம் இலண்டன் திருவள்ளுவர் பள்ளிக்கு முத்து நெடுமாறன் வருகை

இலண்டன் திருவள்ளுவர் பள்ளிக்கு முத்து நெடுமாறன் வருகை

2365
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இலண்டனுக்குத் தனிப்பட்ட வருகை ஒன்றை மேற்கொண்டிருக்கும் மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறன், கடந்த செவ்வாய்க்கிழமை ஜூலை 11-ஆம் தேதி  இலண்டனில் இயங்கிவரும் திருவள்ளுவர் பள்ளிக்கூடத்திற்கு வருகை தந்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ்ப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டார்.

முத்து நெடுமாறனின் துணைவியார் பவானியும் அந்த வருகையில் கலந்து கொண்டார்.

முத்து நெடுமாறன் முரசு அஞ்சல் மென்பொருள் உருவாக்குநர் என்பதோடு செல்லினம் குறுஞ்செயிலின் நிறுவனர் மற்றும் வடிவமைப்பாளரும் ஆவார். செல்லியல் இணைய ஊடகத்தின் இணை தோற்றுநருமான முத்து நெடுமாறன் இந்த இணைய ஊடகத்தின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரும் ஆவார்.

#TamilSchoolmychoice

இலண்டனில் இயங்கி வரும் திருவள்ளுவர் பள்ளிக் கூடம், தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது. முத்து நெடுமாறனுடன் இலண்டனில் உள்ள மூத்த கல்வியாளரான திரு சிவ பிள்ளையும் திருவள்ளுவர் பள்ளிக்கு உடன் வருகை தந்தார். பிரிட்டனிலுள்ள பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதற்கான பாட உள்ளடக்கங்களை (syllabus) உருவாக்குவதில் சிவா பிள்ளை முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளாக தமிழார்வம் கொண்ட குழுவினரால் இந்தப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 200 மாணவர்கள் மற்றும் 13 ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களின் பிள்ளைகள் தமிழ் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலண்டன் சுற்று வட்டாரத்தில் வாழும் தமிழ் சமூகப் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை இங்கே அனுப்பி வருகின்றனர்.

முத்து நெடுமாறனின் வருகையின்போது அங்கு கல்வி கற்றுவரும் மாணவர்கள் தாங்கள் கற்று மனனம் செய்திருக்கும் ஆத்திசூடி, திருக்குறள் போன்ற நூல்களின் சில பகுதிகளை ஒப்பித்துத் தங்களின் திறனைக் காட்டினர்.

பின்னர் அந்தப் பள்ளியின் மாணவர்களிடையே முத்து நெடுமாறன் உரையாற்றினார். தனதுரையில் ஒவ்வொரு மாணவனும் தற்கால நடப்பு சூழ்நிலைகளுக்கேற்ப பல மொழிகளில் புலமை பெறுவதன் மூலம், வேலைவாய்ப்பு சந்தையிலும், வணிக முயற்சிகளிலும் மேலும் கூடுதலான நன்மைகளையும், வாய்ப்புகளையும் பெற முடியும் என்பதை முத்து நெடுமாறன் வலியுறுத்தினார்.

“பன்மொழித் திறன் கொண்டிருப்பதன் மூலம் நமது புத்தாக்க சிந்தனைகளும், புதிதாக ஒன்றை வடிவமைக்கும், கருத்துருவாக்கும் ஆற்றலும் மேலும் விரிவடைகிறது என்பது அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மற்ற இனங்களை விட தமிழர்களை தனியாக அடையாளப் படுத்துவதும், நம்மை உயர்த்திக் காட்டுவதும் நமது தாய்மொழியான தமிழ்தான். காரணம், நமது தாய்மொழியின் பழமை, தொடர்ச்சி மற்றும் அதில் புதைந்திருக்கும் இலக்கிய வளமை, அதன் தொன்மை ஆகிய கூறுகள்தான்” என்றும் முத்து நெடுமாறன் தனதுரையில் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

“தமிழ் படிப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எதிர்காலத்தில் தமிழறிவு கொண்டிருப்பதன் மூலம் பல கோணங்களில் சிந்திக்கும் ஆற்றல் நமக்கு இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். அதன் மூலம் பொது வெளியில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரவே செய்யும்” என்றும் முத்து நெடுமாறன் இலண்டன் திருவள்ளுவர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.