Home One Line P1 “ஜாகிரைத் திருப்பி அனுப்புவோம் – இந்திரா காந்தி கணவரைக் கண்டுபிடிப்போம் என்றவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள்” –...

“ஜாகிரைத் திருப்பி அனுப்புவோம் – இந்திரா காந்தி கணவரைக் கண்டுபிடிப்போம் என்றவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள்” – விக்னேஸ்வரன் சாடல்

971
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை தொடங்கிய மஇகாவின் 73-வது பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்து தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தற்போது நாட்டில் பெரிதும் விவாதிக்கப்படும் காட் அரேபிய வனப்பெழுத்து மற்றும் ஜாகிர் நாயக் போன்ற விவகாரங்கள் குறித்து மஇகாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

“இந்திரா காந்தி கணவரை கண்டுபிடிப்போம் என்றும் நாங்களாக இருந்தால் ஜாகிர் நாயக்கை நாட்டை விட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி விடுவோம் என்றும் கூறியவர்கள்தான் இப்போது தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்” என்று காட்டமாகக் கூறிய விக்னேஸ்வரன் தொடர்ந்து ஜாகிர் நாயக் விவகாரத்தில் மஇகாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

நேற்றைய மஇகா மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் விக்னேஸ்வரன்

“ஜாகிர் நாயக் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு விவகாரம். ஜாகிர் நாயக்கை நாட்டிலேயே வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களாக அது உங்கள் விருப்பம். இந்தியாவுக்கு நாடு கடத்தமாட்டோம் என்று கூறுகிறீர்களா அதுவும் உங்களின் விருப்பம். காரணம் நீங்கள்தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். நாங்கள் எதிர்க்கட்சிகள்தான். ஆனால் ஜாகிர் நாயக் மற்ற இனங்களையும், மதங்களையும் இழிவுபடுத்திப் பேசாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் உங்களின் பொறுப்புதான். அதைத்தான் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஜாகிர் நாயக் உள்நாட்டு அரசியலில் தலையிடாமல் இருப்பதும், மற்ற இன, மத விவகாரங்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு” என வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப இந்தியா கோரிக்கை விடுத்தும் மலேசிய அரசாங்கம் அவரைத் திருப்பி அனுப்பாவிட்டால், நாளைக்கு மலேசியாவிலிருந்து சில குற்றவாளிகள் தப்பித்து இந்தியாவுக்கு சென்று ஒளிந்து கொண்டால், அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம் என இந்திய அரசாங்கம் கூறினால், அதற்கும் தற்போதைய அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் எச்சரித்தார்.

“பாஸ் கட்சியோடு நாங்கள் நல்லுறவு கொண்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் பாஸ் கட்சியின் நிலைப்பாட்டை நாங்கள் கண்டித்திருக்கிறோம். ஜாகிர் நாயக் மற்ற இனங்களை இழிவுபடுத்திப் பேசினால் அதைப் பாஸ் கண்டிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” என்றும் வலியுறுத்தினார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மஇகா பொதுப் பேரவையின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் பாஸ் கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதையும் விக்னேஸ்வரன் அறிவித்தார்.

மஇகா தலைமையகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் நிலத்தையும் மஇகா தலைமையகம் வாங்கவிருக்கிறது என்பதையும் விக்னேஸ்வரன் மாநாட்டுப் பேராளர்களுக்குத் தெரிவித்தார்.