Home நாடு தைப்பூசம் : பத்துமலை நோக்கி முருகக் கடவுளின் இரத ஊர்வலம்

தைப்பூசம் : பத்துமலை நோக்கி முருகக் கடவுளின் இரத ஊர்வலம்

950
0
SHARE
Ad
முருகப் பெருமானின் இரத ஊர்வலம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஜாலான் ஈப்போ 5-வது மைல் வளாகத்தை வந்தடைந்தபோது…

கோலாலம்பூர் – (பிற்பகல் 2.30 மணி நிலவரம்) நாளை திங்கட்கிழமை கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, பாரம்பரிய வழக்கமாக தலைநகர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வளாகத்தில் இருந்து நேற்று இரவு உற்சவ மூர்த்தியாக இரதத்தில் பவனியேறிப் புறப்பட்ட ஸ்ரீ முருகப் பெருமான், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னால் நடந்து செல்ல, வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் அர்ச்சனைகளையும், நேர்த்திக் கடன்களையும் ஏற்றுக் கொண்டு பத்துமலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் திரண்ட காரணத்தாலும் இரதம் செல்லும் வழியெங்கும் பிரார்த்தனைகளுக்காக ஆங்காங்கு மக்கள் அர்ச்சனைத் தட்டுகளுடன் நின்றதாலும் இரதம் ஈப்போ சாலை 5-வது மைலை வந்தடைவதற்கே பிற்பகல் 1.30 மணி ஆகிவிட்டது.

பல இடங்களில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. சில பந்தல்களில் உணவுகளும் பரிமாறப்பட்டன.

#TamilSchoolmychoice

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் இரதம் பத்துமலை வளாகத்தை வந்தடையும். பத்துமலையில் இரண்டு நாட்கள் வீற்றிருந்து அருள் பாலிக்கும் முருகப் பெருமான் தைப்பூசத்திற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை காலையில் புறப்பட்டு, மீண்டும் ஈப்போ சாலை வளாகத்தை வந்தடைவார்.

அதன்பின்னர் செவ்வாய்க்கிழமை மாலை (ஜனவரி 22) ஸ்ரீ முருகப் பெருமான் மீண்டும் இரத பவனியோடு மாலையில் புறப்பட்டு அன்றிரவு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் வந்தடைவார்.