Home நாடு தேர்தல் ஆணையம் : முன்னாள் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைக் குழு

தேர்தல் ஆணையம் : முன்னாள் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைக் குழு

714
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தல் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நோக்கில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படும் என அறிவித்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், மலேசியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இந்த விசாரணைக் குழுவால் விசாரிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

கூட்டரசுப் பிரதேச நீதிமன்றத்தின் ஐந்து ஓய்வு பெற்ற நீதிபதிகளை இந்த விசாரணைக் குழு கொண்டிருக்கும்.

பொதுத் தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கி, வாக்களிப்பு நாள் வரையிலான அனைத்து சம்பவங்களையும், நடவடிக்கைகளையும் இந்த விசாரணைக் குழு விசாரிக்கும்.

#TamilSchoolmychoice

ஸ்டீவ் ஷிம் லிம் கியோங் இந்த விசாரணைக் குழுவுக்குத் தலைமையேற்கிறார். சலேஹா சஹாரி, சுரியாடி ஹாலிம் ஒமார், ஜெப்ரி தான் கோக் வா, பிரசாத் சந்தோஷம் ஆப்ரஹாம் ஆகிய நால்வரும் விசாரணைக் குழுவில் இடம் பெற்றிருப்பர்.

மாமன்னர் இந்த விசாரணைக் குழுவுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

திங்கட்கிழமை ஜனவரி 28 முதல் தனது விசாரணைப் பணிகளைத் தொடங்கவிருக்கும் இந்த விசாரணைக் குழு, தேர்தல் ஆணையத்தின் ஆறு முன்னாள் உறுப்பினர்களின் பங்கு குறித்து விசாரிக்கும். ஆனால், அந்தப் பட்டியலில் பதவி விலகிய முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் முகமட் ஹாஷிம் அப்துல்லாவின் பெயர் இடம் பெறவில்லை.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தைச் சேர்ந்த எம்.புரவலன், எம்.கோகிலாம்பிகை ஆகியோரும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் ஆன் கோங் ஹூய் லி என்பவரும் இந்த விசாரணைக் குழுவுக்கு உதவியாகப் பணியாற்றுவார்கள்.