Home நாடு செல்லியல் பார்வை: அன்வார் போர்ட்டிக்சனைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

செல்லியல் பார்வை: அன்வார் போர்ட்டிக்சனைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

596
0
SHARE

கோலாலம்பூர் – நாட்டின் எந்த மூலையில் உள்ள நாடாளுமன்றத் தொகுதியில் நின்றாலும் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் – தனக்காகத் தங்களின் நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுக்க பல பிகேஆர் கட்சித் தலைவர்கள் முன்வந்தபோதிலும் – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் தொகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து ஏன்?

மேலோட்டமாகவோ, அவசர கதியிலோ எடுக்கப்படாமல், ஆழ்ந்த கலந்தாலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகவே அன்வாரின் “போர்ட்டிக்சன் நகர்வு” பார்க்கப்படுகிறது. அதே வேளையில் நடப்பு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் மனம் நோகச் செய்யாமல், அவர்களின் அரசியல் கனவுகளை சிதைக்காமல் எடுக்கப்பட்ட முடிவாகவும் இது பார்க்கப்படுகின்றது.

என்னதான் பலரும் பகிரங்கமாக அன்வாருக்காக நாடாளுமன்றத் தொகுதியை விட்டுத் தருகிறேன் என்று கூறினாலும், அரசியலில் அத்தகைய முடிவை எடுப்பதற்கு ஓர் அரசியல்வாதி எந்த அளவுக்கு கவலைப்படுவார், இழப்பாகக் கருதுவார் என்பதை விளக்கிக் கூறத் தேவையில்லை.

இன்றைக்கு பிகேஆர் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் பலர் பல ஆண்டுகாலமாக கட்சியில் போராடி – அரசியல் களத்தில் போராடித்தான் – அந்த நிலையை அடைந்தார்கள். எனவே, அத்தகையவர்களை மனம் நோகாமல் – அவர்களை அரசியல் ரீதியாக காயப்படுத்தாமல் – அவர்களின் அரசியல் பயணத்தில் பின்னடைவை ஏற்படுத்தாமல் – ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கவனமும், சிந்தனையும் அன்வார் தரப்பில் இருந்திருப்பது இன்று அறிவிக்கப்பட்ட முடிவில் நன்கு வெளிப்படுகின்றது.

எனவேதான், 14-வது பொதுத் தேர்தலின்போது இறுதி நேரத்தில் – இன்னும் சொல்லப் போனால் – முதல் நாள் இரவோடு இரவாக – போர்ட்டிக்சன் தொகுதிக்குப் போட்டியிட பிகேஆர் கட்சியால்  தேர்ந்தெடுக்கப்பட்ட டேன்யல் பாலகோபால் அப்துல்லா தொகுதியை விட்டுக் கொடுக்க அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

14-வது பொதுத் தேர்தலில் யார் இவர் என எல்லோரும் கேள்வி கேட்கும் அளவுக்கு புதியவராக – பிகேஆர் கட்சி வட்டாரங்களுக்கே தெரியாதவராக இருந்தவர் டேன்யல் பாலகோபால் அப்துல்லா. கட்சியிலும் எந்த முக்கியப் பொறுப்பிலும் இல்லாதவர். எனவேதான், அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகச் சொன்னால் அதனால் மிகக் குறைந்த அளவிலேயே உட்கட்சி சலசலப்பும், அதிர்வுகளும் ஏற்படும் என்பதும் பிகேஆர் தலைமைத்துவத்தால் கணிக்கப்பட்டிருக்கின்றது.

காரணம், அன்வாரின் மனைவி – மகள் – இருவரில் ஒருவர் நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுக்கலாமே – ஏன் மற்றவர்களை வற்புறுத்த வேண்டும் என்ற எண்ண ஓட்டங்களும், மறைமுகத் தாக்குதல்களும் பிகேஆர் கட்சியில் ஊடுருவி இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. போர்ட்டிக்சனில் அன்வார் தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர், அவரது குடும்பத்தில் இருந்து மட்டும் 3 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஒரே நேரத்தில் அமர்ந்திருக்கும் வரலாறு படைக்கப்படும் என்றாலும் ஒரே குடும்பத்தின் ஆதிக்கம் என அதை ஒரு குறையாக ஒரு சிலர் சுட்டிக் காட்டுவதும் தொடரும்.

பெரும்பான்மை வாக்குகள் இன்னொரு காரணம்

முன்பு குறிப்பிட்டதைப் போல, யார் என்றே தெரியாத டேன்யல் அப்துல்லா – அதிலும் பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர் – வேட்புமனுத் தாக்கலுக்கு முதல் நாள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டவர் – முதன் முறையாகப் போட்டியிட்டு – 17,710 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றதும் அன்வார் போர்ட்டிக்சனைத் தேர்ந்தெடுத்ததற்கான மற்றொரு காரணமாக இருக்கலாம்.

NEGERI NEGERI SEMBILAN
Parlimen P.132 – PORT DICKSON
PARTI MENANG PKR
MAJORITI UNDI 17710
NAMA PADA KERTAS UNDI BIL. UNDI
USTAZ MAHFUZ ROSLAN (PAS) 6594
DATO DANYAL (PKR) 36225
DATO VS MOGAN (BN) 18515

பாஸ் கட்சி இங்கே போட்டியிட்டாலும் 6,594 வாக்குகளை மட்டுமே அந்தக் கட்சி பெற்று தோல்வி கண்டது. எனவே தேசிய முன்னணி – பாஸ் – இரு கட்சிகளின் மொத்த வாக்குகளைச் சேர்த்தாலும் கூட அவர்களை விட பிகேஆர் இங்கே 11,116 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இந்த முறை அன்வார் இப்ராகிம் என்ற நட்சத்திர வேட்பாளர் களம் காணும்போது பெரும்பான்மை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், கடந்த முறை இங்கே போட்டியிட்டது மஇகா! ஆனால் இந்த முறை மீண்டும் மஇகா வேட்பாளர் நிறுத்தப்படுவாரா அல்லது போர்ட்டிக்சன் அம்னோவுக்கு விட்டுக் கொடுக்கப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை. எனவே, இந்தக் குழப்பமும் பிகேஆர் கட்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் காலூன்ற இன்னொரு வாய்ப்பு

பினாங்கு மாநிலத்தின் பெர்மாத்தாங் பாவ், நிபோங் திபால் போன்ற தொகுதிகள் ஏற்கனவே பிகேஆர்-ஜசெக கட்சிகளின் ஆதரவில் – ஆதிக்கத்தில் – நிலைநிறுத்தப்பட்டுவிட்ட தொகுதிகள். அதேபோல் பாண்டான் தொகுதியும், ஏற்கனவே பிகேஆர் சிலாங்கூரில் வலுவாகத் தடம் பதித்துவிட்ட பிகேஆர் கட்சியின் ஆதிக்கத்தில் இருக்கிறது. பினாங்கு, சிலாங்கூர் இரண்டு மாநிலங்களும் தொடர்ந்து இரண்டு முறை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றிய மாநிலங்கள்.

ஆனால், நெகிரி செம்பிலான் இந்த முறைதான் பக்காத்தான் கூட்டணியால் முதன் முறையாகக் கைப்பற்றப்பட்ட மாநிலம். எனவே, அன்வார் அந்த மாநிலத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட்டுக் கைப்பற்றுவதன் மூலம் அந்த மாநிலத்தையும் தொடர்ந்து பக்காத்தான் கூட்டணி தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதும் பிகேஆர் கட்சியின் இன்னொரு வியூகமாக இருக்கலாம்.

வாக்காளர் விழுக்காடும் ஒரு காரணம்

பிகேஆர் கட்சி நாடு முழுமையிலும் வென்று வந்துள்ள தொகுதிகளைக் கணக்கிட்டால், எல்லா இன வாக்காளர்களும் சரியான விகிதத்தில் கலவையாக இருக்கும் தொகுதிகளில்தான் அந்தக் கட்சி மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறது என்பதைக் காண முடியும்.

அதற்கேற்ற வகையில், போர்ட்டிக்சன் 55 விழுக்காடு மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களைக் கொண்டிருக்கிறது. 43 விழுக்காடு மட்டுமே மலாய்க்காரர்கள். எஞ்சியவர்களில் 33 விழுக்காடு சீனர்கள், இந்தியர்கள் 22 விழுக்காடு.

எனவே, போர்ட்டிக்சனில் அன்வாரின் ஆதரவுத் தளம் என்பது இனரீதியான வாக்காளர் அடிப்படையிலும் எப்போதும் வலுவுடன் திகழும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இவ்வாறாக, பல்வேறு அரசியல் காரணங்கள் – உட்கட்சி சலசலப்புகள் – இடைத் தேர்தல் வியூகங்கள் – நடப்பு சூழ்நிலைகள் – என பல்வேறு முனைகளில் சிந்திக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவாகத்தான் அன்வாரின் ‘போர்ட்டிக்சன் நகர்வு’ திட்டம் பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்

Comments