Home நாடு இராமசாமி முஜாஹிட்-பெர்லிஸ் முப்டியைச் சந்திக்கிறார்

இராமசாமி முஜாஹிட்-பெர்லிஸ் முப்டியைச் சந்திக்கிறார்

979
0
SHARE
Ad

பட்டவொர்த் – விடுதலைப் புலிகள் விவகாரத்தில் காவல் துறைப் புகார்கள் சர்ச்சையில் சிக்கியுள்ள பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முஜாஹிட் யூசோப் ரவாவை புத்ரா ஜெயாவிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்திக்கிறார். அந்த சந்திப்பில் பெர்லிஸ் முப்டி (இஸ்லாமிய விவகாரங்களுக்கான மாநிலப் பொறுப்பாளர்) டத்தோ டாக்டர் முகமட் அஸ்ரி சைனுல் அபிடினும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தையை, மத புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் அடிப்படையில் அமைச்சர் முஜாஹிட் (படம்) ஏற்பாடு செய்துள்ளார்.

“இது தனிப்பட்ட சந்திப்பு. மற்றவர்கள் யாரும் இந்தப் பேச்சு வார்த்தையில் பங்கு கொள்ள மாட்டார்கள். சமாதான அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை முஜாஹிட் எடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி கூறுகிறேன்” என பட்டவொர்த்தில் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொண்ட பின்னர் இராமசாமி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நாம் ஒன்றாகக் கலந்துரையாடி பேச்சு வார்த்தை நடத்தி அதன் மூலம் நமது கருத்து வேறுபாடுகளைக் களைந்து கொள்வது என்பது வரவேற்கத்தக்கதாகும். இதனை நான் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். இத்தகைய சந்திப்புகளின் மூலம் நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது நல்ல அணுகுமுறையாகும். எனவே நான் இதனை வரவேற்கிறேன்” என்றும் இராமசாமி கூறினார்.

எனினும் இந்தச் சந்திப்பில் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் கலந்து கொள்ளமாட்டார் என்றும் இராமசாமி கூறினார்.

தனக்கு எதிராக கொம்தார் வளாகத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த இராமசாமி, “தற்போது பின்பற்றப்படும் வெளிப்படைத் தன்மை வாய்ந்த அரசியல் சூழ்நிலையில் இது சாதாரணமான ஒன்றுதான். அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்” என்றார்.

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கடந்த வாரம் தனது வாக்குமூலத்தைக் காவல் துறையிடம் வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்ட இராமசாமி தனக்கு இதுவரையில் மிரட்டல்கள் எதுவும் வரவில்லை என்றும் அவ்வாறு வந்தால் அதுகுறித்து காவல் துறையிடம் புகார் செய்வேன் என்றும் மேலும் கூறியிருக்கிறார்.