Home One Line P1 “மித்ரா விதிமுறைக்கு ஏற்பவே புத்ராஜெயா ஆலயத்திற்கு நிதி” – வேதமூர்த்தி விளக்கம்

“மித்ரா விதிமுறைக்கு ஏற்பவே புத்ராஜெயா ஆலயத்திற்கு நிதி” – வேதமூர்த்தி விளக்கம்

676
0
SHARE
Ad

புத்ராஜெயா – புத்ராஜெயா ஆலயத்திற்கு அனுமதிக்கப்பட்ட மித்ரா நிதி ஐந்து மில்லியன் வெள்ளி கேள்விக்குள்ளாகி இருப்பதாக மலேசியாகினி இணைய ஏட்டில் செய்தி வெளியானதன் தொடர்பில் மற்ற அரசு நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் அரசாங்க நிதியில் மேற்கொள்ளப்படும் திருப்பணி முறையாகவும் சட்டவிதிக்கு உட்பட்டும் அமைய வேண்டும் என்பதில் கவனமுடன் இருப்பதாகவும் ஆலய நிருவாகக் குழுவினரும் இதன் தொடர்பில் விழிப்புடன் செயல்படுகின்றனர் என்றும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“வரலாற்றுப்படி இன்றைய புத்ராஜெயா நிருவாக நகரம், அன்றைய பெருந்தோட்டங்களான பிராங் பெசார், செட்லி, காலவே, மெட்லி ஆகிய இரப்பர் தோட்டங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 8,000 சதுர ஏக்கர் பரப்பில் 400-க்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த தோட்டப் பாட்டாளிகள் வாழ்ந்த பகுதிகளாகும்” என்று தனது அறிக்கையில் விவரித்த வேதமூர்த்தி,

“தோட்டத் தொழிலாளர்களின் ஆன்மீகப் பயிர் வளர்த்த 12 ஆலயங்கள் அழிக்கப்பட்டு இந்தப் புத்ராஜெயா உருவான நிலையில் அதற்கெல்லாம் நட்ட ஈடாக 3,100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடம் 20-ஆவது பிரிசிண்ட் பகுதியில் அன்றைய ஆட்சியால் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில்தான் அருள்மிகு லலிதாம்பிகை ஆலயம் அமைந்துள்ளது” என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

பெரும்பாலான தோட்டக் குடும்பங்கள் புத்ராஜெயாவை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியேறியுள்ள நிலையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் உட்பட மூத்த அரச அதிகாரிகளைக் கொண்ட நிருவாகக் குழு இந்த ஆலயத்தை தற்பொழுது பராமரித்து வருகிறது. நிலம் கிடைத்து 14 ஆண்டுகள் ஆனபின்பும் நிதிப் பற்றாக் குறையால் இவ்வாலய திருப்பணி இன்னமும் நிறைவேறாமல் உள்ளது.

“புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசு, கடப்பாட்டு உணர்வுடன் இந்த ஆலயக் கட்டுமான திருப்பணிக்கு நிதி உதவி அளிக்க இசைவு தெரிவித்துள்ளது. திருப்பணி நிறைவேறிய பின் தென்கிழக்கு ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க ஆலயமாக இந்த அருள்மிகு லலிதாம்பிகை ஆலயம் விளங்கும். அத்துடன், நாட்டின் நிர்வாக நகரான புத்ராஜெயாவில் சுற்றுப்பயணிகளைக் கவரும் இடமாகவும் மலேசிய பன்முக சமுதாயத்தை பிரதிபலிக்கும் விதமாகவும் இவ்வாலயம் திகழும்” என்றும் வேதமூர்த்தி தெரிவித்தார்.

கல்விப் பயிற்சி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூக நலம், அடையாளம், உள்ளடக்கம் ஆகிய நான்கு தளங்களைத்தான் மித்ரா இலக்காகக் கொண்டு அதற்கேற்ப நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதன் அடிப்படையில்தான் வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இந்த ஆலயத்திற்கும் நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்து என விளக்கிய வேதமூர்த்தி,

“ஆலயத்தின் சார்பில் செய்யப்பட்ட விண்ணப்பம் இன்னமும் பரிசீலனையில் இருப்பதால்தான் இது குறித்த விவரம் மித்ரா இணையப் பக்கத்தில் இன்னும் பதிவேற்றப்படவில்லை. அத்துடன், ஆலய நிர்வாகக் குழுவினரிடம் மேலும் விவரங்களைக் கேட்டுள்ள நிலையில் இந்த விண்ணப்பம் தொடர்பான ஆய்வும் பரிசீலனையும் இன்னமும் தொடர்கின்றன” என்றும் கூறினார்.

மித்ரா நிதியில் நிறைவேற்றப்படும் அனைத்து திட்டங்களும் பரிசீலனைக்கும் கண்காணிப்பிற்கும் உரியவை. அதன் அடிப்படையில் அருள்மிகு லீலாம்பிகை ஆலயக் குழுவினரும் நிதியைப் பெறுவதற்கு முன் அனைத்தையும் சட்ட விதிமுறைப்படி நிறைவேற்ற வேண்டும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சருமான செனட்டர் பொன்.வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.