Home நாடு உதயகுமாருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை!

உதயகுமாருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை!

535
0
SHARE
Ad

UTHAYAகோலாலம்பூர், ஜூன் 5 – தேச நிந்தனைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் ஹிண்ட்ராப் நிறுவனர் உதயகுமாருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கும், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கும் இடையே, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு உதயக்குமார் எழுதிய கடிதத்தில், மலேசியாவில் ஏழை இந்திய சமுதாயம் சமூக ரீதியில் ‘இன ஒழிப்பு’ செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

நீதிபதி அகமட் சம்ஸானி முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், தனது பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைக்க உதயக்குமாருக்கு இரண்டு முறை வாய்ப்பளிக்கப்பட்டும் அவர் மௌனம் காத்தார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் இந்திய சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்படும் இனவாதக் கொள்கைகளை எதிர்த்தும், இவ்வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் தான் மௌனம் காப்பதாக நீதிமன்றத்தில் உதயக்குமார் தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று பிற்பகல் இவ்வழக்கில் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேல் முறையீடு செய்யும் திட்டம் இல்லை

நீதிமன்றத்தில் உதயகுமாருக்கு சிறை தண்டனை விதித்துத் தீர்பளித்ததும், அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் “அம்னோ இனவாதம் நிறைந்தது” என்று கூச்சலிட்டனர்.

எனவே உதயகுமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் வேறு வாயில் வழியாக வெளியே கொண்டு செல்லப்பட்டார்.

உதயகுமாரின் வழக்கறிஞரான எம்.மனோகரனிடம், தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுவரை மேல் முறையீடு செய்வது தொடர்பாக எந்த ஒரு தகவலும் தனக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

காஜாங் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள உதயகுமாரின் தண்டனை காலம் இன்று முதல் தொடங்குகிறது.

அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்

ஹிண்ட்ராப் இயக்கத்தின் நிறுவனரான உதயகுமார் இன்று சிறை செல்லப்படும் அதே வேளையில், அவரது உடன் பிறந்த தம்பியும், ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவருமான வேதமூர்த்தி இன்று பிற்பகல் பிரதமர் துறையின் துணையமைச்சராகப் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.