Home நாடு நஜிப் மீது 3 புதிய குற்றச்சாட்டுகள்

நஜிப் மீது 3 புதிய குற்றச்சாட்டுகள்

1376
0
SHARE
Ad
நஜிப் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மேலும் 3 புதிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை காலை கோலாலம்பூர் நீதிமன்றம் வந்தடைந்தார். ஏற்கனவே நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நஜிப் மீது கொண்டு வரப்படும் புதிய குற்றச்சாட்டுகள் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட கள்ளப் பண பரிமாற்றம் தொடர்புடையவை ஆகும்.

ஜாலான் டூத்தாவில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) கள்ளப் பண பரிமாற்றம் மற்றும் அம்லா எனப்படும் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் சட்டம் ஆகியவை (Anti-Money Laundering, Anti-Terrorism Financing, and Proceeds of Unlawful Activities Act 2001) தொடர்பில் மேலும் 3 புதிய குற்றச்சாட்டுகளை ஊழல் தடுப்பு ஆணையம் நஜிப் மீது சுமத்தியுள்ளது.

ஏற்கனவே நஜிப் மீதிலான 4 குற்றச்சாட்டுகளைப் போன்றே இந்தப் புதிய குற்றச்சாட்டுகளும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, ஒரே நீதிபதியின் கீழ் ஒன்றாக விசாரிக்கப்படும்.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஜாலான் டூத்தாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் பயிற்சி மையத்திற்கு (அகாடமி) நஜிப் வரவழைக்கப்பட்டு, புதிய குற்றச்சாட்டுகள் தொடர்பிலான அறிவிக்கைகள் அவரிடம் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

1எம்டிபி நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் நடைபெற்ற 42 மில்லியன் ரிங்கிட் பணப் பரிமாற்றம் தொடர்பில் 3 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளையும், நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் என்ற முறையில் அதிகார வரம்பு மீறலுக்கான ஒரு குற்றச்சாட்டையும் ஏற்கனவே நஜிப் எதிர்நோக்கியிருக்கிறார்.

இன்று கொண்டுவரப்படவிருக்கும் புதிய குற்றச்சாட்டுகளும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்புடையவையாகும்.

இந்தப் புதிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 5 மில்லியன் ரிங்கிட் அபராதம், அல்லது 5 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.