Home வணிகம்/தொழில் நுட்பம் “2020-இல் வணிகத்தில் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வருவோம்” – கோபாலகிருஷ்ணனின் பொங்கல் செய்தி

“2020-இல் வணிகத்தில் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வருவோம்” – கோபாலகிருஷ்ணனின் பொங்கல் செய்தி

755
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உழவுத் தொழிலுக்கு வந்தனம் செய்வோம்” என உழைப்பிற்கு உயர்வு தேடித் தரும் உழவுத் தொழிலைப் போற்றும் விழாவாக பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. இந்நன்னாளில் உணவு படைக்கும் உழவர்களுக்கு உரிய மரியாதையையும் நன்றியையும் செலுத்தும் பொருட்டு பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், பொங்கல் திருநாளைக் கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை மைக்கி எனப்படும் மலேசிய இந்தியர் வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தேசிய தலைவர் டத்தோ நா. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துக்கொண்டார்

“தைப் பிறந்தால் வழிப் பிறக்கும்” என்ற முதுமொழி வாழ்க்கையின் நம்பிக்கையைக் குறிக்கின்றது. செழிப்பான தை மாதம் அனைவரது வாழ்விலும் செழிப்பான காலத்தைக் கொண்டு வரும் என்பதும் நம்பிக்கை. எனவே நாம் அனைவரும் இடர்கள் நீங்கி நல்வழிப் பிறக்கும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, இவ்வாண்டு தைத்திருநாளானது மூலம் எல்லோரது வாழ்விலும் புதியதொரு வழிப் பிறந்து நற்காரியங்கள் அனைத்தும் ஈடேறவும் வேண்டும். மேலும், அனைவரது வாழ்க்கையிலும் பொருளாதாரத்தில் நல்லதொரு முன்னேற்றத்தைக் கண்டு, வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்றும் கோபாலகிருஷ்ணன் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துக் கொண்டார்.

“செய்யும் தொழிலே தெய்வம் என்ற முதுமொழிக்கேற்ப நம்முடைய வியாபாரத்தை மிகச் சிறப்பாக நாம் அனைவரும் செய்திட வேண்டும். வர்த்தகத்தில் இந்தியர்கள் மேம்படும் போது நமது பொருளாதாரமும் மேம்பாடு காணும். அத்தருணத்தில் அனைத்து நிலைகளிலும் நமது இந்திய சமுதாயம் மேம்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகிப் பண்டிகையில் பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் நம்மிடையே காலம் காலமாக இருந்து வருகின்றது. ஆனால், அது வெறும் பொருட்களை மட்டும் எரிப்பதோடு நின்று விடாது, காலத்திற்கு உதவாத, பயன்படாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் தவிர்த்து, காலத்திற்கேற்ப வியாபாரத்தை மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் வகையில், வர்த்தகத்தில் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொண்டு சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதனை நம் இந்திய வர்த்தகர்கள் தெளிந்து உணர வேண்டிய நேரமிது” என்றும் கோபாலகிருஷ்ணன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“மலேசிய இந்திய சமுதாயம், வர்த்தகத்தில் ஈடுபடும் சமுதாயமாக மாறவேண்டும். ஆதிகாலம் தொட்டு கடல் கடந்து வியாபாரம் செய்தவர்கள் நாம். நமக்குள் நிறைய திறமைகள் வைத்துள்ளோம். அத்திறமைகளை நாம் வியாபாரத்தில் ஈடுபடுத்தி நம் குடும்பத்தையும் சமுதாயத்தையும் மேம்படுத்த வேண்டும் என டத்தோ நா.கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். உலகெங்கும் வாழும் பெருமக்கள் அனைவரும் உவகையுடன் கொண்டாடும் இந்த பொங்கல் திருநாள் வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடி மகிழ வேண்டும். ‘இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்; இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்’ என அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.