Home நாடு காட்டுக்குள் இருந்த வெளிநாட்டினருக்கும் நீல நிற அடையாள அட்டை – ஆர்.சி.ஐ தகவல்

காட்டுக்குள் இருந்த வெளிநாட்டினருக்கும் நீல நிற அடையாள அட்டை – ஆர்.சி.ஐ தகவல்

466
0
SHARE
Ad

rci

சபா, ஜூலை 3 – சபா மாநிலத்தில் காட்டில் வேலை செய்து வந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நீல நிற அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக அரச விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ) கண்டறிந்துள்ளது.

அப்படி நீல நிற அடையாள அட்டை பெற்றவர்களுள் ஒருவரான மாமிங் சாலெங்(வயது 63), இந்தோனேசியாவில் பிறந்து, கடந்த 1981 ஆம் ஆண்டு சபா மாநிலம் கினபாத்தாங்கன்னில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் வேலைக்காக மலேசியா வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவருக்கு வந்த இரண்டு வருடங்களிலேயே நீல நிற அடையாள அட்டை கொடுக்கப்பட்டு, அதன்பிறகு அவர் மலேசிய கடவுச் சீட்டையும் (பாஸ்போர்ட்) பெற்று, இரண்டு முறை இந்தோனேசியாவும் சென்று வந்துள்ளார்.

“எனது மேலாளர் எனக்கு நீல நிற அடையாள அட்டை வேண்டுமா என்று கேட்டார். நான் வேண்டும் என்றேன். எனக்கு அடையாள அட்டை பெற்றுத் தர இரண்டு பேர் உதவினார்கள். அவர்கள் என்னை புகைப்படம் எடுத்தார்கள். விரல் ரேகையைப் பதிவு செய்தார்கள். அவர்கள் தான் எனது விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்தார்கள்” என்று நேற்று நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்துள்ளார்.

நீலநிற அடையாள அட்டையைப் பெற்றுத் தந்ததற்காக மாமிங், அவர்களுக்கு 150 ரிங்கிட் கொடுத்துள்ளார். அப்போதிலிருந்து மாமிங் தேர்தலில் வாக்களித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காபிக் கடையில் அடையாள அட்டை

இது போன்று அடையாள அட்டை பெற்ற மற்றொரு நபரான அகமட் சோசுவுக்கு காபி கடையில் வைத்து அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா தவாவில் பிறந்தவரான அகமட் சோசு (வயது 5), கடந்த 1978 ஆம் ஆண்டு தோட்ட வேலைக்காக மலேசியா வந்துள்ளார். அப்போது அவருக்கு வயது 14 தான்.

1981 ஆம் ஆண்டுவரை சபா மாநிலத்தில் பல தோட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு கட்டுமானப் பணியில் சேர்ந்துள்ளார்.

பின்னர், கோத்தா கினபாலுவில் நீல நிற அடையாள அட்டை கிடைப்பதாகக் கேள்விப் பட்ட அவர், புக்கிஸ் வாசி ஒருவரைச் சந்தித்துள்ளார். அவர் இவரது புகைப்படம், விரல் ரேகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு 10 ரிங்கிட் பெற்றுள்ளார்.

அடுத்த 3 மாதங்களுக்குப் பிறகு, அகமட் சோசுவை ஒரு காபி கடையில் சந்தித்த அந்த புக்கிஸ் வாசி நீல நிற அடையாள அட்டையை வழங்கியுள்ளார்.

அன்று முதல் சபா மாநிலத்தில் பிறந்தவராக ஆகிவிட்ட அகமட் சோசு, தொடர்ந்து பொதுத்தேர்தலில் வாக்களித்து வந்துள்ளார்.

சட்டவிரோதமாக வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்

காபி கடையில் வைத்து அகமட் போன்றோருக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள் யாவும் தேசிய பதிவு இலாகாவால் வழங்கப்பட்டுள்ளவை. எனவே அடையாள அட்டைகளைப் பெற்றவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்கிறார் இவ்விசாரணையை நடத்தும் அதிகாரியான ஜாமில் அரிப்பின்.

அதே போல் அரச விசாரணை ஆணையத்திற்கு தலைமை ஏற்று நடத்தும் முன்னாள் நீதிபதி ஸ்டீவ் ஷிம்மும், “அவர்கள் சட்டவிரோத அடையாள அட்டைகளைப் பெற்றிருந்தாலும், அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் தவறு எதுவும் இல்லை. யார் தவறு என்று கூறுவது?”  என்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோதமாக அடையாள அட்டை பெற்ற 155 பேரை ஆர்.சி.ஐ விசாரணை செய்துள்ளது.