Home நாடு அம்னோ – பாஸ் அதிகாரபூர்வமாக இணைந்து செயல்படும் – ஆனால் கூட்டணியல்ல!

அம்னோ – பாஸ் அதிகாரபூர்வமாக இணைந்து செயல்படும் – ஆனால் கூட்டணியல்ல!

648
0
SHARE
Ad
அம்னோ-பாஸ் சந்திப்புக் கூட்டம் (படம்: நன்றி அம்னோ இணையத் தளம்)

கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்திய அம்னோவும் பாஸ் கட்சியும் இனி அரசியல் ரீதியாக எல்லா நிலைகளிலும் அதிகாரபூர்வமாக ஒன்றிணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளன. மலாய் – முஸ்லீம் ஒற்றுமையைக் கருதியும், அந்த அம்சத்தை மையமாகக் கொண்டும் இரு கட்சிகளும் இணைந்து செயல்படப் போவதாக தெரிவித்துள்ளன.

எனினும், இரு கட்சிகளும் கூட்டணி ஒன்றில் இணையப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளன.

“முதலில் எங்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதன் பின்னர் சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தலில் மோதிரங்களை மாற்றிக் கொண்டோம். ஸ்ரீ செத்தியா இடைத் தேர்தலில் எங்களுக்கிடையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இப்போது ஒரே மண மேடையில் அமர்ந்திருக்கிறோம்” என அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

#TamilSchoolmychoice

எந்தவித நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் இன்றி இரு கட்சிகளும் இணைந்து மலாய்-முஸ்லீம் நன்மைக்காக செயல்பட உறுதி பூண்டுள்ளதாகவும் முகமட் ஹசான் தெரிவித்தார்.

மலாய்க்காரர் – மலாய்க்காரர் அல்லாதார் என பிரிவினைகள் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்றும் கூறிய ஹசான் மற்ற இனங்களைப் புறக்கணிக்காமல் முஸ்லீம் – பூமிபுத்ராக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதுதான் எங்களின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

எனினும் அம்னோ, பாஸ் இரு கட்சிகளும் ஒரே கட்சியாகவோ, கூட்டணியாகவோ இணையாது என்றும் ஹசான் கூறினார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மஇகா, மசீச தேசிய முன்னணியில் இருந்து விலகும் தங்களின் முடிவுகளை மாற்றிக் கொள்ளுமா அல்லது அதே கூட்டணியில் தொடர்ந்து நீடித்திருக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

தேசிய முன்னணி கூட்டணியில் தற்போது அம்னோ, மசீச, மஇகா என மூன்று கட்சிகள் மட்டுமே அதிகாரபூர்வமாக இடம் பெற்றிருக்கின்றன. இதில் மசீச, மஇகா விலகி விட்டால், அம்னோ மட்டும் தேசிய முன்னணியில் இருக்கும் என்பதால் தேசிய முன்னணியின் சின்னம் முடக்கப்படும் அபாயமும் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய முன்னணி கூட்டத்திற்குப் பின்னர் தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் தெளிவான ஒரு நிலைப்பாடு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.