Home நாடு சண்டாக்கான்: நம்பிக்கைக் கூட்டணியின் சரிவைத் தடுத்து கௌரவத்தை நிலைநாட்டிய ஜசெக

சண்டாக்கான்: நம்பிக்கைக் கூட்டணியின் சரிவைத் தடுத்து கௌரவத்தை நிலைநாட்டிய ஜசெக

877
0
SHARE
Ad
வெற்றிக் களிப்பில் ஜசெக தலைவர்கள்

(ஒரு முக்கியமான காலகட்டத்தில் சண்டாக்கான் இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி பெற்றிருக்கும் வெற்றி குறித்து செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் பார்வை)

சண்டாக்கான்:வரிசையாக 3 இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல் கூடாரத்தில் அதிர்ச்சியையும், எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கையையும் தேசிய முன்னணி ஏற்படுத்தியிருந்த வேளையில்,

அந்த சரிவைத் தடுத்து நிறுத்தும் வகையில், நம்பிக்கைக் கூட்டணியின் கௌரவத்தை மீண்டும் நிலைநாட்டும் வகையில் சண்டாக்கான் இடைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று, நம்பிக்கைக் கூட்டணியின் ஆதரவாளர்களிடையே உற்சாக அலைகளைக் கரைபுரண்டோடச் செய்திருக்கிறது ஜசெக!

14-வது பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த மே 2018 முதல் 8 இடைத் தேர்தல்களை நாடு சந்தித்தது. சுங்கை காண்டிஸ், போர்ட்டிக்சன், பலாக்கோங், ஸ்ரீ செத்தியா, என வரிசையாக நான்கு இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற நம்பிக்கைக் கூட்டணிக்கு, அதிர்ச்சி வைத்தியம் அளித்தது அம்னோ – பாஸ் இணைப்பு.

#TamilSchoolmychoice

இதன் மூலம் அடுத்தடுத்து வந்த 3 இடைத் தேர்தல்களிலும் வரிசையாக வெற்றிவாகை சூடியது தேசிய முன்னணி. செமினி, ரந்தாவ், சட்டமன்றங்கள், கேமரன் மலை நாடாளுமன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுமே மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகள்.

இதன் காரணமாக, நம்பிக்கைக் கூட்டணிக்கு இனி ஆதரவில்லை – வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது அந்தக் கூட்டணி என்றெல்லாம் – பரப்புரைகள் மும்முரமாக முடுக்கி விடப்பட்டன.

இந்த சூழ்நிலையில்தான் வந்தது சண்டாக்கான் இடைத் தேர்தல்!

சண்டாக்கான் வெற்றி

முதல் வியூகமாக, சண்டாக்கானின் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வோங்கின் மகளான விவியன் வோங்கையே களத்தில் நிறுத்தியது ஜசெக.

அடுத்து நம்பிக்கைக் கூட்டணியின் அனைத்துத் தலைவர்களும் களமிறங்கி கடுமையான பரப்புரைகளை மேற்கொண்டு சண்டாக்கான் இடைத் தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

சபாவில் அம்னோ இயங்கினாலும், அதன் ஆதரவுத் தளம் கலகலத்து, சிதிலமடைந்திருப்பதால், சண்டாக்கானில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு பிபிஎஸ் கட்சி போட்டியிட வழி விட்டது தேசிய முன்னணி.

2018 பொதுத் தேர்தலில் 10,098 வாக்குகளில் ஜசெக இங்கு வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அப்போது வாக்குப் பதிவு 72.1 விழுக்காடாக இருந்தது.

ஆனால், நேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் 70 விழுக்காடு வாக்குப் பதிவை எதிர்பார்க்கிறோம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தாலும், இறுதியில் மாலை 5.00 மணிக்கு வாக்களிப்பு மையங்கள் மூடப்பட்டபோது, 54.4 விழுக்காடு வாக்குப் பதிவு மட்டுமே கிடைத்திருந்தது.

இதன் காரணமாக – ஏறத்தாழ 20 விழுக்காடு குறைவான வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், அப்படியே வெற்றி பெற்றாலும் ஏறத்தாழ 5 ஆயிரம் வாக்குகள் பெரும்பான்மையில்தான் ஜசெக வெற்றி பெற முடியும் எனக் கணிக்கப்பட்டது.

எனினும், கடந்த பொதுத் தேர்தல் வாக்குகளைவிட கூடுதலாக – 11,521 வாக்குகள் – பெரும்பான்மை பெற்றுத் தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் விவியன் வோங். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 16,012.

அவரை எதிர்த்து நின்ற பிபிஎஸ் கட்சி வேட்பாளர் டத்தோ லிண்டா சென் பெற்ற வாக்குகள் 4,491.

சீன வாக்காளர்கள் இன்னும் ஜசெக மீது கொண்டிருக்கும் நம்பிக்கை, சபா மாநிலத்தை ஆளும் பார்ட்டி வாரிசான் கட்சியின் ஆதரவு, நம்பிக்கைக் கூட்டணியின் மற்ற கட்சிகளின் பரப்புரைகள், தேசிய முன்னணியின் கட்டமைப்பு சிதைந்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் பலவீனம் – என எல்லா அம்சங்களும் இணைந்ததால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

மலாய்-முஸ்லீம் வாக்குகளை ஜசெக பெறுவதில் பார்ட்டி வாரிசான் முக்கியப் பங்காற்றியது என்பதை லிம் குவான் எங்கும் ஒப்புக் கொண்டு நன்றி தெரிவித்திருக்கிறார். சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சண்டாக்கானில், இவ்வெற்றியானது முன்னதாகவே கணிக்கப்பட்டதாக இருந்தாலும், அதிகமான முஸ்லிம் மக்களைக் கொண்டிருக்கும் சிம் சிம் மற்றும் பூலாவ் பெர்ஹாலா வாக்காளர்களும் பெருவாரியாக நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் என்பதை முடிவுகள் காட்டுகின்றன.

அரசியல் நாகரிகம் கருதி தோல்வியடைந்த பிபிஎஸ் கட்சியும் ஜசெகவைப் பாராட்டியுள்ளது.

இதுவரை நடைபெற்ற 8 இடைத் தேர்தல்களில் 5 தொகுதிகளை வென்றிருப்பதோடு, இறுதியாக நடைபெற்ற சண்டாக்கான் இடைத் தேர்தலில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்திருப்பதன் மூலம் கோட்டை இன்னும் எங்களின் கரங்களில்தான் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறது நம்பிக்கைக் கூட்டணி!

மகத்தான வெற்றியைப் பெற்றிருப்பதன் மூலம், நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல் சாதனைகளுக்குப் பின்னணியில் இருக்கும் முக்கிய அங்கம் – பங்கு – நாங்கள்தான் என்பதை ஜசெகவும் மீண்டும் ஒருமுறை தனது கௌரவத்தை நிலைநாட்டியிருக்கிறது.

-இரா.முத்தரசன்