Home One Line P1 காஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி

காஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி

958
0
SHARE
Ad

ஸ்ரீநகர் – நேற்று சனிக்கிழமை காஷ்மீர் நிலவரத்தை நேரடியாகக் காணும் நோக்கில்  காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தை வந்தடைந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவினர் அம்மாநிலத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அந்தக் குழுவின் 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக உள்ளிட்ட சில வடநாட்டுக் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியேற முடியாமல் தரையிறங்கிய ஒரு மணி நேரத்திலேயே இவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

#TamilSchoolmychoice

காஷ்மீர் மாநில நிர்வாகம் அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. காஷ்மீர் வழக்க நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவர்களின் வருகை நிலைமையை சீராக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதோடு, அவர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என காஷ்மீர் நிர்வாகம் எச்சரித்திருந்தது.

ஜம்மு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீட்டுக் கொள்ளப்பட்டதிலிருந்து இதுவரையில் எந்த ஒரு தலைவரும் அம்மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

காஷ்மீரின் முன்னாள் அமைச்சர்கள் பாரூக் அப்துல்லா, ஒமார் அப்துல்லா, மெஹ்பூபா முப்டி ஆகியோர் இன்னும் வீட்டுக் காவலில் இருந்து வருகின்றனர்.

இன்னும் தொடர்புகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், காஷ்மீரில் நிலைமை சுமுக நிலைக்குத் திரும்புகிறது என அரசாங்கம் தொடர்ந்து கூறிவருகிறது.

காஷ்மீர் நிலைமை சுமுகமாக இருக்கிறதா என்பதைக் கண்டறியத்தான் நாங்கள் அங்கு சென்றோம் என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.