Home 13வது பொதுத் தேர்தல் சிலாங்கூர் மாநிலத்தில் அன்வார் போட்டி?

சிலாங்கூர் மாநிலத்தில் அன்வார் போட்டி?

492
0
SHARE
Ad

Anwar-Ibrahim-300x202கோலாலம்பூர், மார்ச் 30-  எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் பொதுத்தேர்தலில் தனது நீண்ட நாளைய தொகுதியான பெர்மாத்தாங் பாவ் தொகுதியிலிருந்து மாறி சிலாங்கூர் மாநிலத்தில் களம் இறங்கவிருப்பதாக ஆருடங்கள் வலுத்து வருகின்றன.

பிகேஆர் கட்சியின் இன்றைய வளர்ச்சிக்கும், கடந்த கால தொடர் வெற்றிகளுக்கும் உறுதுணையாக இருந்தது  சிலாங்கூர் மாநிலத்தை அக்கட்சி 2008இல் கைப்பற்றி ஆட்சி செய்ததுதான்.

இதன் மூலம், நாட்டின் மிகப் பெரிய செல்வ வளம் கொழிக்கும் முன்னணி மாநிலத்தைக் கைப்பற்றி அம்னோவின் செல்வாக்கை நொறுங்கச் செய்ததுடன் மக்கள் கூட்டணியின் மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒரு முன்னோடி மாநிலமாகவும் சிலாங்கூரை பிகேஆர் கட்சியினால் மாற்றிக் காட்ட முடிந்தது.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக, அம்னோவும், தேசிய முன்னணியும் பிரதமர் நஜிப்பின் நேரடித் தலைமையில் சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அன்வாரும் இதனைக் கருத்தில் கொண்டு, அவரே நேரடியாக சிலாங்கூர் மாநில பொதுத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் களமிறங்க முடிவு செய்துவிட்டார்.

பெர்மாத்தாங் பாவ் பாதுகாப்பான தொகுதி

அன்வாரின் தற்போதைய தொகுதியான பினாங்கு மாநிலத்தின் பெர்மாத்தாங் பாவ் தொகுதி பிகேஆர் கட்சிக்கு பாதுகாப்பான தொகுதி என்பதோடு, அங்கு அவரது மகன் அல்லது இரண்டாவது மகளை நிறுத்துவதன் மூலம் அந்த தொகுதியை மீண்டும் எளிதாக தக்க வைத்துக் கொள்ள முடியும் என பிகேஆர் கட்சி முடிவு செய்துள்ளது.

அதே வேளையில் ஜசெக மற்றும் அதன் பொதுச் செயலாளர் லிம் குவான் எங்கின் தலைமைத்துவம் காரணமாக அந்த மாநிலத்தை மக்கள் கூட்டணி மீண்டும் கைப்பற்றுவதிலும் சிரமம் ஏதும் இருக்கப் போவதில்லை.

எனவே, சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அங்கு நேரடியாக ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்தின் மற்ற தொகுதிகளிலும் அன்வார் சுலபமாக பயணம் செய்து பிரச்சாரம் செய்ய முடியும். வாக்காளர்களை சந்திக்கவும் முடியும்.

இதனைத் தொடர்ந்து காப்பார், சுபாங், சிப்பாங், கோல லங்காட் போன்றவை  அன்வார் போட்டியிடக் கூடிய தொகுதிகளாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.