Home இந்தியா நெசவாளர்களுக்கு தனியாக பசுமை வீடுகள்- ஜெயலலிதா

நெசவாளர்களுக்கு தனியாக பசுமை வீடுகள்- ஜெயலலிதா

484
0
SHARE
Ad

jeyalalithaசென்னை. ஏப்ரல் 23- நெசவாளர்களுக்கு தனியாக பசுமை வீடுகள் கட்டும் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கைத்தறி, துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தேமுதிக உறுப்பினர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் (சேலம் வடக்கு), பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 60 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான நெசவாளர்கள் உள்ளனர். மின்வெட்டு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு சூரிய மின் சக்தி வசதியுடன்கூடிய பசுமை வீடுகளை கட்டித்தர வேண்டும் என்றார்.

இதே கருத்தை வலியுறுத்திய எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் (ஆலந்தூர்), தமிழக அரசின் பசுமை வீடுகள் கட்டும் திட்டம் சிறப்பான திட்டமாகும். அரசு வழங்கும் தொகையுடன் தாங்கள் சேமித்த பணத்தையும் சேர்த்து சிறப்பாக பொதுமக்கள் வீடு கட்டியுள்ளனர். பொது கணக்குக் குழுத் தலைவர் என்ற முறையில் சுற்றுப் பயணத்தில் இதனை நான் நேரில் பார்த்தேன். மின் வெட்டினால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கும் அதுபோல சூரிய மின் வசதியுடன்கூடிய பசுமை வீடுகளை கட்டித்தர வேண்டும் என்றார்.

#TamilSchoolmychoice

அவருக்குப் பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:-

பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 60 ஆயிரம் வீடுகள் வீதம் 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்ட உள்ளன. நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தனியாக வீடுகள் கட்டுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

அதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, அழகாபுரம் ஆர். சுந்தரராஜ் (தேமுதிக), அ. சௌந்திரராஜன் (மார்க்சிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி) ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.