Home நாடு தடுப்புக் காவல் மரணங்கள்: அரசு சாரா இயக்கங்கள் அமைச்சர் பால் லோவுடன் சந்திப்பு

தடுப்புக் காவல் மரணங்கள்: அரசு சாரா இயக்கங்கள் அமைச்சர் பால் லோவுடன் சந்திப்பு

443
0
SHARE
Ad

Vel-Paari-Sliderஜூன் 4 – நாட்டில் இந்திய சமுதாயத்தில் பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கும் தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பாக அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் துறை அமைச்சர் பால் லோ இன்று சந்திப்பொன்றை நடத்தியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கமளிப்பதற்கு முன்னால், அரசு சாரா இயக்கப் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிவதற்காக அமைச்சர் இந்த சந்திப்பை நடத்தியதாக, இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ம.இ.காவின் வியூக இயக்குநர் எஸ்.வேள்பாரி (படம்) கூறினார்.

இந்த கூட்டம் தொடர்பாக எங்களுக்கு மிகுந்த திருப்தி. அமைச்சர் எங்களுடன் வெளிப்படையாகவும் நட்போடும் பேசினார். எங்களின் போராட்டத்திற்கு அமைச்சரவையின் ஒத்துழைப்பைப் பெற முயற்சிக்கும் அமைச்சரின் முயற்சிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் வேள்பாரி கூறினார்.

எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும் ஆத்திரமும் பெருகியுள்ளதால், அரசாங்கம் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்றும் வேள்பாரி தெரிவித்தார்.

2000ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை 64 மலாய்க்காரர்கள், 30 சீனர்கள், 28 இந்தியர்கள் இதுவரை தடுப்புக் காவலில் மரணமடைந்திருப்பதாக தான் புள்ளி விவரங்களை அமைச்சர் லோவிடம் வழங்கியிருப்பதாக மற்றொரு பிரதிநிதியான எஸ்.கோபிகிருஷ்ணன் விளக்கமளித்தார்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தடுப்புக் காவலில் மரணமடைந்தவர்களில் இந்தியர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்பதையும் தான் அமைச்சரிடம் சுட்டிக் காட்டியதாக கோபி கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

காவல்துறை மீதான புகார்களையும் முறைகேடுகளையும் விசாரிக்கும் சுதந்திர ஆணையம் அமைவதுதான் பொருத்தமானதாக இருக்கும், காரணம் அதன் உறுப்பினர்கள் மாமன்னரால் நியமிக்கப்படுவதால் அது நடுநிலையான அமைப்பாக இருக்கும் என்றும் கோபி கிருஷ்ணன் கூறினார்.

இரு தரப்பினரும் விடுத்த கூட்டு அறிக்கையில், தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பாக அரசு சாரா இயக்கங்கள் நடத்த திட்டமிட்டிருந்த வீதிப் பேரணியை தாங்கள் நடத்தப் போவதில்லை என்றும் அமைச்சரவையின் முடிவுக்காக காத்திருக்கப் போவதாகவும் இயக்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

இந்த சந்திப்பை பிரதமர் துறையின் பெமாண்டு துறையின் இயக்குநர் டி.ரவீந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.