Home 13வது பொதுத் தேர்தல் பாஸ் கட்சியின் சின்னத்தில் சீன, இந்திய வேட்பாளர்கள் போட்டி!

பாஸ் கட்சியின் சின்னத்தில் சீன, இந்திய வேட்பாளர்கள் போட்டி!

559
0
SHARE
Ad

Kumuthaஏப்ரல் 13 – கடந்த 2008ஆம் பொதுத் தேர்தலிலேயே தனது கட்சி சார்பாக சீன, இந்திய வேட்பாளர்களை போட்டியிட வைத்த பாஸ் இந்த முறையும் அவ்வாறே செய்கின்றது.

#TamilSchoolmychoice

அதன்படி, பாஸ் ஆதரவாளர்கள் சங்க தலைவரான ஹூ பாங் சௌ ஜோகூரிலுள்ள ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்.

இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் தேசிய முன்னணி-மசீச சார்பில் போட்டியிட்ட மசீசவின் வீ கா சியோங், பாஸ் கட்சி வேட்பாளரை 13,909 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து வெற்றி பெற்றார். அவர் நடப்பு கல்வி துணை அமைச்சரும் ஆவார்.

இந்த முறை அவர் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவருக்கும் பாஸ் சின்னத்தில் போட்டியிடும் ஹூவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த முறை 42,991 வாக்குகளைக் கொண்ட ஆயர் ஈத்தாம் தொகுதியில் 56 சதவீதம் மலாய்க்காரர்கள் ஆவர். எஞ்சிய 38 சதவீத வாக்காளர்கள் சீனர்கள். இந்தியர்கள் 4 சதவீதம் உள்ளனர்.

குமுதா மீண்டும் போட்டி

கடந்த முறை திராம் சட்டமன்றத் தொகுதியில் பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பாஸ் ஆதரவாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆர்.குமுதா ராமன் இம்முறையும் மீண்டும் அதே சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்றார்.

இந்த தொகுதி தெப்ராவ் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளடங்கியதாகும்.

கடந்த பொதுத் தேர்தலில் 8,178 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளரிடம் குமுதா தோல்வியடைந்தார்.

ஆனால், இந்த முறை ஜோகூரில் மக்கள் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுவதால், குமுதா இந்த முறை வெல்வாரா என்ற ஆர்வம் இந்திய சமூகத்தில் எழுந்துள்ளது.

அவ்வாறு அவர் வென்றால், பாஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெல்லும் முதல் இந்திய வேட்பாளராக அவர் திகழ்வார்.

இந்த முறை திராம் சட்டமன்ற தொகுதியில் 46,724  வாக்காளர்கள் உள்ளனர். அதில் மலாய்க்காரர்கள் 53 சதவீதமும், சீனர்கள் 30 சதவீதமும் இந்தியர்கள் 15 சதவீதமும் ஆவர்.