Home கலை உலகம் விஸ்வரூபம்-2 : கமலை வீழ்த்திய பிக் பாஸ் ஜோடி!

விஸ்வரூபம்-2 : கமலை வீழ்த்திய பிக் பாஸ் ஜோடி!

1049
0
SHARE
Ad

சென்னை – மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம்-2 திரைப்படம் கமல்ஹாசனுக்கு பலத்த தோல்வியை வசூல் ரீதியாகவும், ஆதரவு நிலையிலும் தோற்றுவித்திருக்கிறது. பல மாவட்டங்களில் இந்தப் படம் சில காரணங்களால் வெளியிடப்படவே இல்லை.

இந்தி, தெலுங்கு மொழிகளின் விஸ்வரூபம்-2 பதிப்புகளும் போதிய ஆதரவைப் பெறவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விஸ்வரூபம்-2 படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட முடியாமல் படம் முடங்கிக் கிடந்த போதுதான், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பு கடந்த ஆண்டு கமலுக்குக் கிடைத்தது. அதன் மூலம் அவருக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வருமானமும் கிடைத்தது. கமலுக்கு 15 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாகவும், அந்தப் பணத்தைக் கொண்டுதான் அவர் விஸ்வரூபம்-2 படத்தை முடித்து திரையிட்டதாகவும் ஆரூடங்கள் கூறப்பட்டன.

#TamilSchoolmychoice

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் கமல் கடந்த ஆண்டு நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்தவர்கள் புதுமுக நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் மாடல் அழகி ரெய்சா ஆகிய இருவரும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் நடிக்க புதிய படம் ஒன்றைத் தனது இசையமைப்பில் தயாரிப்பதாக அறிவித்தார் யுவன் ஷங்கர் ராஜா.

“பியார் பிரேமா காதல்” என்ற அந்தப் படம்தான் கமலின் விஸ்வரூபம்-2 படத்தை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.

பியார் பிரேமா காதல் – படமும் விஸ்வரூபம் 2 படமும் ஒரே நாளில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகின. ஆரம்ப நாட்களில் இரண்டு படங்களில் விஸ்வரூபம் படத்திற்குத்தான் அதிகமாக காட்சிகள் திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டன. ஆனால் அடுத்த மூன்றே நாட்களில் விஸ்வரூபத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரத் தொடங்க, இரசிகர்கள் கூட்டம் பியார் பிரேமா காதல் நோக்கி திரண்டனர்.

இதன் காரணமாக, பியார் பிரேமா காதல் படத்திற்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டு, விஸ்வரூபம் படத்திற்கான காட்சிகள் குறைக்கப்பட்டன.

போதாக் குறைக்கு, நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் கோலமாவு கோகிலா திரைப்படம் நாளை ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியாகிறது. இரசிகர்களிடையே நயன்தாராவுக்கு இருக்கும் மோகத்தையும், ஈர்ப்பையும் சொல்லத் தேவையில்லை. இதனால் நாளை தமிழகத்தின் திரையரங்குகளில் கோலமாவு கோகிலா படத்திற்கான காட்சிகளே ஆக்கிரமிக்கின்றன. இதனாலும் விஸ்வரூபம் படத்திற்கான காட்சிகளும் குறைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் பியார் பிரேமா காதல் தொடர்ந்து இரசிகர்களின் ஆதரவுடன் அரங்கம் நிறைந்த காட்சிகளாகத் தொடர்கிறது.

ஆக, கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு ஜோடியும், நயன்தாராவும் இணைந்து, பிக் பாஸ் நாயகன் கமலின் விஸ்வரூபம் -2 படத்தை வீழ்ச்சியடையச் செய்திருக்கிறார்கள் என்பதுதான் காலத்தின் கோலம்!

-செல்லியல் தொகுப்பு