Home கலை உலகம் “மணிவண்ணனின் அந்த சிரிப்பு மட்டும் என் எண்ணத்தில் இருந்து மறையவில்லை”- பார்த்திபன்

“மணிவண்ணனின் அந்த சிரிப்பு மட்டும் என் எண்ணத்தில் இருந்து மறையவில்லை”- பார்த்திபன்

572
0
SHARE
Ad
Parthiban

சென்னை, ஜூன் 22 – கடந்த வாரம் மாரடைப்பால் காலமான இயக்குனர் மணிவண்ணன் குறித்து நடிகர் பார்த்திபன் தனது முகநூலில் அவரது நினைவுகளை பகிர்ந்துள்ளார். ஆரம்ப காலத்தில் தான் நடிக்க வருவதற்கு முன்பு கதாப்பாத்திரங்களுக்கு குரல் கொடுத்துக்கொண்டிருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். இயக்குனர் பாக்கிய ராஜிடம் உதவி இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய பார்த்திபன், புதிய பாதை, ஹவுஸ்புல் போன்ற தனது இயக்கத்தில், நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு தேசிய விருதுகள் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிவண்ணன் குறித்து பார்த்திபன் கூறியுள்ள தகவல் பின்வருமாறு:-

“நான் டப்பிங் பேசிக் கொண்டிருந்த காலத்தில்… ஒரு கதாபாத்திரத்திற்கு என் குரல் பொருத்தம் என முடிவு செய்து ரூ 500 முன் பணம் கொடுத்தார்கள். அதற்கு 10% கமிஷன் யாருக்கோ கொடுக்க வேண்டும் என்ற சூட்சமம் அறியாத நான், டீ கடன்,பன் கடன்,டிபன் கடன் இப்படி எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு டப்பிங் அரங்கிற்கு சென்றேன்.”

#TamilSchoolmychoice

“இன்றே அந்த கேரக்டருக்கு பேசி முடித்து விட்டால் மீதி 1500 கிடைக்கும் அதில் தீபாவளியை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்ற 1000 கற்பனையில் உதடு தானாய் விசிலியது. ஆனால் எனக்கு பதில் அந்த கேரக்டருக்கு வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். கேட்டால் என் குரல் பொருந்த வில்லையாம்(10%)! கலங்கிய படி வாசலில் நின்றிருந்தேன்.”

“அப்படத்தின் இயக்குனர் வந்தார். விஷயம் அறிந்து என்னை சமாதானப் படுத்தினார். அடுத்த படத்தில் டப்பிங் வாய்ப்பு தருவதாக சொன்னார். நான் சொன்னேன் அதற்காக நான் அழவில்லை நீங்கள் கொடுத்த முன் பணத்தை நான் செலவழித்து விட்டேன், உடனே என்னால் திருப்பி தர முடியாது நான் என்ன செய்வேன் என்றேன்.”

“என் தோளைத் தட்டி கொடுத்து “பரவாயில்ல போங்க” என்று சிரித்தார். அந்த சிரிப்பு மட்டும் இன்னமும் என் எண்ணத்தில் மறையவே இல்லை. அந்த இயக்குனர் மறைந்த மணிவண்ணன்!” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.