Home அரசியல் தே.மு. சீனப் புத்தாண்டு விருந்துக்கு ஆயிரக்கணக்கானோர் – பிரதமருக்கு ஆதரவா? கொரிய பாடகர் “சை”யைக் காணவா?

தே.மு. சீனப் புத்தாண்டு விருந்துக்கு ஆயிரக்கணக்கானோர் – பிரதமருக்கு ஆதரவா? கொரிய பாடகர் “சை”யைக் காணவா?

914
0
SHARE
Ad

Najib-Feature---3

பினாங்கு, பிப்ரவரி 12 – பிரதமர் நஜிப்பின் பினாங்கு வருகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய முன்னணியின் ஒரே மலேசியா சீனப் புத்தாண்டு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் ஏறத்தாழ 80 ஆயிரம் பேர் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆனால் வந்த கூட்டம், தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க வந்த கூட்டமோ, பிரதமருக்கு ஆதரவு வழங்க வந்த கூட்டமோ கிடையாது –  மாறாக ‘கங்ணம்’ தென் கொரியப் பாடகர் சை என்பவரைக் காண வந்த கூட்டம்தான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டதால் தேசிய முன்னணிக்கு இந்த ஒரே மலேசியா விருந்து நிகழ்ச்சி பலத்த தோல்வி என்றும் பின்னடைவு என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

முகநூலில் வெளியான ஒளிநாடா

பினாங்கு தேசிய முன்னணியின் ஒரே மலேசியா விருந்துபசரிப்பு பற்றிய ஒளிநாடா ஒன்று நேற்று முதல் முக நூலில் பரபரப்பாக பரப்பப்பட்டு வருகின்றது.

இது தேசிய முன்னணிக்கு பெருமளவில் எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

மக்களுக்கு ஏற்புடைய செய்திகளை நவீன தகவல் ஊடகங்களின் மூலம் மக்களே நிர்ணயித்துக் கொள்கின்றார்கள் என்ற சித்தாந்தத்தை மறுபடியும் வலியுறுத்தும் விதமாக இந்த ஒளிநாடா அமைந்துள்ளது.

அந்த ஒளிநாடாவில் பிரதமர், கூட்டத்திற்கு வந்த மக்களை நோக்கி தென் கொரிய பாடகர் சைக்கு நீங்கள் தயாரா என்று கேள்வி கேட்கின்றார். கூட்டமும் பதிலுக்கு ஒரே குரலாக ஆமாம் என்கின்றது. பின்னர் ‘பிஎன்’னுக்கு (அதாவது தேசிய முன்னணிக்கு) நீங்கள் தயாரா என்று பிரதமர் கேள்வி கேட்கின்றார். கூட்டமோ இல்லை என்கின்றது.

இதனால் வந்திருந்த கூட்டம் தென்கொரியப் பாடகருக்காக வந்த கூட்டம்தான் என்பது தெளிவாகிவிட்டது.

(அந்த ஒளிநாடாவை பதிவிறக்கம் செய்யுங்கள்)

யூடியூப் எனப்படும் ஒளிநாடா அலைவரிசையின் மூலம் தனது ‘கங்ணம்’ பாடல் நடன அசைவுகளினால் உலகம் முழுக்க பிரபலமாகிவிட்ட சை மலேசியாவுக்கு வருவது இதுதான் முதன் முறை என்பதால் அவரைக் காணவே பெருங்கூட்டம் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

சைக்கு 3 மில்லியன் – தே.மு. மலிவான பிரச்சார உத்தி

தனது 55 ஆண்டுகால ஆட்சியை வைத்தும் எதிர்கால அரசியலில் என்ன செய்யப் போகின்றோம் என்பதை வைத்தும் 13வது பொதுத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் செய்ய வேண்டிய தேசிய முன்னணி சைக்கு 3 மில்லியன் பணம் கொடுத்து அவரைக் கூட்டி வந்து தேசிய முன்னணிக்கு பிரச்சாரம் செய்யும் மலிவான விளம்பர யுக்தியை கையாண்டுள்ளது.

மேலும் பினாங்கு ஒரே மலேசியா சீனப்புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்டவர்கள் பலரும் மஞ்சள் சட்டை அணிந்து தாங்கள் பெர்சே ஆதரவாளர்கள் என்பதைப் புலப்படுத்தினர்.

கங்ணம் பாடகரின் நிகழ்ச்சி முடிந்ததுமே கூட்டத்தில் பெரும்பாலோர் கலைந்து சென்று விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 மில்லியன் ரிங்கிட்டைக் கொண்டும் இது போன்ற கலைநிகழ்ச்சிக்கு செலவழிக்கப்படும் இலட்சக்கணக்கான ரிங்கிட்டைக் கொண்டும் எத்தனையோ நல்ல மக்கள் நலத் திட்டங்களை தேசிய முன்னணி மேற்கொள்ளலாம்.

ஆனால், அதை விடுத்து சை போன்ற பாடகர்களைக் கொண்டு மலிவான விளம்பரம் தேடும் தேசிய முன்னணியின் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தராது.

யூடியூப், மற்றும் முகநூல் வழியாக சுழல் முறையில் பரப்பப்படும் பினாங்கு ஒரே மலேசியா விருந்துபசரிப்பு குறித்த ஒளிநாடாவினால் தேசிய முன்னணிக்கு மேலும் எதிர்மறையான விளைவுகளே தற்போது ஏற்பட்டுள்ளது.