Home நாடு ஒற்றுமைப் பொங்கல் விழாவில் நஜிப் இந்திய சமுதாயத்திற்கு அறிவித்த சலுகைகள்

ஒற்றுமைப் பொங்கல் விழாவில் நஜிப் இந்திய சமுதாயத்திற்கு அறிவித்த சலுகைகள்

743
0
SHARE
Ad

Najib-Feature---2கோலாலம்பூர், பிப்ரவரி 2 –  மிகவும் பிரம்மாண்டமான முறையில் ம.இ.காவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஒற்றுமைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நஜிப் துன் ரசாக், எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்திய சமுதாயத்தை குறி வைத்து சில முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டார்.

 

எல்லா தமிழ்ப் பள்ளிகளும் முழு உதவி பெறும்

#TamilSchoolmychoice

தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகளில் பல, தனியார் நிலங்களில் இருப்பதால் அரசாங்கத்தின் முழு உதவிகளைப் பெற முடியாமல் இதுவரை இருந்து வருகின்றன.

மலேசிய இந்தியர்களின் நெடுநாளைய மனக் குறையான இந்த விவகாரத்தை தீர்க்கும் வண்ணம், இனி எல்லா தமிழ்ப் பள்ளிகளும் முழு உதவி பெற்ற பள்ளிகளாக மாறும் என்றும் இதற்காக துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான மொய்தீன் யாசினுடன் பேசி கட்டம் கட்டமாக இந்த மாற்றங்கள் நிகழும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.

டேஃப் கல்லூரி தொழில் நுட்ப பல்கலைக் கழகமாக அங்கீகாரம்

நீண்ட காலமாக ம.இ.காவின் எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் டேஃப் கல்லூரி, பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களை தொழில் நுட்ப வல்லுநர்களாகவும், சொந்த வணிகங்களில் ஈடுபடும் அளவுக்கு தொழில் கல்வி கற்றவர்களாகவும் உருமாற்றி இருக்கின்றது.

அந்த கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் டேஃப் கல்லூரி தற்போது தொழில் நுட்ப பல்கலைக் கழகமாக அங்கீகரிக்கப்படுகின்றது. இதன் மூலம் அதில் பயிலும் மாணவர்கள் டிப்ளமா மற்றும் சான்றிதழ் பயிற்சிகள் மட்டுமின்றி பட்டப் படிப்பையும் மேற்கொள்ள முடியும்.

மேலும் பல புதிய மாணவர்களையும், வெளிநாட்டு மாணவர்களையும் கூட இந்த அங்கீகாரத்தினால் டேஃப் கல்லூரி இனி தன்வசம் ஈர்க்க முடியும்.

இந்தியர் நலன்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு 3 மில்லியன் மான்யம்

இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வரும் இந்தியர் நலன்கள் மீதான அமைச்சரவைக் குழு மேலும் செம்மையாகவும் சிறப்புடனும் செயல்பட 3 மில்லியன் மான்யம் ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.

 3 சதவீதமாக பங்குடமை உயர்வு

மலேசிய இந்தியர்களின் பங்கு சொத்துடமை 3 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பையும் பிரதமர் செய்தார். ஆனால் அதற்கான நடைமுறைகள், வழிமுறைகள் எதனையும் அவர் அறிவிக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக என்மீதும் தேசிய முன்னணி மீதும் நம்பிக்கை வையுங்கள் என்றும் மலேசிய இந்தியர்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏமாற்ற மாட்டேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியர்களை அதிகமாக உறுப்பினர்களாக கொண்டுள்ள ம.இ.கா, கெராக்கான், பிபிபி கட்சிகளுடன் இணைந்து பேசி ஒன்றாக பணியாற்றுவதன் மூலம் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வதை உறுதி செய்வோம் என்றும் பிரதமர் முழக்கமிட்டார்.