Home நாடு டிஸ்லெக்சியா: “உருமாற்றத்திற்கு மேலும் அதிகமான நடவடிக்கைகள் தேவை” – முல்லை இராமையா கூறுகிறார்

டிஸ்லெக்சியா: “உருமாற்றத்திற்கு மேலும் அதிகமான நடவடிக்கைகள் தேவை” – முல்லை இராமையா கூறுகிறார்

1444
0
SHARE
Ad

கோலாலம்பூர்- இந்த வாரம் முழுவதும் அனைத்துலக டிஸ்லெக்சியா விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டும் உலக டிஸ்லெக்சியா தினம் வியாழக்கிழமை 4 அக்டோபர் 2018-ஆம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டும் மலேசியாவின் தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் சார்பில் அதன் தலைவர் முனைவர் முல்லை இராமையா (படம்) சிறப்பு பத்திரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மலேசியப் பள்ளிகளில் மாணவர்களிடையே டிஸ்லெக்சியா இருப்பதைக் கருத்தில் கொண்டு அதற்காக மேலும் அதிகமான செயல் நடவடிக்கைகளும் உருமாற்றங்களும் தேவை என்றும் முல்லை இராமையா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையின் முழு வடிவம் பின்வருமாறு: –

#TamilSchoolmychoice

வியாழக்கிழமை அக்டோபர் 4-ஆம் தேதி உலக அளவில் அதிகாரபூர்வ டிஸ்லெக்சியா தினம் அனுசரிக்கப்படுவதையும், இந்த வாரம் முழுமையும் அனைத்துலக டிஸ்லெக்சியா விழிப்புணர்வு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதையும் முன்னிட்டு, மலேசியாவின் தேசிய டிஸ்லெக்சியா இயக்கமும் அந்தக் கொண்டாட்டங்களில் பங்கு பெறுகிறது.

இந்த ஆண்டு கொண்டாட்டங்களுக்கான கருப்பொருள் ‘உருமாற்றத்திற்கான தேவைகள்’ என்பதாகும்.

மலேசியாவில் தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்டது முதல் மலேசியர்களிடையே ஊடகங்கள் வாயிலாகவும் பல்வேறு முனைகளிலும் டிஸ்லெக்சியா குறித்த விழிப்புணர்வை இந்த இயக்கம் ஏற்படுத்தி வந்துள்ளது.

நாட்டில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகளில் டிஸ்லெக்சியா பாதிப்பினால் கற்றல் குறைபாடு கொண்ட மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்குவதிலும், அந்தக் குறைபாடுகளுக்குத் தீர்வு காண்பதிலும் தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் தீவிரமாகப் பாடுபட்டு வந்துள்ளது.

இந்த சேவையை மற்றவர்களும் தொடரும் வகையில் டிஸ்லெக்சியா மாணவர்களுக்கு ஒலி வழி கற்பித்தல், மேலும் அவர்களின் நிலைமையை சீர்தூக்கி மதிப்பிடுதல், டிஸ்லெக்சியா மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்குதல் போன்ற அம்சங்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கும் பணிகளிலும் தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் பாடுபட்டு வருகிறது.

டிஸ்லெக்சியா குறித்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களுடன் முல்லை இராமையா

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்காக பல பயிற்சிக் கருத்தரங்குகளை தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் நடத்தியிருக்கிறது.

தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையிலுள்ள ஆசிரியர்களுக்கு டிஸ்லெக்சியா தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கும் சென்னை டிஸ்லெக்சியா இயக்கம், மலேசிய டிஸ்லெக்சியா இயக்கத்திற்கு அழைப்பு விடுத்து, அதன்படி அங்கும் பயிற்சிக் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளும் தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் அணுகுமுறையைப் பின்பற்றி அந்தப் பள்ளிகளின் டிஸ்லெக்சியா மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் முறைகளை செயல்படுத்தியிருக்கின்றன.

டிஸ்லெக்சியா குறித்த பயிற்சி ஒன்றின்போது…

சிங்கப்பூர் கல்வி அமைச்சின் பாடத்திட்ட மேம்பாட்டுப் பிரிவும் மலேசிய டிஸ்லெக்சியா இயக்கத்திற்கு அழைப்பு விடுத்து, அதன் அதிகாரிகளுக்கு பயிற்சிக் கருத்தரங்குகள் நடத்தச் செய்திருக்கிறது. அதே வேளையில் டிஸ்லெக்சியா கற்றல் முறையை பள்ளிகளின் பாடத்திட்ட அமைப்பு முறையிலேயே கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராயவும், அதற்கான ஆலோசனகளை வழங்கவும் மலேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தை  சிங்கப்பூர் கல்வி அமைச்சின் பாடத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

அனைத்துலக அளவிலும் பல கருத்தரங்குகளில் மலேசிய டிஸ்லெக்சியா இயக்கம் பங்கு பெற்றிருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவின் சந்தா கிளாராவில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினருக்கான மாநாட்டில், மலேசிய டிஸ்லெக்சியா இயக்கம் பங்கு பெற்றதோடு, தனது கற்றல், கற்பித்தலுக்கான சாதனங்களை அங்கு அறிமுகப்படுத்தி, அதன்வழி தமிழை இரண்டாவது மொழியாகக் கற்பதில் சிரமப்படும் மாணவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதையும் எடுத்துக் காட்டியது.

எழுத்துபூர்வமாக எழுதப்படும் எழுத்துகளை ஒலிவழியாக அடையாளம் கண்டு கொள்வதில் மிகுந்த சிரமத்தையும், சவாலையும் ஒருவர் எதிர்நோக்கும் நிலைமையைத்தான் டிஸ்லெக்சியா என அழைக்கிறோம். வாசிப்பது, எழுதுவது, எழுத்துக் கூட்டுவது போன்ற அம்சங்களில் அவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே, அவர்களுக்கு பாரம்பரிய முறையில் எழுத்து மூலமாக பாடங்கள் நடத்தப்படுவதில்லை. மாறாக ஒலிவழியாக அவர்களுக்கு மொழிகளும் பாடங்களும் கற்றுத் தரப்படுகின்றன.

டிஸ்லெக்சியா ஒரு குறைபாடாக எப்போதும் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால், டிஸ்லெக்சியா பாதித்த மாணவர்கள் மாற்று முறையில் கல்வி கற்றுக் கொள்கிறார்கள் என்றும் எனவே அவர்களுக்குக் பள்ளிகளில் மொழிகளைக் கற்பிக்க பாரம்பரிய முறைக்கு மாற்றாக, வேறு ஒரு புதிய அணுகுமுறை  தேவைப்படுகிறது என்றும் மலேசிய டிஸ்லெக்சியா இயக்கம் நம்புகிறது.

டிஸ்லெக்சியா மாணவர்கள் எவ்வளவு மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருந்தாலும், கட்டுக்கோப்புடன் வடிவமைக்கப்பட்ட ஒலிவழிக் கற்பித்தல் முறையிலான கற்பித்தலை எளிதாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை மலேசிய டிஸ்லெக்சியா இயக்கம் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளது. டிஸ்லெக்சியா மாணவர்கள் சராசரி அறிவாற்றலையும் (IQ) அல்லது உயர்ந்த அறிவாற்றலையும் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சில பள்ளிகளில் அவர்கள் தவறாக அடையாளப்படுத்தப்படுவதுபோல் அவர்கள் மெதுவாகக் கற்றுக் கொள்பவர்களும் அல்ல. மெதுவாகக் கற்றுக் கொள்பவர்கள் சராசரியை விடக் குறைவான அறிவாற்றலையே கொண்டிருக்கிறார்கள். ஆனால் டிஸ்லெக்சியா மாணவர்களோ முறையான வழியில் கற்பித்தால் அதனை எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள், பாட உள்ளடக்கங்களை நன்கு விளங்கிக் கொள்கிறார்கள் என்பதுடன், மெதுவாகக் கற்றுக் கொள்பவர்களை விட அதி விரைவாக கற்றுக் கொண்டு அதிசயிக்கத்தக்க முறையில் முன்னேற்றம் காண்கிறார்கள் என்பதையும் கண்டிருக்கிறோம்.

டிஸ்லெக்சியா கொண்டிருந்த சில பிரபலங்கள்

தங்களின் பிள்ளைகள் மற்ற சராசரி மாணவர்களைப் போல் ஒரு மொழியை சுலபமாக கற்றுக் கொள்ள முடியாவிட்டால், அதற்கு அவர்களின் சோம்பேறித்தனம், அணுகுமுறை அல்லது பள்ளி வகுப்பில் மோசமான கற்பித்தல் முறைகள் ஆகியவை மட்டும் காரணமாக  இருக்காது. மாறாக, டிஸ்லெக்சியா என்பதுதான் அவர்களின் மையப் பிரச்சனையாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

டிஸ்லெக்சியா என்பது மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தரலாம். அவர்களுக்கு பள்ளிகளிலும், இல்லங்களிலும் நிறைய ஆதரவு தேவைப்படும். அத்தகைய மாணவனின் நிலைமையை ஆசிரியர்களும், பெற்றோர்களும் முழுமையாக உணர்ந்து கொண்டு, அந்த நிலைமையிலிருந்து அந்த மாணவன் மீள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அந்த மாணவனின் உணர்ச்சிபூர்வமான சூழல்தான் மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

பள்ளிகளில், குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் நடைமுறைகளில் மிகப் பெரிய உருமாற்றங்களை செய்யவேண்டிய அத்தியாவசியமானக் காலக்கட்டத்தில் மலேசியா தற்போது இருக்கிறது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் சிறப்புத் தேவைகள் கொண்ட மாணவர்களுக்கான வசதிகள் கொண்ட வகுப்பறைகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஆனால், அத்தகைய வகுப்பறைகளில் கூட, கற்றல் திறன்களில் வெவ்வேறு சவால்களை எதிர்நோக்கும் மாணவர்கள் அனைவரும் ஒரே வகுப்பில் திணிக்கப்படுகின்றனர். ஆட்டிசம் (Autistic) டிஸ்லெக்சியா (dyslexic) மெதுவாகக் கற்பவர்கள் (slow-learning) மற்றும் மூளைச் செயல்பாடு குறைந்த மாணவர்கள், கவனம் செலுத்துவதில் சிரமப்படும் மாணவர்கள், அளவுக்கதிகமாக துடிப்பாக இயங்கும் மாணவர்கள் என பலதரப்பட்ட மாணவர்கள் ஒரே வகுப்பில் இருக்கக் காணலாம். இந்த மாணவர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு வகையான கவன ஈர்ப்பும் கற்றல் முறையும் தேவைப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து மாணவர்களுக்கும் சரிசமமான முறையில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதில் மலேசிய டிஸ்லெக்சியா இயக்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் டிஸ்லெக்சியா மாணவர்களும் தேசிய கல்வி  கற்பித்தல் நடைமுறையின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கும் அத்தகைய கல்வி வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 50 நிமிடங்கள் சிறப்பு நேர வகுப்புகள் – அதுவும் பள்ளிப் பாட நேரத்திலேயே – நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் அவர்களுக்குத் தேவைப்படும் சிறப்புத் தேவைகளுக்கேற்ப கல்வி போதிக்கப்பட வேண்டும். அத்தகைய கல்வி கற்பித்தலை வழங்க அதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும்.

இத்தகைய நடைமுறையைப் பின்பற்றும் சில மேற்கத்திய நாடுகளில் பிரமிக்கத்தக்க முன்னேற்றத்தை டிஸ்லெக்சியா மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

டிஸ்லெக்சியா மாணவர்கள் மற்ற மாணவர்களிடமிருந்து 50 நிமிடங்கள் மட்டும் தனியே பிரிக்கப்பட்டு அவர்களுக்குரிய பாடங்களைக் கற்ற பின்னர் மீண்டும் மற்ற பாட நேரங்களுக்காக சக மாணவர்களுடன் இணைந்து கொள்வர்.

இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுவதால் பெற்றோர்களும் திருப்தியும் மகிழ்ச்சியும் கொள்கின்றனர். காரணம் இதனால் டிஸ்லெக்சியா மீது சமூகம் கொண்டிருக்கும் பார்வையும் சாதகமான முறையில் மாற்றப்படுகிறது.

அந்த டிஸ்லெக்சியா மாணவனின் சுயகௌரவமும் சுயமரியாதையும் கூட இதன் மூலம் நிலைநிறுத்தப்படுகிறது.

தனக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் சிறப்பு வகுப்பில் அந்த மாணவர்கள் பெறுகின்ற கற்பித்தல் முறைகளினால் கிடைக்கும் பலன்கள் மற்ற மாணவர்களுடன் இணைந்து நடத்தப்படும் பொதுவான வகுப்புகளில் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் கற்றல் முறையில் தொடர்ச்சியும், நிலைத்தன்மையும் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

வாசிப்பதும், எழுதுவதும் அனைவருக்குமான ஓர் அடிப்படைத் தேவை என்பதால் டிஸ்லெக்சியாவை நாம் புறக்கணித்துவிட முடியாது.

உலகமெங்கிலும் ஆறு குழந்தைகளில் ஒருவர் ஏதாவது ஒரு வாசிப்புப் பிரச்சனையைக் கொண்டிருக்கிறார் எனவும், பொதுவாக தகுதிவாரியாகப் பிரிக்கப்படாத மாணவர்களைக் கொண்ட எந்தவொரு வகுப்பிலும் சுமார் 20 விழுக்காடு மாணவர்கள் ஏதாவது ஒருவகையிலான வாசிப்புப் பிரச்சனையைக் கொண்டிருக்கின்றனர் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, கல்வி அமைச்சு இதுகுறித்து எவ்வளவு விரைவாக முடியுமோ அந்த அளவுக்கு விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகும்.

பள்ளிகளில் இருந்து பாதியிலேயே கல்வியை நிறுத்தி விட்டு மாணவர்கள் வெளியேறுவதற்கு வறுமை, குடும்பப் பிரச்சனைகள், அரசாங்கத்தால் புறக்கணிப்பு போன்ற பல காரணங்கள் அடிக்கடி கூறப்படுகின்றன. ஆனால், அதில் மாணவனுக்கு ஏதேனும் கல்வி கற்பதில் பிரச்சனை இருந்ததா என்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. மாணவனுக்கு வெளியே இருக்கும் பிரச்சனைகள்தான் அலசப்படுகிறதே ஒழிய, அவனது பிரச்சனைகள் கவனிக்கப்படுவதில்லை.

பள்ளிகளில், குடும்பங்களில், வெளியிடங்களில் நிலவும் சமூக அழுத்தங்கள் காரணமாக ஒரு குழந்தை தனக்குத் தானே ஒரு பிரச்சனையாக உருவெடுக்கக் கூடும் என்பதை மலேசியா உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது.

பள்ளிகளில் மற்ற மாணவர்கள் சர்வ சாதாரணமாக செய்யக் கூடிய வாசித்தல், எழுதுதல் போன்ற அடிப்படைத் திறன்களை கையாள முடியாமல் தன்னம்பிக்கையையும், சுயகௌரவத்தையும் இழக்கும் ஒரு மாணவன், அந்த மன அழுத்தம் தரக் கூடிய கல்விச் சூழலின் காரணமாக பள்ளியிலிருந்து வெளியேறவே விரும்புவான்.

சரியான, முறையான கல்வியைக் கற்றுத் தருவதன் மூலம் இந்தப் பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறிந்து நமது குழந்தைகளின் நலன்களையும் எதிர்காலத்தையும் நாமே கையிலெடுத்துக் கொள்வதற்கு இதுவே பொருத்தமான தருணமாகும்.

எந்த ஒரு டிஸ்லெக்சியா மாணவனும் வாசிப்பது, எழுதுவது போன்ற திறன்களைக் கற்றுக் கொள்ளாது பள்ளியிலிருந்து வெளியேறக் கூடாது என்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.

எனவே, ஒரு குழந்தையை கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது சட்டவிரோதமானது என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் நமது அரசாங்கம் அதே முறையில் பொருத்தமான, சரியான கல்விமுறை அந்தக் குழந்தைக்கு வழங்கப்பட வேண்டியது அந்தக் குழந்தைக்கான உரிமையாகும் என்பதையும் உணர வேண்டும்.

இதுபோன்ற விவகாரங்களில் தாமதம் செய்வது என்பது அவர்களை நிராகரிப்பதற்கு சமமானது என்பதையும் அனைவரும் உணரவேண்டும்.

தொடர்புக்கும், கூடுதல் தகவல்களுக்கும்:

Dr. Mullai A. Ramaiah

President

National Organization for Dyslexia Malaysia

டாக்டர் முல்லை ஏ.இராமையா

தொடர்புக்கு: www.nodmalaysia.org