Home நாடு பெட்டாலிங் ஜெயாவில் கறுப்பு பேரணி 505 – 70,000 பேர் ஜனநாயக ஒளி...

பெட்டாலிங் ஜெயாவில் கறுப்பு பேரணி 505 – 70,000 பேர் ஜனநாயக ஒளி விளக்கேற்றி போராட்டம்

427
0
SHARE
Ad

PJ-Amcorp-Mall-Featureமே 26 நேற்று மாலையில் பெட்டாலிங் ஜெயா அம்கோர்ப் மால் வணிக வளாகத்தின் முன்பு உள்ள திடலில் நடைபெற்ற கறுப்பு பேரணி 505 கூட்டத்திற்காக 70,000 பேர் மக்கள் வெள்ளம் குழுமியது.

#TamilSchoolmychoice

இது சட்டவிரோதப் பேரணி என உள்துறை அமைச்சு எச்சரித்தபோதும் இத்தனை பேர் திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகத்திற்காக ஒளி விளக்கேற்றுவோம் என்ற நோக்கத்தோடு கூடிய கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கைகளில் விளக்குகளை ஏற்றி அந்த வட்டாரத்தையே ஒளிமயமாக்கினர்.

ஏறத்தாழ 11 மணியளவில் கூட்டத்தின் அறிவிப்பாளரான பட்ருல் ஹிஷாம், அந்த வட்டாரத்தின் பொது விளக்குகளை அணைக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பின்னர் வந்திருந்தவர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த மின்கலத்தால் (பேட்டரி) இயங்கும் சிறிய விளக்குகளை ஒரே நேரத்தில் ஏற்றி உயர்த்திக் காட்டியது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததோடு, அந்த இடத்தையே ஒளி வெள்ளமாக மாற்றிக் காட்டியது.

இந்த ஒளியேற்றும் நிகழ்வுக்கான காரணம், ஜனநாயகத்திற்காகவும்,  மாணவர் போராட்டவாதி அடாம் அட்லியின் விடுதலைக்காகவும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது.

மாணவர் போராட்டவாதி அடாம் அட்லி பினாங்கில் உடல் நலிவுற்றிருக்கும் தனது தாயாரைச் சந்திக்க சென்று உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அன்வார் இப்ராகிம் பேருரை

கூட்டத்தின் முக்கிய அங்கமாக உரையாற்றிய எதிர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், கடந்த பொதுத் தேர்தலில் தங்களால் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கும் அதனால் தாங்கள் முன்மொழிந்த அரசியல் மாற்றங்களையும், திட்டங்களையும் அமுல்படுத்த முடியாமல் போனதற்கும் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அன்வார் இப்ராகிம் கூறினார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நஜிப்புக்கு தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து கூறினாலும், அது தேர்தல் சுதந்திரமாகவும், முறைகேடுகள் இன்றியும் நடந்திருந்தால் மட்டுமே என்ற அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்து என்றும் அன்வார் கூறினார்.

அதனால், தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் உடனடியாக தங்களின் பொறுப்புக்களில் இருந்து ராஜினாமா செய்யவேண்டும் என்றும் அன்வார் அறைகூவல் விடுத்தார்.

மேலும் சில கறுப்பு 505 பேரணிகள் நடத்தப்படும் என்றும் எல்லாப் பேரணிகளும் அமைதியான முறையில் நடத்தப்படும் என்றும் அன்வார் இப்ராகிம் கூறினார்.

நூருல் இசா உரை

இந்த கூட்டத்தில் உரையாற்றிய லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா, தேர்தல் ஆணையம் தங்களின் முறைகேடுகளுக்காக பதில் சொல்லியாக வேண்டும் என்றும் சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது என்றும் கூறினார்.

மன உறுதியோடு போராடுபவர்கள் இறுதி வரை நிலைத்து நிற்பர் என்றும் கூறிய நூருல், இந்த முறை தேர்தல் ஆணையம் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயங்களை, தேசிய முன்னணி அரசாங்கத்தின் விருப்பப்படி மாற்றி அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் இதற்காக பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவோம் என்றும் சூளுரைத்தார்.

அம்பிகா சீனிவாசனும் உரை

இந்த கூட்டத்தில் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசனும் உரையாற்றினார்.

முதலில் தனக்கு இந்த கூட்டத்தில் உரையாற்றும் எண்ணம் இல்லை என்றும் ஆனால், அடாம் அட்லி, தியான் சுவா போன்றவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையினால் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு உரையாற்ற வந்திருப்பதாகவும் அம்பிகா கூறினார்.

மேலும் பல பாஸ் மற்றும் பிகேஆர் கட்சித் தலைவர்களும் இந்த கூட்டத்தில் உரையாற்றினர்.

தேர்தல் முறைகேடுகள் குறித்த மக்களின் உணர்ச்சி வெள்ளம் இன்னும் எழுச்சிகரமாகவே இருக்கின்றது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது பெட்டாலிங் ஜெயாவின் கறுப்புப் பேரணி 505!