Home நாடு ஹாஜி தஸ்லிம், சீனி நைனா முகம்மது பெயரில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு விருது

ஹாஜி தஸ்லிம், சீனி நைனா முகம்மது பெயரில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு விருது

2131
0
SHARE
Ad

கமுந்திங் – காலஞ்சென்ற சமுதாயச் சுடர் டத்தோ ஹாஜி தஸ்லிம் மற்றும் உங்கள் குரல் ஆசிரியர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது ஆகிய இருவரும் சமுதாயத்திற்கு ஆற்றியுள்ள சேவைகளை என்றென்றும் நினைவுகூரும் வகையில் அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு விருது வழங்கப்பட வேண்டும் என டத்தோ ஹாஜி தஸ்லிம் குடும்ப நண்பரும் தகவல் அதிகாரியுமான க.அப்துல் ஜபார் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 30-ஆம் நாள் பேராக், கமுந்திங்கில் உள்ள சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த டத்தோ ஹாஜி தஸ்லிம் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது க.அப்துல் ஜபார் இவ்வாறு தெரிவித்தார். டத்தோ ஹஜி தஸ்லிம் பல தமிழ்ப்பள்ளிகளைத் தத்தெடுத்து தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மேம்பாட்டுக்கும் பல உதவிகள் செய்தவர். அந்தப் பணிகளில் அவரோடு அணுக்கமாக இருந்து செயல்பட்டவர் க.அப்துல் ஜபார் என்பது குறிப்பிடத்தக்கது,

எனவே, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்திருக்கும் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் அமைப்பாளர் சுப.சற்குணன் இந்த விருது தொடர்பாகத் திட்டமிட்டு ஆவன செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

“டத்தோ ஹாஜி தஸ்லிம் மற்றும் கவிஞர் சீனி நைனா முகம்மது ஆகிய இருவரும் தமிழுக்காகவும் தமிழ்ப் பள்ளிகளுக்காகவும் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்கள். அவர்களின் சேவைகளைத் தமிழ் மாணவர்களும் பொது மக்களும் தொடர்ந்து நினைவில் கொள்ள வேண்டும். இவர்களைப் போன்ற சமுதாய உணர்வாளர்களும் தமிழ்ப் பற்றாளர்களும் உருவாகுவதற்கு இவர்கள் பெயரில் விருதுகள் வழங்குவது மிகப் பொருத்தமாக இருக்கும்” என்றாரவர்.

இதன் தொடர்பாகப் பேசிய பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான அமைப்பாளர் சுப.சற்குணன் தாம் இதற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் இதற்கான அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார்.

“டத்தோ ஹாஜி தஸ்லிம், கவிஞர் சீனி நைனா முகம்மது இருவரும் மதங்கடந்த நிலையில் தமிழுக்கு ஆற்றியுள்ள சேவைகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த நாம் அவர்களின் நற்சேவைகளை நன்றியோடு நினைத்துப் போற்றிட வேண்டும். அவர்களின் பெயரை வரலாற்றில் நிலைபெறச் செய்தால்தான் எதிர்காலச் சமுதாயம் அவர்களை நினைவில் வைத்திருக்கும்” என்று சுப.சற்குணன் மேலும் கூறினார்.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் நாகராஜா தலைமையுரை ஆற்றினார். முன்னாள் தலைமையாசிரியர் பொன்.சிவரத்தினம், வாரியக்குழுத் தலைவர் பூங்காவனம் ஆகியோர் டத்தோ ஹாஜி தஸ்லிம் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் டத்தோ ஹாஜி தஸ்லிமின் துணைவியார், முன்னாள் தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள், வாரியக் குழுவினர், பேரா மாநிலத் தலைமையாசிரியர்கள், இயக்கப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என சுமார் இருநூறு பேர் கலந்து கொண்டனர்.