Home One Line P1 சென்னையில் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் “மலேசியத் தமிழர்கள்” பற்றிய சொற்பொழிவு – “பூச்சாண்டி” சிறப்பு...

சென்னையில் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் “மலேசியத் தமிழர்கள்” பற்றிய சொற்பொழிவு – “பூச்சாண்டி” சிறப்பு காட்சி

1075
0
SHARE
Ad

சென்னை – கடந்த ஜூலை 29-ஆம் தேதி சென்னை தமிழாராய்ச்சி நிறுவனம் மலேசியாவில் வாழும் தமிழர்கள் பற்றிய சொற்பொழிவு ஒன்றுக்கும் விரைவில் வெளியாக இருக்கும் மலேசியத் தமிழ் திரைப்படமான ’பூச்சாண்டி’யின் சிறப்பு காட்சி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மலேசியாவிலிருந்து பூச்சாண்டி திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஸ்வரன் கலியபெருமாள் மற்றும் தயாரிப்பாளர்  முனியாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் கோ. விசயராகவன், மொழிபெயர்ப்பு துறை இயக்குனர் முனைவர் ஔவை அருள் உட்பட அங்கு பயிலும் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பிற்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களும் கலந்துக் கொண்டனர்.

முனைவர் கோ. விசயராகவன் தமது தலமையுரையில், உலக தமிழாராய்ச்சி நிறுவனம் இதுவரை பல துறைகளில் பெயர் பதித்த உலகத் தமிழர்களுக்கு இம்மேடையை வழங்கி சிறப்பு செய்துள்ள நிலையில், முதன் முறையாக ஒரு மலேசியத் திரைப்படத்தை திரையிடுவதற்கு காரணம் அங்குள்ள தமிழர்களின் வாழ்வியலையும் கலையையும் தமிழ்நாட்டில் அங்கு பயிலும் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரே நோக்கத்திற்காகத்தான் என்று கூறினார். இது போன்று உலகத் தமிழர்களின் அடையாளங்களை பிரதிபலிக்கும் படைப்புகளுக்கு இந்நிறுவனம் அளிக்கும் ஊக்கம் நிச்சயம் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

#TamilSchoolmychoice

அடுத்ததாக மொழிபெயர்ப்புத் துறை இயக்குனர் முனைவர் ஔவை அருள் இந்திய தமிழ்த் திரைப்படத் துறையை ஒப்பிடுகையில், மலேசியத் தமிழ் திரைப்படத்துறை இன்னும் வளர்ந்து வரும் நிலையில் இருப்பதனால், இவர்களுக்கு நம்மால் முடிந்த ஆதரவை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அது மட்டுமின்றி மலேசியாவில் இந்தியர்கள் சிறுபான்மையினர் என்றாலும், வெறும் பொருளாதார ரீதியாக மட்டும் பார்க்காமல் அந்த மண்ணில் வாழும் தமிழர்களின் ஒரு கதையை திரைப்படமாகத் தயாரித்த தயாரிப்பாளர் முனியாண்டியையும் அவர் பாராட்டினார்.

இவர்களைத் தொடர்ந்து மலேசியத் தமிழர்கள் பற்றிய ஒரு சொற்பொழிவை ‘பூச்சாண்டி’ படத்தின் இயக்குனர் விக்னேஸ்வரன் நிகழ்த்தினார். இவர் கடந்த சில வாரங்களாக மலேசியாவில் பல மாநிலங்களில் நடத்திய “சமுத்திர புத்திரன்” எனும் மலேசிய தமிழர்களின் வரலாற்று உரையின் ஒரு தொகுப்பாக இது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உரையின் முடிவில் மலேசிய தமிழர்களின் மொழி, வாழ்வியல் மற்றும் அரசியல் நிலைப்பாட்டை பற்றிய பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் “பூச்சாண்டி” திரைப்படத்தின் ஒரு பகுதி திரையிடப்பட்டது. அதை கண்டு களித்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள், திரைப்படத் தயாரிப்புக் குழுவை பாராட்டியதோடு, மலேசியா மக்களின் வாழ்வும் கலாச்சாரமும் நேர்த்தியாக பதிவு செய்யப்படும் இது போன்ற திரைப்படங்கள் இந்தியாவிலும் வெளியிடப்பட வேண்டும் என்கிற வேண்டுகோளையும் படத்தின் தயாரிப்பாளர்களிடம் முன் வைத்தனர்.