Home Photo News வல்லினம் விழா – இலக்கிய உரைகள், நூல் வெளியீடுகளின் சங்கமம்

வல்லினம் விழா – இலக்கிய உரைகள், நூல் வெளியீடுகளின் சங்கமம்

1633
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த நவம்பர் 18-ஆம் தேதி சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க நடைபெற்ற வல்லினம் குழுவினரின் 10-ஆம் ஆண்டு கலை, இலக்கிய விழா, தமிழ் நாட்டின் இரண்டு முக்கிய இலக்கிய ஆளுமைகளின் இலக்கிய உரைகள், 10 மலேசியத் தமிழ் நூல்களின் வெளியீடு, 3 மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் காணொளி ஆவணங்கள் என அனைத்தும் ஒருங்கே சங்கமித்த ஒரு முக்கிய இலக்கிய விழாவாக அமைந்தது.

பவா செல்லதுரை

தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் இருவரும் இலக்கிய உரைகள் நிகழ்த்தினர். தனது எழுத்துலக அனுபவங்களை நகைச்சுவையாக விவரித்த பவா செல்லதுரை கூறிய பல கதைகள் அரங்கை சிரிப்பலைகளால் நிறைத்தது. சு.வேணுகோபாலின் உரையில் எழுத்தாளர்களின் நேர்காணல்களின் முக்கியத்துவத்தை விவரித்த அவர், அந்தப் பதிவுகள் எவ்வாறு வரலாற்றுப் பதிவுகளாக காலத்தால் நின்று நிலைக்கின்றன என்பது குறித்து எடுத்துக் காட்டுகளோடு விளக்கினார்.

சு.வேணுகோபால்

எழுத்தாளராகத் தொடர்ந்து பணியாற்றுவதன் மூலம் ஒருவருக்குக் கிடைக்கும் பெருமைகளையும், கௌரவத்தையும் சுட்டிக் காட்டிய அவர் எதிர்காலத்திலும் ஓர் எழுத்தாளரின் கதைகள் படிக்கப்பட்டு, அவருக்கு அங்கீகாரம் வழங்குகின்றன எனவும் வேணுகோபால் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

வல்லினம் தோற்றுநர் ம.நவீன் தனது வரவேற்புரையில் வல்லினம் குழுவின் தோற்றம், வளர்ச்சி குறித்தும், 10-வது வல்லினம் கலை இலக்கிய விழாவின் பெருமைகள் குறித்தும் விளக்கினார். தங்களின் இலக்கியப் பயணத்தில் தங்களோடு உடன்வந்தவர்கள், தோள்கொடுத்தவர்கள், துணை நின்றவர்கள் ஆகியோர் குறித்தும் நவீன் தனதுரையில் விவரித்தார்.

வல்லினம் தோற்றுநர் ம.நவீன்

விழாவின் முத்தாய்ப்பாக அமைந்த மற்றொரு அங்கம், நூல்கள் படைத்தவர்களுடனான கலந்துரையாடல். ம.நவீன், டாக்டர் சண்முக சிவா, அ.பாண்டியன், விஜயலட்சுமி ஆகிய நூலாசிரியர்கள் ஒருசேர அரங்க மேடையில் அமர்ந்திருக்க நிகழ்ச்சி நெறியாளர் அவர்களிடம் சில கேள்விகளை முன்வைக்க, அதற்குரிய பதில்களை நூலாசிரியர்கள் வழங்கினர்.

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியிடம் இருந்து நூல் பெறுகிறார் எழுத்தாளர் சீ.முத்துசாமி…

பின்னர் பத்து நூல்களும் வெளியிடப்பட்டு வருகை தந்த ஒவ்வொரு பிரமுகரும் ஒரு நூலைப் பெற்றுக் கொண்டனர். அதேபோன்று ஆவணப் படங்களும் வெளியிடப்பட, பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.

அனைத்து நூல்கள், ஆவணப் படங்கள் ஒரே கைப்பையில் வைக்கப்பட்டு தலா 50 ரிங்கிட் விலையில் விற்கப்பட்டன. வருகை தந்த பலரும் வரிசையில் நின்று அந்த நூல்களை வாங்கிச் சென்றனர்.

வல்லினம் நூல்களை வெளியிட 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி அளித்த தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்திற்கு நவீன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ஆக, ஏழு நூல்கள், மூன்று ஆவணப் படங்கள் அடங்கிய குறுந்தகடுகளை வெறும் 50 ரிங்கிட்டுக்கு வழங்கியது – தமிழ் நாட்டின் இரண்டு முன்னணி எழுத்தாளர்களின் இலக்கிய உரைகள் – மலேசிய எழுத்தாளர்களின் உரைகள், கலந்துரையாடல்கள் – எல்லாவற்றுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க சில நூல்களைப் பதிப்பித்ததன் மூலம் மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்புலகை அடுத்த கட்டத்திற்கு சற்றே நகர்த்திச் சென்றது – ஆகிய அனைத்து அம்சங்களும் ஒருங்கே ஒன்றிணைந்த விழாவாக – மலேசியத் தமிழ் இலக்கியப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக – வல்லினம் 10-ஆம் கலை இலக்கிய விழா அமைந்தது.

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியிடம் இருந்து நூல் பெறுகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்
முனைவர் முல்லை இராமையா நூல் பெறுகிறார்
கவிஞர்-பத்திரிக்கையாளர் அக்கினியின் ஆவணப் படத்தை வெளியிடுகிறார் சக பத்திரிக்கையாளர் ஏ.வி.காத்தையா
நூல் பெறுகிறார் எழுத்தாளர் அ.ரங்கசாமி

சு.வேணுகோபாலிடம் இருந்து நூல் பெறுகிறார் அக்கினி
பி.எம்.மூர்த்தியிடம் இருந்து நூல் பெறுகிறார் எழுத்தாளர் எஸ்.பி.பாமா
டாக்டர் சண்முக சிவா
நூலாசிரியர் சரவண தீர்த்தா
அ.பாண்டியன்

கே.எஸ்.மணியத்தின் ஆங்கில சிறுகதைகளை மொழிபெயர்த்த விஜயலட்சுமி

-செல்லியல் தொகுப்பு