Home கலை உலகம் திரைவிமர்சனம்: எப்படி இருக்கிறது விஸ்வரூபம்-2?

திரைவிமர்சனம்: எப்படி இருக்கிறது விஸ்வரூபம்-2?

813
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மற்ற இயக்குநர்களின் கைவண்ணத்தில் பிரமாதமாக ஒளிரும் கமல்ஹாசன் சொந்தமாக எழுதி இயக்கும் படங்களில் எல்லாம் கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனமாக எதையாவது செய்து சொதப்புவார். விஸ்வரூபம்-2 படமும் அப்படியே!

கமலின் ஒவ்வொரு படத்திலும் அவரது சொந்தத் திறனை ஏதாவது ஒரு கோணத்தில் வெளிப்படுத்துவார். அல்லது வித்தியாசமான ஒப்பனையும், உடல் மொழியும் கூடிய ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவார். இரண்டுமே இதில் இல்லாதது பெரிய குறை.

படம் முழுக்க கமல் பேசிக் கொண்டே இருக்கிறார். அல்லது சண்டை போடுகிறார். கமலை ஏதாவது ஒரு வித்தியாச கோணத்தில் எதிர்பார்த்து வருபவர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.

#TamilSchoolmychoice

விஸ்வரூபம் முதல் பாகத்தில் கதக் நடனக் கலைஞராக நம்மை ஈர்த்தார் கமல். கதையும், துப்பறியும் அதிகாரி, அணு ஆயுதக் கிடங்கை அழிக்க வில்லன் குறிவைப்பது, அல் கைடா பயங்கரவாத இணைப்பில் கதாநாயகன் உளவாளியாக இணைவது எனப் புரியும்படி வைத்திருந்தார்கள்.

ஆனால், இந்த இரண்டாம் பாகத்திலோ படம் முழுக்க உளவாளிகள் பேசிக் கொண்டே இருக்கும் பல விஷயங்கள் கோலாலம்பூரில் இருக்கும் நமக்கும் எட்டவில்லை – தமிழ்நாட்டு கிராமங்களில் படம் பார்ப்பவர்களையும் எட்டியிருக்காது என்பது நிச்சயம்!

இலண்டன் தேம்ஸ் நதி – கடலுக்கு அடியில் வெடிகுண்டு – என்றெல்லாம் அவர்கள் சொல்லும் விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் திரைக்கதைக்குத் தேவையில்லாத ஒன்று. அந்தக் கடலுக்கடியில் நடக்கும் தேடுதல்கள் எல்லாம் 1960-ஆம் ஆண்டுகளிலேயே ஜேம்ஸ்பாண்ட் படத்தில் விலாவாரியாக ஏற்கனவே காட்டி விட்டார்கள். கதைக்கு ஒட்டாத அந்தப் பகுதியை அப்படியே வெட்டித் தூக்கியிருந்தாலும் கூட படத்தின் விறுவிறுப்பு மேலும் கூடியிருக்கும்.

கமலின் மனைவியாக வரும் பூஜா குமார்

இரண்டு அழகான கதாநாயகிகள் அண்ட்ரியா – பூஜா குமார் இருந்தும் கமல் தனது வழக்கமான காதல் காட்சிகளை வைக்காதது இரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்! அரசியல் ஈடுபாட்டால் தவிர்த்திருக்கிறாரா? தெரியவில்லை.

அம்மாவாக நீண்ட நாட்களுக்குப் பிறகு வரும் பிரபல இந்தி நடிகை வகிதா ரஹ்மான் ஞாபக மறதி நோயால் பீடிக்கப்பட்டவராக சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

படம் மெதுவோட்டமாகச் செல்கிறது. பல காட்சிகளின் முடிவுகள் நமக்கு முன்பே புரிந்து விடுவதால், படத்தில் அடுத்த என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு இல்லை. உதாரணமாக காரில் பேசிக் கொண்டே செல்லும்போதே எதிரில் வரப்போகும் ஒரு கார் தாக்கப் போகிறது என்பது தெரிகிறது. அதே போல, இறுதிக்காட்சிகளில் பூஜா குமாரைக் கடத்துவதும் பழைய பாணி என்பதால் சுவாரசியமாக இல்லை.

ஆனால், சும்மா சொல்லக்கூடாது – சண்டைக் காட்சிகளும், இராணுவத் தாக்குதல்களும், ஹெலிகாப்டர் வழி குண்டுகள் பொழிவதும் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக தத்ரூபமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

விஸ்வரூபம் -2 இன்னொரு விதத்தில் தனித்து நிற்கிறது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட படத்தைக் குழப்பமில்லாமல், இரண்டு படங்களின் திரைக்கதைகளையும் இரசிகர்களுக்கு புரியும்படி இணைத்திருப்பது – ஒரே கதையை இரண்டாகப் பிரித்து எடுத்திருப்பது – என்பதெல்லாம் கமலின் திறமைக்கும் அனுபவத்துக்கும் சான்று.

ஆனால், கமல் முதல் விஸ்வரூபம் படத்தில் காயம்பட்டு போட்ட பிளாஸ்டர், அவர் நியூயார்க்கிலிருந்து இலண்டன் சென்று, தமிழ்நாட்டுக்கு திரும்பினாலும் அப்படியே அதே அளவில் முகத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை இரசிக்க முடியவில்லை.

திரைக்கதையின் ஊடே முஸ்லீம் பயங்கரவாதம் – அவர்களின் அரசியல் – மாற்று வழி என்ன – என்பதையெல்லாம் கமல் நாசூக்காக, யாரையும் புண்படுத்தாமல் கையாண்டிருக்கிறார். பயங்கரவாதத்தை இறுதிவரைக் கைவிடாத ஒமார் குடும்பத்தின் கிளைக் கதை – உருக்கமும் நெகிழ்ச்சியும் கலந்தது! திரைக்கதையின் இடையிடையே அரசாங்க அதிகார மீறல்களையும், அரசியல்வாதிகளையும் சாடும் காட்சிகளும் ஆங்காங்கே உண்டு.

படத்தின் துவக்கத்திலேயே கமலின் ‘மய்யம்’ அரசியல் பயணத்தை சில நிமிடங்களுக்குக் காட்டுகிறார்கள்.

அதிக எதிர்பார்ப்புகள் இன்றி அரங்கில் அமர்ந்தால் படத்தை இரசிக்கலாம், சில அம்சங்களுக்காக – அவ்வளவுதான்!

-இரா.முத்தரசன்