Home நாடு 100 நாட்களை வெற்றிகரமாகக் கடக்கிறது பக்காத்தான் அரசு

100 நாட்களை வெற்றிகரமாகக் கடக்கிறது பக்காத்தான் அரசு

826
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய அரசியலைப் புரட்டிப் போட்ட மே 9 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, புதிதாக அமைக்கப்பட்ட பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் இன்றுடன் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடக்கிறது.

100 நாட்களுக்குள் செய்து முடிப்போம் என வழங்கப்பட்ட சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட முடியாமல் தடுமாறினாலும், பக்காத்தான் தனது ஒட்டுமொத்த சீர்திருத்தக் கொள்கைகளுக்கு ஏற்ப சரியான பாதையில் செல்கிறது என்பதுதான் பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ஜிஎஸ்டி ஒழிப்பு, நாடாளுமன்ற நடைமுறைகளில் மாற்றம், பொய்ச் செய்தி சட்டம் இரத்து, பிடிபிடிஎன் கடனாளி மாணவர்கள் கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கம், 1 எம்டிபி ஊழல் விசாரணைகள் என சில முக்கிய சீர்திருத்தங்களை பக்காத்தான் அரசாங்கம் முனைப்புடன் செயல்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

“நாங்கள் அரசாங்கத்தின் நிலைமையைக் கருத்தில் கொண்டு சில வாக்குறுதிகளை வழங்கியது உண்மைதான். ஆனால் அரசாங்கத்தை அமைத்தவுடன் உள்ளே நுழைந்து பார்த்தால் நமது அரசு செயல்பாடு சீர்கெட்டும், ஊழல் பெருமளவில் மலிந்தும், நிதி நிலைமை மோசமான அளவிலும் இருப்பதால் எங்களால் உடனடியாக அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. எனினும் தொடர்ந்து அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்வோம்” எனப் பிரதமர் கூறியிருக்கிறார்.

இந்தியர்களுக்குக் கிடைத்தது என்ன?

இந்தியர்களைப் பொறுத்தவரை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு 4 முழு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே ஒரு துணையமைச்சர்தான் என்ற நெருடல் இருந்தாலும், இதுவரையில் இரண்டு மாநிலங்களில் (பினாங்கு, நெகிரி செம்பிலான்) இரண்டு இந்தியர்கள் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

கூடுதலாக நெகிரி மாநிலத்தின் துணை சபாநாயகராகவும் இந்திய சட்டமன்ற உறுப்பினர் நியமனம் பெற்றிருக்கிறார்.

60 வயதுக்கு மேற்பட்ட – சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கும் – மலேசியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற மகாதீரின் அறிவிப்பின் மூலம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் குடியுரிமை பெறுவார்கள்.

எனினும், எஞ்சிய இந்திய விண்ணப்பதாரர்களுக்கு உதவும் பொருட்டு குடியுரிமைக்கான விதிமுறைகள் எளிமையாக்கப்படும், தளர்த்தப்படும் என பிரதமர் துறையின் அமைச்சர் பொ.வேதமூர்த்தியும் அறிவித்திருக்கிறார்.

செடிக் எனப்படும் இந்தியர்களுக்கான சமூக, பொருளாதார உருமாற்றத்திற்கான அமைப்புக்கு வேதமூர்த்தி பொறுப்பேற்று நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்.

எனினும், சில ஏமாற்றங்களும், சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. பக்காத்தான் அரசாங்கம் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றி, மக்களின் மனங்களில் இடம் பெற்றுவிடக் கூடாது – பக்காத்தான் அரசாங்கம் ஆழ வேரூன்றி விடக் கூடாது என்ற முனைப்பில் அம்னோ, பாஸ் மற்றும் தேசிய முன்னணியின் மசீச, மஇகா கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

சில பின்னடைவுகள் இருந்தாலும், முடிந்திருக்கும் 100 நாட்களில் மலேசிய அரசாங்கம் தட்டுத் தடுமாறியாவது சரியான, புதிய பாதையில், முறையான உருமாற்றங்களுடன் தனது பயணத்தைத் தொடக்கியிருக்கிறது என்பதுதான் பெரும்பாலான பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.

-இரா.முத்தரசன்