Home நாடு மலேசியத் தமிழ்க் கல்வி வளர்ச்சி மாநாடு – கல்வி துணையமைச்சர் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்

மலேசியத் தமிழ்க் கல்வி வளர்ச்சி மாநாடு – கல்வி துணையமைச்சர் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்

1944
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று காலை தொடங்கி ஒரு நாள் மாநாடாக மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் மலேசியத் தமிழ்க் கல்வி வளர்ச்சி மாநாட்டை கல்வி துணையமைச்சர் தியோ நீ சிங் (படம்) அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

மலேசியக் கல்வியமைச்சின் ஆதரவுடன் தமிழ் அறவாரியம், தேசிய தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மன்றம், மலாயா தமிழ் ஆசிரியர் சங்கம், தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்கம், மலேசிய இந்தியர் விண்வெளி அறிவார்ந்தோர் கழகம் ஆகியோரின் கூட்டு ஏற்பாட்டில் மலேசியத் தமிழ்க் கல்வி வளர்ச்சி மாநாடு நடைபெறுகிறது.

தமிழ்க்கல்வி வளர்ச்சியின் தற்போதைய நிலை, தேவை, எதிர்காலம் மற்றும் தமிழ்க்கல்வியின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்குமான அணுகு முறைகளையும், செயல் திட்டங்களையும் வகுப்பது, அதற்கான பரிந்துரைகளை வழங்குவது ஆகிய இலக்குகளோடு இந்த மாநாடு நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

இன்று காலை தொடங்கிய மாநாட்டில் தமிழ் அறவாரியத்தின் துணைத் தலைவர் சுப்பிரமணியம் இராமசாமி வரவேற்புரையாற்றினார். தமிழ்க் கல்வி வளர்ச்சி மாநாட்டுக்காக 7 ஆயிரம் ரிங்கிட் நிதியை கல்வி அமைச்சின் சார்பில் ஒதுக்கீடு செய்த கல்வி துணையமைச்சருக்கு நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து கல்வி துணையமைச்சர் தியோ நீ சிங் சிறப்புரையாற்றி மாநாட்டை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

கல்வி துணையமைச்சரின் உரை

தியோ நீ சிங்கிற்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது

தமிழ் மொழியில் பாரம்பரியத்தையும், தொன்மையையும் தனது உரையில் சுட்டிக் காட்டிப் பேசிய துணையமைச்சர் தியோ நீ சிங், ‘தொல்காப்பியம்’ என்ற நூலை 2,300 ஆண்டுகளுக்கு முன்னரே படைத்த மொழி தமிழ் மொழி எனப் பாராட்டினார்.

தமிழ்க் கல்வியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கவும், கலந்தாலோசிக்கவும் முன்வந்திருக்கும் அரசு சார்பற்ற தமிழ் இயக்கங்களின் முயற்சிகளுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொண்ட துணை அமைச்சர், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் பாரபட்சமின்றி அனைத்து இனங்களுக்கும் சரி சமமான முறையில் முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தி  வருவதாகத் தெரிவித்தார்.

தமிழ்க் கல்வி மாநாட்டில் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளி மாணவர்கள் வழங்கிய நடனம்

அந்த வகையில் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் தியோ சுட்டுக் காட்டினார்.

அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில், பி-40 எனப்படும் அடிமட்ட ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்காக, பள்ளி உபகரணப் பொருட்கள், உணவுகள், மற்றும் உதவிகள் வழங்கப்படும் எனவும் தியோ தனதுரையில் தெரிவித்தார்.

பி-40 எனப்படும் அடித்தட்டு மக்களின் கல்விக்காக அனைத்து வகைகளிலும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் பாடுபடும் என்றும் தியோ உறுதியளித்தார். இனம் சமயம் வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கும் சமச்சீர் கல்வி சென்றடைய வேண்டும் என்பதுதான் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தியோ எடுத்துரைத்தார்.

தமிழ்ப் பள்ளிகள் என மட்டுமின்றி கல்வித் துறை சம்பந்தமான அரசு சார்பற்ற இயக்கங்களின் அனைத்து ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் கல்வி அமைச்சு கவனத்தில் கொண்டு பரிசீலிக்கும் என்றும் தியோ உறுதி வழங்கினார்.

தியோவின் உரைக்குப் பின்னர் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் மலேசியத் தலைமையாசிரியர் சங்கத்தின் தலைவர் அர்ஜூனன் சுப்பிரமணியம் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

பல்வேறு தலைப்புகளினான சிறப்புரைகள், பரிந்துரைகளுடன் நடைபெறும் இன்றைய மாநாடு மாலை 5.00 மணியளவில் நிறைவு பெறும்.