Home இந்தியா ராஜினமாவை திரும்பப் பெற அத்வானி பிடிவாதம்: தலைவர்கள் சமரச முயற்சி தோல்வி

ராஜினமாவை திரும்பப் பெற அத்வானி பிடிவாதம்: தலைவர்கள் சமரச முயற்சி தோல்வி

468
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூன். 11- பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானி நேற்று, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு, தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவி கொடுத்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை விரும்பாமல் அவர் ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.

05TH-CITY-ADVANI_263336eதனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்குக்கு அனுப்பியுள்ளார். என்றாலும் பாராளுமன்ற பா.ஜ.க. தலைவர் பதவியிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் தலைவர் பதவியிலும் தொடர்கிறார்.

#TamilSchoolmychoice

கட்சிப் பொறுப்புகளில் இருந்து அத்வானி விலகி இருப்பது, பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பா.ஜ.க.வுக்கு கட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

அத்வானியின் ராஜினாமாவை பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து நேற்றிரவு பா.ஜ.க. ஆட்சி மன்றக்குழு அவசரம், அவசரமாக கூடியது. அந்த கூட்டத்தில் அத்வானியின் ராஜினாமா நிராகரிக்கப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அந்த தீர்மானம் உடனடியாக அத்வானிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு அத்வானியை ராஜ்நாத்சிங், சுஷ்மாசுவராஜ், அனந்த குமார், வெங்கய்யா நாயுடு ஆகியோர் தொடர்பு கொண்டு சமரசம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

நேற்றிரவு நீண்ட நேரம் பா.ஜ.க. தலைவர்கள் அத்வானியுடன் பேச்சு நடத்தினார்கள். ஆனால் அத்வானி மனம் மாறவில்லை. அவர் தனது விலகல் முடிவில் மிகவும் பிடிவாதமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இன்று (செவ்வாய்க் கிழமை) 2-வது நாளாக அத்வானியை சமரசம் செய்யும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்புகளில் உள்ள எல்லா தலைவர்களும் அத்வானியுடன் பேசிவிட்டனர். ஆனால் அத்வானி மனம் மாறவில்லை.

பா.ஜ.க. தன் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக கருதும் அத்வானி, கட்சி விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ். தலையீடு அதிகம் இருப்பதை விரும்பவில்லை. மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவதில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய பங்கு வகிப்பதை அவர் எதிர்த்தார்.

மேலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பேச்சு அத்வானியிடம் குமுறலை ஏற்படுத்தி விலகல் வரை கொண்டு வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் இன்று அத்வானியை சந்தித்து சமரச முயற்சிகளில் ஈடுபட்டனர். அந்த சமரச முயற்சிக்கும் வெற்றி கிடைக்கவில்லை.

அத்வானியை சாந்தப்படுத்த, மோடியை பிரசாரக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கலாம் என்று பா.ஜ.க.வில் ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர். ஆனால் மோடிக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. அதற்கு பதில் அத்வானியை சமாதானம் செய்து விடலாம் என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர்.

எனவே அத்வானியை சமரசம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அத்வானி தன் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ளாவிட்டால், நரேந்திர மோடியும் நேரில் சென்று சமரச முயற்சிகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

அடுத்த 2 நாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்ட மோடி, டெல்லி செல்ல தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே அத்வானி ஏற்கனவே கூறியதுபோல 4 மாநில சட்டசபை தேர்தலுக்கு தனி பிரசார குழுவை ஏற்படுத்தி, அவரை திருப்திபடுத்தலாமா? என்றும் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக இன்று காலை அத்வானியை நிதின்கட்காரி, உமாபாரதி இருவரும் சந்தித்துப் பேசினார்கள். வெளியூர்களில் இருந்த பா.ஜ.க. தலைவர்கள் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தனர். அவர்கள் அத்வானியை சந்தித்து பேசி வருகிறார்கள்.

அவர்களிடம் அத்வானி, பா.ஜ.க. கொள்கை முடிவுகளில் சங் பரிவார் அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று கூறி வருவதாக தெரிகிறது. இதையடுத்து அத்வானி மன நிலைக்கு ஏற்ப சமரச முயற்சிகளை மேற்கொள்ள பா.ஜ.க. தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். ஆனால் மோடிக்கு கொடுக்கப்பட்ட பிரசாரக் குழுத் தலைவர் பதவியை எக்காரணம் கொணடும் திரும்பப் பெற்று விடக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.