Home நாடு “பாரம்பரிய – பண்பாட்டுக் கூறுகளை பிள்ளைகளுக்கு எடுத்துரைப்போம்” – வேதமூர்த்தி

“பாரம்பரிய – பண்பாட்டுக் கூறுகளை பிள்ளைகளுக்கு எடுத்துரைப்போம்” – வேதமூர்த்தி

1131
0
SHARE
Ad

மெந்தகாப் : அண்மையில் பகாங் மாநிலத்தின் மெந்தகாப் நகரில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி “தமிழர்களின் பண்பாட்டையும் பாரம்பரிய பெருமையையும் எடுத்துரைக்கும் அளவுக்கு மெந்தகாப் வட்டாரத்தில் பிரம்மாண்டமாக தமிழர் திருநாள் விழா கொண்டாடப்படுவதைக் காண்பதிலும், அதில் கலந்து கொள்வதிலும் இரட்டை மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறினார்.

“தமிழர்களின் பண்பாட்டையும் பாரம்பரிய பெருமையையும் மேடையளவில் நிறுத்திக் கொள்ளாமல் வீட்டில் பிள்ளைகளுக்கும் எடுத்துரைப்பதிலும் பெற்றோர் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும்” என்றும் பொன்.வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டார்.

“குறிப்பாக, வீட்டில் இருக்கின்ற தாத்தாக்களும் பாட்டிமாரும் தம் பேரப்பிள்ளைகளுக்கு நம்முடைய வரலாற்றுச் சிறப்பையும் பண்பாட்டுக் கூறுகளையும் எடுத்துக் கூற வேண்டும். காரணம், நாளை அவர்கள்தான் இவற்றை கட்டிக் காப்பதுடன் அடுத்தத் தலைமுறைக்கும் கொண்டு செல்வார்கள். அத்துடன் நல்ல குடிமக்களாக விளங்குவதுடன் வீட்டிற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் அவர்கள் வாழ்வதற்கு வழி ஏற்படும்” என்றும் வேதமூர்த்தி தனதுரையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணி சார்பில் புதிதாக அமைந்துள்ள ஆட்சியில் இந்தியர்களின் பிரச்சினைகளைக் கவனிக்கவும் களையவும் வேண்டி எனக்கு அமைச்சரவையில் இடம் வழங்கிய துன் மகாதீருக்கு உங்கள் அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன் என்று அமைச்சர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

தெமர்லோ மாவட்ட பொது அமைப்புகளின் கூட்டு முயற்சியில் புருஷோத்தமனின் ஒருங்கிணைப்பில் மெந்தகாப் ஹுவா லியன் மண்டபத்தில் பிப்ரவரி 5-ஆம் நாள் முன்னிரவில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி மேலும் பேசுகையில், “இந்தப் பகுதியில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இந்தியர்கள் நலிந்த நிலையில் வாழ்வதாக புருசோத்தமன் குறிப்பிட்டார். எனவே, புருசோத்தமனும் அவர்தம் குழுவினரும் இந்தப் பகுதியில் வாழ்கின்ற இந்திய மக்களின் மேம்பாட்டிற்கான ஒரு திட்ட வரைவுடன் என்னைச் சந்தித்தால், அதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்” என்றும் கூறினார்.

முப்பெரும் விழா என்னும் பெயரில் தமிழர்தம் பண்பாடும் கலையும் வெளிப்படும் வகையில் கலைநிகழ்ச்சியுடன் படைக்கப்பட்ட இந்தத் தமிழர் திருநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சபாய் சட்டமன்ற உறுப்பினர் திருமதி காமாட்சி, இலக்கியப் பேச்சாளர் ‘ஆர்டிஎம்’ வசந்தம் புகழ் சி.பாண்டிதுரை, குருஸ்ரீ டாக்டர் இரா. சந்திரமோகன் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து அமைச்சர் தன் உரையை நிறைவு செய்தார்.