Home One Line P2 உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் தமிழகம்

1253
0
SHARE
Ad

சென்னை – இரண்டு கட்டங்களாக, முறையே டிசம்பர் 27, 30 தேதிகளில் நடத்தப்பட்ட தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை வியாழக்கிழமை (ஜனவரி 2) நடைபெறுவதால், அதன் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படக் கூடாது என சட்டப்பஞ்சாயத்து இயக்கம் என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. எனினும் அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு ஒன்றை சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சமர்ப்பித்திருக்கிறது.

எனினும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.

முதற்கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற போது 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.

அதேபோல், மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்த போது இதில் 77.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

சில புகார்களின் அடிப்படையில் சில தொகுதிகளில் மறு வாக்களிப்பும் நடைபெற்றது.