Home நாடு புங் மொக்தார், தாஜூடின் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்

புங் மொக்தார், தாஜூடின் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்

1672
0
SHARE
Ad
பங் மொக்தார்

கோலாலம்பூர் – நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு செய்கிறார்கள் என்ற காரணத்தைக் காட்டி தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங் மொக்தார் (சபா-கினபாத்தாங்கான்) மற்றும் தாஜூடின் அப்துல் ரஹ்மான் (பேராக் – பாசீர் சாலாக்) ஆகிய இருவரையும் இன்று நாடாளுமன்றத்திலிருந்து துணை சபாநாயகர் முகமட் ரஷிட் ஹஸ்னோன் வெளியேற்றினார்.

அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தாஜூடின் அப்துல் ரஹ்மான்

பங் மொக்தார், தாஜூடின் இருவரையும் வெளியேற்றுமாறு நாடாளுமன்றப் பாதுகாவலர்களுக்கு கட்டளையிடப் போகிறேன் என துணை சபாநாயகர் கூறியதைத் தொடர்ந்து, எங்களை விரட்டியடிக்கத் தேவையில்லை, நாங்களே வெளிநடப்பு செய்கிறோம் எனக் கூறி தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினர்.

#TamilSchoolmychoice

கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவராஜை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என சில நாட்களுக்கு முன்னர் முன்மொழிந்த ஜெலுத்தோங் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற தீர்மானத்தை பங் மொக்தார் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்.

எனினும் அந்தத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இதைத் தொடர்ந்து இருதரப்புகளுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

நாடாளுமன்றத்தில் மீண்டும் இன்று நுழைந்த சிவராஜ் பேசும் போது, தன் தவறை உணர்ந்து கொண்டு தன்னை மீண்டும் நாடாளுமன்றத்தில் அனுமதித்த சபாநாயகருக்கு நன்றி தெரிவித்தார். இந்தக் கருத்துக்கும் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் தவறான முடிவைச் செய்யவில்லை என்றும் அத்தகைய முடிவு எடுக்கப்பட்டதற்கு சிவராஜ்தான் காரணம் என்றும் பதிலுக்கு நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து எழுந்த வாக்குவாதங்களின் காரணமாகவே பங் மொக்தார், தாஜூடின் இருவரையும் வெளியேற்றும் முடிவை துணை சபாநாயகர் மேற்கொண்டார்.