Home இந்தியா அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவு – தமிழ் உலகுக்கு பேரிழப்பு

அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவு – தமிழ் உலகுக்கு பேரிழப்பு

1624
0
SHARE
Ad

சென்னை – உலக அளவில் தமிழ் ஆராய்ச்சி, வரலாறு, அகழ்வாராய்ச்சி, எழுத்துருவியல் எனப் பன்முகத் திறன்வாய்ந்த அறிஞராகத் திகழ்ந்த ஐராவதம் மகாதேவன் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி தனது 88-வது வயதில் சென்னையில் காலமானது தமிழ் உலகுக்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மேற்குறிப்பிட்ட துறைகளில் கட்டுரைகள், நூல்களை எழுதியிருக்கும் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது என்பதோடு அண்மையில் இந்திய வரலாற்று காங்கிரசால் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார் ஐராவதம் மகாதேவன். 1966-இல் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார்.

மு.க.ஸ்டாலின் அஞ்சலி

ஐராவதம் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரை முருகன்

ஐராவதம் மகாதேவனின் மறைவுச் செய்தி கேட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அன்னாரின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, தனது இரங்கல் செய்தியையும் வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“பத்மஸ்ரீ விருது பெற்ற கல்வெட்டு எழுத்தியல் அறிஞரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலையணிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டேன். 27 வருடங்களுக்கு மேல் இந்திய ஆட்சிப் பணியில் நேர்மையாக பணியாற்றி ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு எல்லாம் நல்லுதாரணமாகத் திகழ்ந்தவர். நான்கு வருடங்கள் தினமணி ஆசிரியராக பணியாற்றி பத்திரிகையுலக நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், இலக்கிய, அறிவியல் உலகத்திற்கு அரிய கருத்துக்களையும் விதைத்தவர்” என ஸ்டாலின் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

“தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி தமிழ் மாநாட்டில் ‘சிந்து சமவெளி நாகரிக’ ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, “பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து சிந்து சமவெளி நாகரிகத்தை அறிந்து கொள்ள முடிகிறது” என்ற அவரது ஆய்வினை மேற்கோள்காட்டி மாநாட்டில் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையுரையிலேயே பாராட்டப்பட்டவர். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 2009-10 ஆம் ஆண்டிற்கான “தொல்காப்பியர்” விருதினைப் பெற்ற திரு ஐராவதம் மகாதேவன் அவர்களின் மறைவு பத்திரிகை உலகிற்கும், கல்வெட்டு எழுத்தியல் துறை மற்றும் இலக்கிய துறைக்கும் பேரிழப்பாகும்” என ஸ்டாலின் ஐராவதத்துக்கு தனது இரங்கல் அறிக்கையில் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவரை இழந்து வாடும் அவரது மகன்களுக்கும், உறவினர்களுக்கும், ஆய்வு அறிஞர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.