Home அரசியல் ம.இ.கா. தேசியத் தலைவர் தேர்தல் குழுத் தலைவர்: டான்ஸ்ரீ சோமாவுக்கு பதிலாக டான்ஸ்ரீ குமரன்?

ம.இ.கா. தேசியத் தலைவர் தேர்தல் குழுத் தலைவர்: டான்ஸ்ரீ சோமாவுக்கு பதிலாக டான்ஸ்ரீ குமரன்?

583
0
SHARE
Ad

Soma-Tan-Sri-Featureஜூலை 26 – எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெறவுள்ள ம.இ.கா.வின் தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்காக கடந்த மாதம் தேசியத் தலைவருக்கான தேர்தல் குழுவினை மத்திய செயலவை அமைத்தது.

#TamilSchoolmychoice

அதன் தலைவராக கடந்த பல ம.இ.கா. தேசியத் தலைவர் தேர்தல்களில் தேர்தல் குழுத் தலைவராக செயல்பட்ட தேசிய நிலநிதி கூட்டுறவுக் கழகத் தலைவர் டான்ஸ்ரீ சோமசுந்தரம் (படம்) மீண்டும் தேர்தல் குழுத் தலைவராக இந்த முறையும் மத்திய செயற்குழுவால் அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும், அவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை என்று கூறப்படுகின்றது.

தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தேசியத் தலைவர் தேர்தல் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக சோமசுந்தரம் மத்திய செயலவைக்கு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

உடல் நலத்தை காரணம் காட்டி விலகிக் கொண்டாலும் உண்மையான காரணம் அதுவல்ல என்றும் கூறப்படுகின்றது. இந்தமுறை  கட்சித் தலைவருக்கான தேர்தலில் டாக்டர் சுப்ரமணியம் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு ஆதரவாக முன்னாள் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ சாமிவேலு தீவிரமாக களமிறங்குவார் என்பதால், தனது நடுநிலைமை மீது சந்தேகம் ஏற்படும் என்ற காரணத்தினால்தான் டான்ஸ்ரீ சோமா ஒதுங்கிக் கொண்டார் என்று ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.

சாமிவேலு டான்ஸ்ரீ சோமாவுக்கு நெருக்கமானவர் என்பதோடு உறவினர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அதோடு, இந்த முறை டாக்டர் சுப்ரமணியம் தேசியத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதோடு, தனக்கு நெருக்கமான பல ம.இ.கா தலைவர்கள் அணி பிரிந்து நிற்பார்கள் என்ற காரணத்தாலும், இந்த தேர்தலில் தேர்தல் குழுத் தலைவராக செயல்பட்டு தன்மீது மக்கள் கொண்டுள்ள நற்பெயரையும், நல்லெண்ணத்தையும் கெடுத்துக் கொள்ள விரும்பாத காரணத்தாலும் டான்ஸ்ரீ சோமா தன்மீது மத்திய செயலவை சுமத்திய பொறுப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

புதிய தலைவர் டான்ஸ்ரீ குமரன்?

Kumaran-Tan-Sri-Sliderஇதனால், புதிய தேர்தல் குழுத் தலைவராக பத்துகேவ்ஸ் கிளைத்தலைவரும் மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ எஸ்.எஸ்.ராஜகோபால் அல்லது முன்னாள் பேராக் மாநிலத் தலைவர் டான்ஸ்ரீ குமரன் (படம்-வலது) ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்க கட்சியின்  தலைமைத்துவம் முடிவு செய்திருக்கிறதாம்.

அடுத்த மத்திய செயற்குழு கூடும் போது புதிய தேர்தல் குழுத் தலைவர் பதவிக்கான நியமனம் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.