Home உலகம் சிங்கப்பூர் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட ஆர்வம்!

சிங்கப்பூர் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட ஆர்வம்!

1413
0
SHARE
Ad

சிங்கப்பூர் – மலேசியாவில் 14-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த வரலாற்றுத் தருணங்களில், அரசியல் ஆர்வலர்களிடையே ஊடகங்களில் பரவலாக எழுப்பப்பட்ட கேள்வி, அடுத்து சிங்கப்பூரிலும் இதுபோன்றே அரசியல் மாற்றம் வருமா என்பதுதான்.

அவ்வாறு நடக்குமா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, அதற்கான முதல் அச்சாரத்தை சிங்கை எதிர்க்கட்சிகள் நேற்று தொடக்கி வைத்திருக்கின்றன – எதிர்க்கட்சிகளின் விருந்துபசரிப்பு சந்திப்பு ஒன்றின் மூலம்!

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (எஸ்டிபி) நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் (பிஏபி) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் டான் செங் போக் என்பவரை எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஒருமித்த தலைவராக முன்னிறுத்தும் விருப்பத்தை வெளியிட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

நேற்றைய விருந்துபசரிப்பு சந்திப்பை நடத்திய எஸ்டிபி கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜூவான் டாக்டர் டான் கொண்டிருக்கும் அனுபவம், தலைமைத்துவ ஆற்றல் ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூர் எதிர்க்கட்சிகளுக்கு சிறந்த தலைமைத்துவம் அமையும் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்.

நேற்றைய விருந்துபசரிப்பில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக்கிடையில் கூடுதல் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் தொடரத் தங்களின் விருப்பத்தையும் ஆர்வத்தையும் தெரிவித்தனர் என்றும் எஸ்டிபி கட்சியின் பத்திரிக்கை அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

சிங்கப்பூரின் 6 எதிர்க்கட்சிகள் இந்த விருந்துபசரிப்பு சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டன என இதுகுறித்து செய்தி வெளியிட்டிருக்கும் பெர்னாமா தெரிவித்தது.

இந்தக் கூட்டத்தில் பார்வையாளராகக் கலந்து கொண்ட பிஏபி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சிக் கூட்டணிக்குத் தலைமையேற்க முன்மொழியப்பட்டிருப்பவருமான டாக்டர் டான் “நான் தலைமையேற்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் முதலில் நாம் நாட்டைப் பற்றி நினைக்க வேண்டும். தேர்தலில் களமிறங்குவதாக இருந்தால் அனைவரும் ஒன்றாக ஒரு குழுவாக இறங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

ஆகக் கடைசியாக 2015-இல் சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் பிஏபி கட்சி மொத்தமுள்ள 89 தொகுதிகளில் 83-ஐக் கைப்பற்றியது.