Home நாடு பிரிவினை – வெறுப்புணர்வை அடியோடு அகற்றுவோம் – வேதமுர்த்தி அறைகூவல்

பிரிவினை – வெறுப்புணர்வை அடியோடு அகற்றுவோம் – வேதமுர்த்தி அறைகூவல்

972
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : மலேசியர்கள் அனைவரும் பிரிவினைப் போக்கிற்கும் வெறுப்புணர்வுக்கும் எதிராக ஒன்றுபட்டு கரம் கோர்ப்போம் என்று தேசிய ஒற்றுமை  மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறைகூவல் விடுத்தார்.

பெட்டாலிங் ஜெயா, கனகபுரத்தில் அமைந்துள்ள மலேசிய இலங்கையர் சமூக மன்ற அரங்கத்தில் இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைக்கு பலியானவர்களுக்காக மெழுகுவர்த்தி ஒளியேற்றி இரங்கல் தெரிவிக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு வேதமூர்த்தி இரங்கல் உரை நிகழ்த்தினார்.

பிரதமர் துறை அமைச்சருமான பொன்.வேதமுர்த்தி, இலங்கை வழிபாட்டுத் தலங்களில் நிகழ்த்தப்பட்ட வன்முறைத் தாக்குதலுக்கு மலேசிய கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் அதேவேளை, நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுள்ள அந்தத் தீவு நாட்டிற்கு மலேசிய மக்களின் ஒன்றுபட்ட ஆதரவைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அனைத்து சமயங்களின் சார்பில் அந்தந்த சமயச் சான்றோரால் பிரார்த்தனையும் உருக்கமான இரங்கல் உரையும் நிகழ்த்தப்பட்டன.

லூர்தரன் தேவாலயம் சார்பில் அபிஷேகம், மலேசிய தேவாலயக் கூட்டமைப்பின் செயலாளர் ஹெர்மன் சாஸ்திரி, பௌத்த மகா விகாரா தலைவர் டத்தோ கே. ஸ்ரீ தம்மரத்னா, இந்து சமயத்தின் சார்பில் கனகாபுர அருள்மிகு முனியாண்டி அம்பிகை ஆலயக் குருக்கள் சிவபாலன், மலேசியாவிற்கான இலங்கைத் தூதர் வசுந்தா ஜெயசூரியா, முஸ்லிம் சமய சார்பில் மலேசிய இஸ்லாம் மேம்பாட்டு வாரிய அதிகாரியும் மார்க்க ஓதுவாருமாகிய ஹஜ்ஜா நூருல் அச்சாம் ஹனிஃபா, மலேசிய இலங்கையர் சமூக மன்றத் தலைவர் டத்தோ குலசேகரன் உட்பட பலரும் பிரார்த்தனை ஓதி உரையாற்றினர்.

தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சின் சார்பில் அதன் அதிகாரிகள் ஆலன் கிருபாகரன், மாதவன் வேலாயும் உட்பட ஏராளமான பிரமுகர்கள் அனைத்து சமயங்களின் சார்பில் கலந்து கொண்டு மறைந்த உயிர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இலங்கை வம்சாவளியினர் அதிகமாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ், ஆங்கிலம், சிங்களம், அரபு, மலாய் மொழிகளில் வழிபாடு நடத்தப்பட்டதுடன் மலேசிய மக்களின் சமய சகிப்புத்தன்மையும் இன இணக்கப் போக்கும் வெளிப்பட்டது.

நிறைவாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதுடன் இரங்கல் குறிப்பையும் பதிவு செய்தனர்.