Home நாடு வெற்றிகரமாக நடந்தேறிய மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு

வெற்றிகரமாக நடந்தேறிய மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு

1130
0
SHARE
Ad
மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்கள்

தஞ்சோங் மாலிம் –  கடந்த மே மாதம் 18, 19-ஆம் தேதிகளில் செராசில் உள்ள இபிஸ் ஸ்டைல் விடுதியில் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா (புத்தகம்) & கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ் மொழியியல் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS2019) இனிதே நடைபெற்று நிறைவுற்றது. மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு 18ஆம் தேதி மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கி மறுநாள் மாலை ஐந்து மணி வரை பல முக்கிய உரைகளுடன் நடைபெற்றது.

மொழியியல் அறிஞரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் முன்னால் தலைவருமான பேராசிரியர் சி.சிவசண்முகம் அவர்களின் மறைவையொட்டி அவருக்காக  மௌன அஞ்சலி மரியாதையோடு மாநாட்டின் வரவேற்புரையை புத்தகத்தின் தோற்றுனரும் தலைவருமான முனைவர் முனீஸ்வரன் குமார் வழங்கினார்.

முனீஸ்வரன் குமார்

மாநாட்டின் முத்தாய்ப்பாய் மூன்று பேருரைகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பேருரையாக ‘பன்முக நோக்கில் தொல்காப்பியம்’ எனும் தலைப்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கி. பெருமாள் அவர்களது உரை அமைந்தது.

#TamilSchoolmychoice

அள்ள அள்ளக் குறையாத அமுதமான தொல்காப்பியத்தைப் பன்முக நோக்கில் எவ்வாறு அணுகலாம் என விளக்கங்களை அவர் தந்தார்.

மாநாட்டில் இரண்டாவது நாளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பேருரைகள் வழங்கப்பட்டன. 21ஆம் நூற்றாண்டின் சமூக அறிவியல் ஆய்வுகளின் போக்குகள் எனும் தலைப்பில் இணைப்பேராசிரியர் முனைவர் அஸாரி அஸ்மான் பேருரை வழங்கினார். உலகம் முழுவதும் உள்ள போக்கோடு மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான் போன்ற நாடுகளை மையப்படுத்தி ஒப்பீட்டு அடிப்படையில் ஆய்வுப் போக்குகளை அவர் விவரித்தார்.

தற்போதைய காலகட்டத்தில் மொழி மற்றும் சமூக அறிவியல் ஆய்வு மாணவர்கள் எந்தெந்த நோக்குகளில் ஆய்வுகளைச் செய்தால் உலக கவனத்தை ஈர்க்க முடியும் என்றும் விளக்கினார். இவர் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணிபுரிபவராவார்.

மூன்றாவது பேருரையை வழங்கியவர் செமராங் மாநிலப் பல்கலைக்கழகம், இந்தோனேசியாவில் பன்னாட்டு விவகாரப் பிரிவின் தலைவராகப் பணியாற்றும் திருமதி லூலூ ஃபரிடா ஆவார். பேச்சுத் திறனை வளர்க்க விளையாட்டு அணுகுமுறையை இவர் அறிமுகப் படுத்தினார். அத்தோடு மொழிக் கல்வியில் மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விவரித்தார்.

இம்முறை மொத்தம் 58 கட்டுரைகள் இம்மாநாட்டில் படைக்கப்பட்டன. அவை தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தனித்தனியான அறைகளில் நடைபெற்றன. மலேசியா, எரித்ரேயா, சவூதி அரேபியா, இலங்கை, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளோடு இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலிலிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுரைகள் இவை என்பது குறிப்பிடத் தக்கது. இக்கட்டுரைகள் யாவும் விரைவில் ஐஎஸ்பிஎண் (ISBN) எண்களுடன் நூல் வடிவாக்கப்பட்டு புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான talias.org-இல் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

எந்த இடையூறும் இல்லாமல் முழுக்க முழுக்க கல்விசார்ந்து இம்மாநாடு நடைபெற்றதாகவும் இம்மாநாடு அதன் நோக்கத்தை அடைந்துவிட்டதாகவும் மாநாட்டின் இயக்குனரும் புத்தகத்தின் தலைவருமான முனைவர் முனீஸ்வரன் குமார் தெரிவித்தார். மலேசியத் துணைக் கல்வியமைச்சரும் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கமும் வழங்கிய ஆதரவுக்கும் புத்தக உறுப்பினர்களுக்கும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தமது நன்றியை அவர் தெரிவித்துக்கொண்டார். புத்தகத்தின் செயலாளர் செல்வி மகேஸ்வரி கருப்பையா அவர்களின் நன்றியுரையோடு மாநாடு ஒரு நிறைவுக்கு வந்தது.

இது போல் பேராதரவு இருக்குமாயின் மேலும் பல கல்விசார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய புத்தகம் தயாராக இருப்பதாக இம்மாநாட்டின் துணை இயக்குனர் முனைவர் சி.இளங்குமரன் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு மாநாட்டுக்கான பணிகளை இப்போதே திட்டமிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.