Home உலகம் 120 கோடி கத்தோலிக்கர்களின் தலைவரான போப் ஆண்டவர் திடீர் ராஜினாமா

120 கோடி கத்தோலிக்கர்களின் தலைவரான போப் ஆண்டவர் திடீர் ராஜினாமா

501
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_90795099736வாடிகன்சிட்டி,பிப்.12- முதுமை காரணமாக பணியை செவ்வனே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக போப் பெனடிக்ட் அறிவித்துள்ளார். வரும் 28ம் தேதி அவர் விலகுகிறார். 600 ஆண்டுகளில் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவது இது முதல் முறை. உலகம் முழுவதும் உள்ள 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக விளங்குபவர் போப் ஆண்டவர். வாடிகன்சிட்டியின் தலைவராகவும் இவர் இருப்பார். தற்போது போப் ஆண்டவராக ஜெர்மனியை சேர்ந்த 16ம் பெனடிக்ட் உள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 2ம் ஜான்பால் இறந்ததை தொடர்ந்து, கத்தோலிக்க கார்டினல்கள் ஒன்று கூடி, போப் ஆண்டவராக 16ம் பெனடிக்ட்டை தேர்ந்தெடுத்தனர். மிக வயதான காலத்தில் (78 வயது) போப் ஆண்டவர் பதவிக்கு வந்தவர் 16ம் பெனடிக்ட்தான். தற்போது 85 வயதாகி விட்ட நிலையில், முதுமை காரணமாக அவர் அவதிப்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகளுக்கு உடல்நிலை ஒத்துழைப்பு அளிக்கவில்லை. சமீபத்தில் ரோம் நகரில் நடந்த ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில், கையில் இருந்த உரையை படிக்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டார்.

இந்நிலையில், வாடிகன் கார்டினல்களின் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய 16ம் பெனடிக்ட், போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கார்டினல்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடவுளின் முன் என் ஆத்மாவை பல முறை சோதித்து கொண்ட பின்னரே, போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவது என்று முடிவு செய்தேன். என்னுடைய முதுமை, போப் ஆண்டவர் பதவிக்கான பணிகளை செவ்வனே செய்வதற்கு பொருத்தமானதாக இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின்னரே இந்த முடிவுக்கு வந்தேன்.

#TamilSchoolmychoice

பிரார்த்தனை மற்றும் பொறுமையை தவிர வெறும் வார்த்தைகளால் மட்டும் போப் ஆண்டவர் பணியை மேற்கொள்ள முடியாது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால், இன்றைய உலகில் பல்வேறு மாற்றங்கள் வேகமாக நடந்து வருகிறது. வாழ்க்கையின் நம்பிக்கை குறித்த ஆழமான கேள்விகள் உலுக்குகின்றன. இப்படிப்பட்ட நிலையில், வாடிகனை நிர்வகிப்பதற்கும், போப் ஆண்டவர் பணிகளை மேற்கொள்வதற்கும் உடலிலும், மனதிலும் பலம் இருப்பது அவசியம். ஆனால், கடந்த சில மாதங்களாக என் உடலில் பலம் குறைந்துவிட்டது. இதனால் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுகிறேன். இவ்வாறு போப் ஆண்டவர் பேசினார்.

பின்னர், இத்தகவலை வாடிகன் செய்தி தொடர்பாளர் பிரடிரிகோ லோம்பார்டி, நிருபர்களிடம் தெரிவித்தார். போப் ஆண்டவர் வரும் 28ம் தேதி பதவி விலகுகிறார் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 600 ஆண்டுகளுக்கு முன்பு 1415ம் ஆண்டில் போப் ஆண்டவராக இருந்த 12ம் கிரிகோரி பதவி விலகினார். மேற்கத்திய திருச்சபை நிர்வாகிகளுக்கும், போட்டி கிறிஸ்தவ தலைவர்களுக்கும் இடையே நடந்த மோதலின் இறுதியாக ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, அவர் பதவி விலகினார்.

அதன்பின்னர், போப் ஆண்டவர் பதவியில் இருந்து ஒருவர் விலகுவது இதுவே முதல் முறை. 16ம் பெனடிக்ட் வரும் 28ம் தேதி பதவி விலகியவுடன், கார்டினல்கள் வாடிகனில் ஒன்று கூடி புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். அடுத்த மாத இறுதிக்குள் புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று வாடிகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.