Home நாடு மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை

மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை

825
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு புதன்கிழமை 4 டிசம்பர் 2019-ஆம் நாள் நடந்த சிறப்பு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில், பிரதமர் துன் மகாதீர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம் பின்வருமாறு:)

  1. மலேசிய நாடாளுமன்றம் 60 ஆண்டுகளை நிறைவு செய்வது என்பது உண்மையிலேயே நாம் இன்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய ஒரு சாதனையாகும். காரணம் மலேசிய நாடாளுமன்றத்தின் முதல் நாடாளுமன்றக் கூட்டம் துங்கு அப்துல் ரஹ்மான் மண்டபத்தில் (இப்போது ஜாலான் அம்பாங்கில் உள்ள மலேசிய சுற்றுலாக் கழக வளாகம் – மேட்டிக்) நடத்தப்பட்ட நாளிலிருந்து இந்த 60 ஆண்டுகளில் நமது நாடாளுமன்றம் சாதகமான பல்வேறு உருமாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் கண்டுள்ளது.
  1. 1962-ஆம் ஆண்டில் சுமார் 18 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டது தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடம். அப்போது முதல், நாட்டின் வரலாற்றைச் செதுக்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேறியிருக்கின்றன. குறிப்பாக, 1963-ஆம் ஆண்டில் மலாயாவாக இருந்த நாடு, மலேசியா என்ற பெயரில் உருவாகியது, 9 ஆகஸ்ட் 1965-இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து சென்றது, புதிய பொருளாதாரக் கொள்கை விவாதிக்கப்பட்டு அரங்கேறியது, தேசிய நடவடிக்கைக் குழுவின் தலைமையகமாகச் செயல்பட்டது என பல வரலாற்று சம்பவங்களைக் கண்டது நமது நாடாளுமன்றக் கட்டடம்.
  1. நமது நாட்டின் நிர்வாக அமைப்பு முறையில் மிக முக்கியமான ஜனநாயக அமைப்பாகத் தொடர்ந்து செயல்பட்டு மலேசிய நாடாளுமன்றம் வெற்றி கண்டிருக்கிறது.
  1. செனட் சபை எனப்படும் நாடாளுமன்ற மேலவை முதன் முதலாக கூட்டரசு மலாயாவில் 11 செப்டம்பர் 1959-ஆம் தேதி கூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 60 ஆண்டுகளை மலேசிய நாடாளுமன்றம் வெற்றிகரமாகக் கடந்திருப்பது நமது கடப்பாட்டையும், அர்ப்பண உணர்வையும், ஜனநாயக நடைமுறைகளையும் எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.
  1. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். எனினும் இத்தகைய காலகட்டத்தில் மலேசிய நாடாளுமன்றத்தின் 60-வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் நாம் ஈடுபடுவதன் மூலம் நமது நாடாளுமன்ற அமைப்பின் அடித்தளத்தின் நோக்கங்களைக் கட்டிக் காக்க உறுதி பூணுவதோடு, இனிவரும் காலங்களில் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை மேலும் முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்லவும், வலுப்படுத்தவும் நாம் புத்தாக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, அதன் மூலம் மக்களுக்கு ஜனநாயக அமைப்பில் மேலும் நம்பிக்கை ஏற்படவும், நமது ஜனநாயகக் கட்டமைப்பு வலிமை பெறவும் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
  1. மலேசிய நாடாளுமன்ற மேலவை தனது முதல் கூட்டத்தை நடத்திய 11 செப்டம்பர் 1959 முதற்கொண்டு இப்போது 60 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்திருந்தாலும் நாடாளுமன்ற மேலவை நமது நாட்டிற்குத் தேவையில்லை, அதை இரத்து செய்ய வேண்டும் என்ற குரல்கள் அவ்வப்போது கேட்கவே செய்கின்றன. அதே வேளையில் நாடாளுமன்ற மேலவையை மேலும் சீர்திருத்திக் கட்டமைப்பதன் மூலம் அந்த அமைப்பு மக்களின் நலன்களைத் தொடர்ந்து தற்காக்க முடியும் என்ற கருத்தும் பலரிடையே நிலவுகிறது.
  1. நமது நாட்டின் சட்ட உருவாக்கம், நீதி பரிபாலனம் அம்சங்களின் தொடர்பில் டேவான் ராயாட் எனப்படும் மக்களவையின் முடிவுகளை மறுபரிசீலனை செய்வதிலும், சீர்தூக்கிப் பார்ப்பதிலும், வலிமைப்படுத்துவதிலும் நாடாளுமன்ற மேலவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் என நான் உண்மையிலேயே நம்புகிறேன். காரணம், மக்களவையை விட மேலவை மேலும் கூடுதலான சுதந்திரத்தைக் கொண்டுள்ளதோடு, கட்சிக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்ற நெருக்கடிகள் மக்களவையைப் போல் இல்லாமல் மேலவை உறுப்பினர்கள் தன்னிச்சையாகவும் இங்கே செயல்பட முடியும். அசிங்கமான அருவருக்கத்தக்க அரசியலை நடத்தும் களமாகவும் மேலவை இருக்கப் போவதில்லை.

நாடாளுமன்ற மேலவையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள்

  1. தற்போதிருக்கும் நாடாளுமன்றக் கட்டமைப்பின் நிர்வாகத்தையும், நடைமுறைகளையும் மேலும் சிறப்பாக்க வேண்டும், வலிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மலேசிய நாடாளுமன்ற அமைப்பைச் சீர்திருத்தும் நடவடிக்கைகள் 2018-இல் தொடங்கப்பட்டன. இந்த சீர்திருத்தங்களுக்கான குழுவை அமைத்ததற்காக மாண்புமிகு பிரதமர் துன் மகாதீர் முகமட் அவர்களுக்கும், அமைச்சரவைக்கும் நான் முதன் முறையாக இந்த வேளையில் நன்றி கூற விரும்புகிறேன்.
  1. நாடாளுமன்ற மறுசீரமைப்பு குழுவை அமைத்திருப்பதானது, நாடாளுமன்ற மேலவையின் உண்மையான பணிகளை வலிமைப்படுத்தவும், அதன் உண்மையான நோக்கங்களைப் பூர்த்தி செய்யவும் உதவும் ஒரு நடவடிக்கையாகும்.

10.  மேற்குறிப்பட்ட நாடாளுமன்ற சீர்திருத்தக் குழுவிடம் 9 பரிந்துரைகள்          அடையாளம் காணப்பட்டு வழங்கப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்ற சுதந்திரத்தையும் நாடாளுமன்ற மேலவையின் பங்களிப்பையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அந்தப் பரிந்துரைகள் பல அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.

11. எனினும் இந்த சீர்திருத்தங்கள் புதியவை அல்ல. ஏற்கனவே ரெய்ட் அரசியலமைப்பு சீரமைப்பு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டவைதான். நாடாளுமன்ற மேலவைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறைகள் எதிர்வரும் காலத்தில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அப்போதே, ஆரம்பத்திலேயே ரெய்ட் ஆணையம் நமக்கு நினைவூட்டியது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

#TamilSchoolmychoice

12. நாடாளுமன்ற மேலவைக்கு நியமனம் மூலம் இடம் பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை காலப் போக்கில், எதிர்காலத்தில் குறைக்கப்பட வேண்டும் அல்லது அத்தகைய நடைமுறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் ரெய்ட் ஆணையம் அப்போதே பரிந்துரை செய்திருந்தது.

  1. நாடாளுமன்ற மேலவைக்கான சீர்திருத்தம் என்பது நாடாளுமன்றக் கட்டமைப்பை, உள்அமைப்பை மாற்றியமைக்கும் நோக்கம் கொண்ட முயற்சியல்ல. மாறாக, அதன் முழு பலத்தையும், பலனையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் ஒரு முயற்சியே ஆகும். இதன் மூலம் நாடாளுமன்ற மேலவை இனிவரும் காலங்களில் மக்களவை முடிவுகளை மறுபரிசீலனை செய்யும், சமன்படுத்தும் ஓர் அமைப்பாக மேலும் திறம்பட செயலாற்ற முடியும்.
  1. நாடாளுமன்ற சீர்திருத்தங்களுக்கான நடைமுறை வெற்றி பெறுவதற்கு அது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டங்களுக்கு ஏற்ப, அதன் உணர்வுகளுக்கு ஏற்ப செயல்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற சீர்திருத்தங்கள் நீண்ட காலத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய நடைமுறைகளைக் கொண்டிருக்கும் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே, அதனை முழுமையாக அடைவதற்காக நமக்கு தொடர்ச்சியான கடப்பாடு தேவை.
  1. எனினும் நாட்டின் அரசியல் கட்சிகள் சீர்திருத்தங்களை நிறைவேற்ற, நிலைநிறுத்த, உண்மையிலேயே கடப்பாடு கொண்டிருந்தால், எதிர்காலத்தில் நாம் இதைச் சாதிக்க ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு தந்து அதன் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என்பதோடு, நாட்டின் அரசாங்க நடைமுறைகளின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
  1. நாடு மேம்பாடு காண வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடும், உத்வேகத்தோடும், உற்சாகத்தோடும் நாம் செயல்பட்டால், நாம் அனைவரும் விரும்பும் நமது நாட்டில் இதுபோன்ற சீர்திருத்தங்கள் கண்டிப்பாக செயலாக்கம் பெறும் என்பதில் ஐயமில்லை.
  1. நாட்டின் அரசியலமைப்பு சட்டங்களுக்கு ஏற்ப, நாடாளுமன்ற மேலவை தனது பங்களிப்பை சிறப்பாக வழங்க, எல்லா வகையிலும் முழு அளவில் பாடுபட்ட அனைத்துத் தரப்புகள் குறிப்பாக நாடாளுமன்றப் பணியாளர்கள் அனைவரின் பணிகள் குறித்தும் நான் பெருமிதம் கொள்கிறேன்.
  1. நமது ஜனநாயக முறையிலான நாடாளுமன்ற அமைப்பும், மாமன்னரோடு கூடிய ஆட்சிமுறையைக் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டமும், நமது சுதந்திரத்தைப் போராடிப் பெற்றுத் தந்த, நமது மூதாதையத் தலைவர்களின் போராட்டங்களின் விளைவாக நமக்குக் கிடைத்திருக்கும் பாரம்பரியத் சொத்தாகும் என்பதை இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
  1. அவர்கள் விட்டுச் சென்றிருக்கும் இந்தப் பாரம்பரியச் சொத்தை நாம் தற்காக்க வேண்டும் என்பதோடு, மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை செயல்படுத்த நாம் முனையும் அதே வேளையில், இந்த ஜனநாயக அமைப்பின் பாதுகாவலர்களான நாம், நாடாளுமன்றத்தின் மாண்பையும், இறையாண்மையையும், எப்போதும் போற்றி வர வேண்டும். அதன் மூலமே நமது எதிர்கால சந்ததியினரின் தேவைகளும், எதிர்பார்ப்புகளும், நிறைவேற்றப்படுவதை நாம் உறுதி செய்ய முடியும்.
  1. நாடாளுமன்றத்தின் 60-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த வேளையில் இதே நாடாளுமன்றத்தில் நமக்கு முன்னர் சேவையாற்றிய நமது முன்னோர்களின் தியாகங்களை நாம் மறந்து விடக் கூடாது என்பதோடு, அவர்களின் அந்தத் தியாகங்கள்தான் நாம் இங்கே இன்று அமர்ந்திருக்கும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்காக நாம் எப்போதும் கடமைப்பட்டவர்களாவோம்.
  1. நாடாளுமன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் நமது நாடாளுமன்றத்தின் மதிப்பும் மாண்பும் மேலும் பன்மடங்கு உயர்ந்து, மக்களின் நலன்களையும், ஜனநாயக மரபுகளையும் பாதுகாக்கும் உன்னத அமைப்பாக நமது நாடாளுமன்றம் திகழ வேண்டும் என நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதன் மூலம் நமது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை மீதிலான மக்களின் நம்பகத் தன்மை மேலும் அதிகரிக்கும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

தொடர்புடைய செய்தி :

மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்