Home நாடு மலேசியாவின் சக்தி வாய்ந்த10 பெண்மணிகள் –- யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! கீதாஞ்சலிக்கு 8வது...

மலேசியாவின் சக்தி வாய்ந்த10 பெண்மணிகள் –- யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! கீதாஞ்சலிக்கு 8வது இடம்

517
0
SHARE
Ad

Geethanjali-sliderஜூன் 20 நேற்றைய முன்தினம் செவ்வாய்க்கிழமை ஸ்டார் ஆங்கிலப் பத்திரிக்கையில் மலேசியாவின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு பட்டியல் பலத்த சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

#TamilSchoolmychoice

விளம்பரப் பக்கம் போல் தோற்றமளிக்கும் அந்த செய்தியில் யார் அந்த விளம்பரத்தை வெளியிடுகின்றார்கள் என்பது பற்றியோ, எந்த அமைப்பு அந்த தேர்வைச் செய்தது என்பது பற்றியோ எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. அல்லது அந்தப் பக்கம் ஸ்டார் ஆசிரியர் குழுவினரின் தேர்வா என்பது பற்றிய குறிப்பும் இல்லை.

பிரதமரின் மனைவியான டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றார். இரண்டாவது இடத்தை பேங்க் நெகாரா தலைவர் (கவர்னர்) சேத்தி அக்தார் பிடித்திருக்கின்றார்.

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசனுக்கு நான்காவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரைப் பற்றிய குறிப்பில் அவர் சார்ந்துள்ள பெர்சே இயக்கத்தைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை. பெர்சே அமைப்பின் மூலமாகத்தான் அம்பிகா பிரபலமானார் என்பது மலேசியாவில் சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியும்!

பிரபல பத்திரிக்கையாளரான காடிர் ஜாசின் இது குறித்து தான் ஸ்டார் பத்திரிக்கையுடன் தொடர்பு கொண்டதாகவும், அந்த பட்டியலை ஒரு நிறுவனம் விளம்பரமாகப் போட்டிருக்கின்றது, ஆனால் அந்த நிறுவனத்தின் பெயரை வெளியிட மாட்டோம் என அவர்கள் கூறியதாகவும் தனது இணைய வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

அம்பிகாவுக்கே தெரியாதாம்!

ambigaஇந்த பட்டியலில் தான் எப்படி இடம்பிடித்தேன் என்பது எனக்கே தெரியாது என்று இது பற்றி கூறியுள்ள அம்பிகா, தனது பிரபல்யமும் தனது இன்றைய நிலைமையும் பெர்சே இயக்க ஈடுபாட்டால் வந்ததுதான் என்றும் ஆனால் அந்த பட்டியிலில் தனது பெர்சே ஈடுபாட்டைப் பற்றி எதுவும் தெரிவிக்காதது குறித்தும் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.

மலேசியாகினி இணைய செய்தித் தளத்திற்கு வழங்கிய செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

இந்த பட்டியலில் 6வது இடம் பெற்றுள்ள ஹன்னா இயோ, சிலாங்கூர் சட்டமன்றத்தின் அவைத்தலைவராக தேர்வானதன் மூலம் நாட்டின் முதல் பெண் சட்டமன்ற அவைத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஆனால் அவரும் மலேசியாகினிக்கு வழங்கிய பேட்டியில் தனக்கும் இது பற்றி எதுவும் தெரியாது என்றும் யாரும் தன்னைத் தொடர்பு கொண்டதில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

கீதாஞ்சலிக்கு 8வது இடம்starpowerwomen

சக்தி வாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் டிஎச்ஆர் ராகா மூலம் பிரபலமான கீதாஞ்சலிக்கு (படம்) எட்டாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

அவரைப் பற்றிய குறிப்பில் ஜி.குளோபல் மீடியா என்ற நிறுவனத்தின் தலைவர் என்றும் தொலைக்காட்சி, வானொலிகளில் அறிவிப்பாளராக பணியாற்றியதன் மூலம் பிரபலமான அவர் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் மலேசியா அழகிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்வானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் ஊடக உலகில் முக்கிய பங்கு வகிக்கும் அவர் சிறந்த பேச்சாளர் என்றும் தனது தாராள மனப்போக்குடைய நன்கொடைகளாலும், பரிவுள்ள அணுகுமுறையாலும் அவர் புதிய இளம் தலைமுறையினரை கவர்ந்துள்ளதோடு, வணிக உலகத்தினரையும், அரசியல்வாதிகளையும் கூட கவர்ந்துள்ளார் என்றும் அவரைப் பற்றிய குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியல் இதுதான்:-

1.    டத்தின் படுக்கா ஸ்ரீ ரோஸ்மா மன்சோர்

     (பிரதமர் மனைவி)

2.    டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் செத்தி அக்தார் அசிஸ்

     (பேங்க் நெகாரா தலைவர்)

3.    டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ மிச்சல் இயோ

     (ஹாங்காங் – ஹாலிவுட் நடிகை)

4.    டத்தோ அம்பிகா சீனிவாசன்

5.    நுருல் இசா அன்வார்

     (பிகேஆர் உதவித் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர்)

6.    ஹன்னா இயோ

     (சிலாங்கூர் சட்டமன்ற அவைத் தலைவர்)

7.    தெரசா கோக் சு சிம்

     (சீ புத்தே நாடாளுமன்ற உறுப்பினர்)

8.    கீதாஞ்சலி ஜி.

     (ஜி குளோபல் மீடியா தலைவர்)

9.    டத்தோ ஜமிலா ஜமாலுடின்

     (குவைத் நிதி வாரியத்தின் தலைமை நிர்வாகி)

10.   டத்தின் படுக்கா மரினா மகாதீர்

     (சமூக ஆர்வலம் – எழுத்தாளர்)