Home கலை உலகம் திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்

திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்

827
0
SHARE

கோலாலம்பூர் – இத்தனை முன்னணி நட்சத்திரங்களையும் ஒரே படத்திற்குள் கொண்டு வந்து அத்தனை பேருக்கும் சரியான அளவில் (நடிப்புத்) தீனி போட்டு, அதற்கேற்ப திரைக்கதை ஒன்றை வடிவமைத்துத் தர மணிரத்னம் ஒருவரால் மட்டுமே முடியும்.

அந்த அளவுக்கு கண்ணைப் பறிக்கும் நட்சத்திரக் கூட்டம்! அந்த ஒரு காரணத்திற்காகவே, அனைவரும் எந்த விமர்சனத்தையும் படிக்காமல், பார்க்கலாமா என்ற கேள்வியைக் கேட்காமல் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தைப் பார்த்து வைக்கலாம்.

படத்திற்குப் பொருத்தமான பெயர். ஏன் என்பதை இறுதிக் காட்சி வரை உட்கார்ந்து திரையையே பார்த்து வந்தால் புரிந்து கொள்வீர்கள்!

இன்னொரு கோணத்தில் பார்த்தால், அரசியல் தலைவர் ஒருவர் மரணமடைந்து அவருக்குப் பின்னர் கட்சியில் யார் என்ற வாரிசுப் போர் வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ, அதனை அப்படியே உல்டாவாக மாற்றி தாதா கும்பல் ஒன்றின் கோடீஸ்வரத் தலைவன் மறையும்போது எப்படிப்பட்ட போராட்டம் உருவெடுக்கிறது என்பதை தனக்கே உரித்தான பாணியில் நட்சத்திர நடிகர்களின் துணையோடு சொல்லியிருக்கிறார் மணிரத்னம். அவருக்கு வழக்கம்போல் இணைந்து கைகொடுப்பது படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இன்னொரு கையாக உழைத்திருப்பது ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பு (எடிட்டிங்).

படம் முழுக்க,  துரோகம் – அதிகாரத்தையும், பணபலத்தையும் கைப்பற்றப் போட்டா போட்டி, அதற்காக அண்ணன் தம்பி என்று பார்க்காமல் எதுவரை வேண்டுமானாலும் செல்வது, எதை வேண்டுமானாலும் செய்வது – எனச் செல்கிறது திரைக்கதை.

இவர்களுக்கிடையில் சிக்கிக் கொள்ளும் காவல் துறை அதிகாரியாக வருகிறார் விஜய் சேதுபதி. படத்தின் இறுதியில் இவர்தான் உயர்ந்து நிற்கிறார். ஏன் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்! படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வசனங்களை உச்சரித்து வெளிப்படுத்தும் வகையில் திரையரங்கில் கைத்தட்டல்களை அள்ளுகிறார்கள் விஜய் சேதுபதியும், சிலம்பரசனும்!

அருண் விஜய்யும் குறைவைக்காமல் ஸ்டைலாக நடித்திருக்கிறார் என்றாலும், “என்னை அறிந்தால்” படத்தில் விக்டரை மீண்டும் பார்க்கும் பிரதிபலிப்பு போல் தோன்றுகிறது.

படம் முழுக்க நடிப்பில் அசத்தியிருப்பவர் அரவிந்த்சாமிதான். வரதன் என்ற கோபக்கார மூத்த மகனாக, ஆக்ரோஷம்,அன்பு, கோபம், துரோகம்,பழிவாங்குதல், ஏமாற்றம், காதல், காமம், கட்டுமஸ்தான உடலோடு சண்டைகள் என நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் ஒருசேர எடுத்துக் காட்டும் கதாபாத்திரம். பின்னி எடுத்திருக்கிறார்.

குண்டடிபட்டு ஜோதிகா படுத்திருக்கும் நிலையில் அரவிந்த் சாமி உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடந்தது என்ன என்பதை விவரிக்கும் காட்சியில் கைத்தட்டல்கள் வாங்குகிறார்.

அவருக்கேற்ற பொருத்தமான ஜோடி ஜோதிகா. நல்ல மருமகள், பாசம் மிக்க தாய், கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி என இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

ஆனால், அரவிந்த்சாமிக்கும், ஜோதிகாவுக்கும் இடையில் அவ்வளவு காதல் என்று காட்டிவிட்டு, பின்னர் அரவிந்த்சாமியின் இரண்டாவது காதல் மனைவி அதிதி ராவை நேரில் பார்த்தும் ஒன்றுமே நடக்காதது போல் ஜோதிகா அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வதும், மனைவிக்குத் தெரிந்த பின்னரும் சாதாரணமாக அரவிந்த்சாமி அந்த சம்பவத்தைக் கடந்து போவதும் நம்ப முடியாத நெருடல்.

பிரகாஷ் ராஜ் வழக்கம்போல் கம்பீரமான தந்தை கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

இவர்கள் அனைவரையும் – அத்தனை கதாபாத்திரங்களையும் – இறுதிக் காட்சிகளில் உண்மையில் நடந்தது என்ன என்பதை விவரித்து முடிச்சுப் போட்டு படத்தை முடிக்கும் இடத்தில் மணிரத்னம் தனது திறமையை நிரூபித்து உயர்ந்து நிற்கிறார்.

படத்திற்கு துணை நிற்கும் இன்னொரு அம்சம் – சொல்லவே வேண்டியதில்லை, ஏ.ஆர்.ரஹ்மானின் மிரட்டலான பின்னணி இசை! ஆனால் பாடல்கள் அந்த அளவுக்கு மனதில் நிற்கவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மெர்சலில் போட்ட ‘ஆளப் போறான் தமிழ்’ போன்று அசத்தலான பாடல் எதுவும் இல்லை. சில பாடல்கள் துண்டு துண்டாக இடையிடையே ஒலிப்பதும் மனதில் நிற்காமல் போவதற்கான காரணமாக இருக்கலாம்.

கவர்ச்சிக்கு ஒரு பக்கம் அதிதி ராவும், இன்னொரு பக்கம் சிம்புவின் காதலியாக வரும் டயானா எரப்பாவும் படத்திற்கு உதவியிருக்கின்றனர்.

படத்தின் முக்கால் பாதியில் தேவையில்லாத நீண்ட போராட்டமாக இருக்கிறதே என நாம் சலிப்படையும் நேரத்தில் ஏன் அப்படியெல்லாம் நடந்தது என்பதை நடந்து முடிந்த சம்பவங்களோடு முடிச்சுப் போட்ட இடத்தில் மணிரத்னம் தனது இருப்பைக் காட்டியிருக்கிறார்.

செக்கச் சிவந்த வானம் – பார்த்து இரசிக்க வேண்டிய அழகிய வானம்!

– இரா.முத்தரசன்

Comments