Home One Line P1 “அன்வார் ஆதரவாளர்கள் தினமும் சாடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் எப்படி நாட்டை ஆள முடியும்?” சைட் சாதிக்...

“அன்வார் ஆதரவாளர்கள் தினமும் சாடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் எப்படி நாட்டை ஆள முடியும்?” சைட் சாதிக் கேள்வி

762
0
SHARE
Ad

கோலாலம்பூர் – துன் மகாதீர் பதவி விலகுவதற்கான தேதி நிர்ணயம் தொடர்பில் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களிடையே நாளுக்கு நாள் கருத்து வேறுபாடுகளும், முட்டல் மோதல்களும் அதிகரித்து வரும் வேளையில், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் புதிதாக அந்த மோதலில் இணைந்திருக்கிறார்.

நம்பிக்கைக் கூட்டணியின் இளைஞர் பகுதித் தலைவருமான சைட் சாதிக் “அன்வார் இப்ராகிமின் தீவிர ஆதரவாளர்கள் தினமும் மகாதீர் குறித்து எதிர் கருத்துகளையே வெளியிட்டு வருவதால் நாட்டை நிர்வகிப்பதில் மகாதீர் சிரமத்தை எதிர்நோக்குகிறார்” என சாடினார்.

அன்வாரின் அந்த ஆதரவாளர்கள் ராம்கர்ப்பால் சிங், பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி, ரோனி லியூ, ரபிசி ரம்லி, அப்துல்லா சானி, அக்மால் நசீர், சுக்ரி ரசாப் மற்றும் சைட் ஹூசேன் அலி ஆகியோர் என சைட் சாதிக் பகிரங்கமாக பெயர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அன்வாரை அடுத்த பிரதமராக நியமிக்கும் வாக்குறுதியை மகாதீர் மீறியதே இல்லை என்றும் தெளிவுபடுத்திய சைட் சாதிக், “எப்போது இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டாலும் தனது நிலைப்பாட்டில் இருந்து மகாதீர் விலகியதே இல்லை. அன்வாரிடம்தான் பதவியை ஒப்படைப்பேன் என்று கூறி வந்திருக்கிறார். நம்பிக்கைக் கூட்டணியில் ஒருங்கிணைந்த முடிவுக்கு மகாதீர் எப்போதுமே மரியாதை தருவதோடு அதற்குக் கட்டுப்பட்டும் நடந்து கொள்கிறார்” என்றும் சைட் சாதிக் மகாதீரைத் தற்காத்தார்.

சைட் சாதிக் தனது கருத்துகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு முன்னதாக “தொடர்ந்து 5 இடைத் தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் என்ற முறையில் மகாதீர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்” என ராம் கர்ப்பால் சிங் கூறியிருந்தார். மகாதீருக்கும், அன்வாருக்கும் இடையிலான பதவிப் பரிமாற்றம் தொடர்பான கால நிர்ணயம் அறிவிக்கப்படாததே நம்பிக்கைக் கூட்டணி மீதான பொதுமக்களின் ஆதரவு சரிந்து வருவதற்கான காரணம் எனவும் ராம் கர்ப்பால் தெரிவித்திருந்தார்.