Home நாடு தமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்!

தமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்!

2163
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்க் கல்வி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்குக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாகவும், ஆனால், அவர் இதுவரையில் அந்த அழைப்புக்கு பதில் கூட அனுப்பவில்லை என்றும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்திருப்பது தமிழ்க் கல்வி ஆர்வலர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பல வாரங்களுக்கு முன்பே மஸ்லீக்கு அழைப்பு அனுப்பிவிட்டதாகவும், இன்றுவரை அதற்கு பதில் இல்லை என்றும் இராமசாமி கூறியிருக்கிறார்.

“அவருக்கு ஒரு கடிதம் அனுப்பினோம். ஆனால் கடிதங்களுக்கு பதில் அனுப்புவதில்லை என்பது மஸ்லீயின் வழக்கமாகிவிட்டது. ஒரு முக்கியப் பிரச்சனை குறித்து நாங்கள் கடிதம் அனுப்பியிருந்தோம். ஆனால் அதற்கு பதிலளிக்கக் கூட அவருக்கு நேரமில்லை” என்றும் இராமசாமி இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சாடியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பலமுறை மஸ்லீயின் செயலாளரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் பலனில்லாத நிலையில், கல்வி துணையமைச்சர் தியோ நீ சிங்கைத் தொடர்பு கொண்டதாகவும் ஆனால் அவர் வெளிநாட்டில் இருக்கப் போவதால், பினாங்கு தமிழ்க் கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது எனத் தெரிவித்ததாகவும் இராமசாமி கூறியிருக்கிறார்.

தொடர்ந்து எதிர்ப்புகளை சம்பாதிக்கும் கல்வி அமைச்சர்!

ஒரு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ஒரு கல்வி தொடர்பான மாநாட்டிற்கு – அதுவும் கல்வி அமைச்சர் மஸ்லீ சார்ந்திருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஆட்சி செய்யும் பினாங்கு மாநிலத்தால் நடத்தப்படும் மாநாட்டிற்கு – அதுவும் நாட்டின் கல்வித் துறையில் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நடத்தப்படும் மாநாட்டிற்கு – விடுக்கப்பட்ட அழைப்புக்குக் கூட மஸ்லீ பதில் அனுப்பவில்லை என்பது தமிழ்ப் பள்ளிகள் விவகாரத்தில் அவருக்கிருக்கும் அக்கறையின்மையையே காட்டுகிறது.

அவர் கல்வி அமைச்சரானது முதல் அடுத்தடுத்து பல்வேறு சறுக்கல்களைக் சந்தித்து வருகிறார். கல்வி அமைச்சின் ஆலோசகர்களை நியமிக்கும்போது அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லாததும் – தமிழ்க் கல்வி தொடர்பில் அல்லது இந்தியர் கல்விப் பிரச்சனை தொடர்பில் ஒருவர் கூட நியமிக்கப்படாததும் இந்தியர்கள் மத்தியில் பெரிதும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. அதன் பின்னரே ஓர் இடைவெளிக்குப் பின்னர் இந்தியர் ஒருவர் கல்வி ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டார்.

அதே போல, நம்பிக்கைக் கூட்டணியின் கொள்கைளுக்குப் புறம்பாக அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத் தலைவராக தன்னைத்தானே நியமித்துக் கொண்டதன் காரணமாக மஸ்லீ பொதுமக்களிடையே கடும் கண்டனங்களுக்கு உள்ளானார்.

கல்வி அமைச்சில் இந்தியர் ஒருவர் துணையமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்

தேசிய முன்னணி அரசாங்கத்தில் கல்வி அமைச்சில் துணையமைச்சர் ஒருவர் (ப.கமலநாதன்) மஇகா சார்பில் இடம் பெற்றிருந்தார். அதன் காரணமாக அந்த அமைச்சில் இந்தியர் கல்வி – தமிழ்ப் பள்ளிகள் விவகாரம் – போன்ற அம்சங்களில் என்ன நடக்கிறது என்பது பொதுவெளியில் ஓரளவுக்குத் தெரிந்திருந்தது.

ஆனால், கமலநாதன் இருந்த காலத்தில், அவரது சிறு சிறு தவறுகள், குறைகள் கூட பூதாகாரமாகப் பெரிதாக்கப்பட்டு, அரசியல் ரீதியாகப் பெரிதுபடுத்தப்பட்டன.

ஆனால், இன்று கல்வி அமைச்சில் இந்தியர் ஒருவர் துணையமைச்சராக இல்லாத நிலையில், பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்க் கல்வி மீதான மாநாட்டுக்கான அழைப்புக்கு பதில் கூட அனுப்ப முடியாத கல்வி அமைச்சரைப் பெற்றிருக்கிறோம்.

இது போன்ற சர்ச்சைகள் எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட – இந்தியர் கல்வி, தமிழ்ப் பள்ளிகள் விவகாரம் – போன்ற அம்சங்களில் சரியான பாதையில் இலக்குகள் திசை திருப்பி விடப்பட –

கல்வி அமைச்சில் துணை அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவதுதான் சரியான – பொருத்தமான தீர்வாக இருக்க முடியும்.

-இரா.முத்தரசன்