Home One Line P1 போர்ட்டிக்சன் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் பயிற்சிப் புத்தகங்களை அன்வார் இப்ராகிம் வழங்கினார்

போர்ட்டிக்சன் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் பயிற்சிப் புத்தகங்களை அன்வார் இப்ராகிம் வழங்கினார்

837
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் – தனது நாடாளுமன்றத் தொகுதியான போர்ட்டிக்சன் வட்டாரத்தில் அமைந்துள்ள 17 தமிழ்ப் பள்ளிகளில் இந்த ஆண்டு யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் யுபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி பயிற்சி நூல்களை இலவசமாக வழங்கினார்.

நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலை 10 மணியளவில் போர்ட்டிக்சன் நகரத் தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அன்வார் இப்ராகிம் சார்பாக அவரது இந்தியர் விவகாரங்களுக்கான அரசியல் செயலாளர் சுரேஷ் குமார் இந்த நூல்களை நேரடியாக அந்தப் பள்ளியின் மாணவர்களுக்கும் போர்ட்டிக்சன் வட்டாரப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கினார்.

யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்கான 5 பாடங்களுக்குமான இந்த நூல்களை வி ஷைன் நிறுவனம் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்காகப் பிரத்தியேகமாகத் தயாரித்திருக்கிறது.

சுரேஷ் குமார் உரையாற்றுகிறார்
#TamilSchoolmychoice

நூல்களை தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடையே உரையாற்றிய சுரேஷ் குமார் “அன்வார் இப்ராகிம் தமிழ், சீன மொழிவாரிப் பள்ளிகள் நாட்டில் நிலைத்திருக்க எப்போதும் குரல் கொடுத்து வந்திருப்பவர். தனது போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் மாணவர்கள் இந்த ஆண்டு சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும், அக்கறையோடும் அனைத்து மாணவர்களுக்கும் தனது சொந்த செலவில் இலவசமாகவே இந்த நூல்களை வழங்கியிருக்கிறார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “அன்வார் இப்ராகிம் நேரடியாக வருகை தந்து மாணவர்களுக்கு இந்த நூல்களை வழங்க ஆர்வம் கொண்டிருந்தார். எனினும் இந்த ஆண்டு அவர் புனித ஹஜ் யாத்திரைக்கு செல்லவிருப்பதால், அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர் ஹஜ் பயணம் முடிவடைந்து திரும்பி வந்து இந்த நூல்களை வழங்கினால், காலதாமதம் ஆகும், தேர்வுகள் நெருங்கி வரும் வேளையில் இந்த நூல்களால் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பயன் ஏற்படாது என்பதால் முதலில் நூல்களை மாணவர்களுக்கு வழங்கி விடுங்கள் என எனக்கு உத்தரவிட்டார். அதன் பேரிலேயே இன்று இந்த நூல்களை உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

போர்ட்டிக்சன் நகராண்மைக் கழக உறுப்பினர் விஜயஜோதி உரையாற்றுகிறார்

யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் சிறந்த முறையில் தேர்ச்சியடைய இந்த நூல்கள் மிகவும் பயன்படும் என்றும் கருதுவதாகவும் கூறிய சுரேஷ் குமார் அனைத்து மாணவர்களும் சிறந்த முறையில் தேர்ச்சியடைய அன்வார் இப்ராகிம் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் போர்ட்டிக்சன் நகராண்மைக் கழக உறுப்பினரும் போர்ட்டிக்சன் தமிழ்ப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலவை உறுப்பினருமான விஜயஜோதியும் உரையாற்றினார்.

வி ஷைன் யுபிஎஸ்ஆர் நூல்களின் பதிப்பாசிரியர் சா.விக்னேஸ்வரி

நிகழ்ச்சியின் இறுதியில் வி ஷைன் நிறுவன நூல்களின் பதிப்பாசிரியர் சா.விக்னேஸ்வரி நூல்கள் குறித்தும், மாணவர்கள் யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்காகக் கடைப்பிடிக்க வேண்டிய முயற்சிகள், நுணுக்கங்கள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கினார்.

சுரேஷ்குமாருக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது