Home அவசியம் படிக்க வேண்டியவை ‘செல்லியல்’ – புதிய மேம்பாட்டு மாற்றங்களுடன் 2ஆம் பதிகை அறிமுகம்!

‘செல்லியல்’ – புதிய மேம்பாட்டு மாற்றங்களுடன் 2ஆம் பதிகை அறிமுகம்!

619
0
SHARE
Ad

selliyal 1கோலாலம்பூர், ஜன 7 – பல புதிய மேம்பாடுகளைக் கொண்டுவரும் “செல்லியல் 2.0” உருவாக்கத்தின் அறிமுக விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10 ஜனவரி 2014, மாலை 5.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவிலுள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் (டைனாஸ்டி தங்கும் விடுதிக்கு அருகில்) நடைபெறவுள்ளது.

2013ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் அறிமுகம் கண்ட செல்லியல், தமிழை பல படிநிலைகளில் தொழில்நுட்பத்தோடு இணைத்து இணையம் முதல் திறன்பேசிகள் வரை புதிய ஊடகங்களின் வழி ஆயிரக் கணக்கான பயனர்களை அடைந்துள்ளது.

மலேசியாவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையத்தோடு கையடக்கக் கருவிகளிலும் தரமான செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் ஒரே ஊடகமான செல்லியல் தனது கடப்பாட்டிலிருந்து வழுவாது தன் தொழில் நுட்ப அம்சங்களைத் தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

இதுவரைப் பெற்ற அனுபவங்களையும் பயனரிடம் இருந்து பெற்றக் கருத்துகளையும் வைத்து, ஆசிரியர் குழுவினரும், தொழில்நுட்பக் குழுவினரும் இணைந்து செல்லியலின் அடுத்தக் கட்ட மேம்பாட்டுக்கு அடிப்படை அமைத்திருக்கின்றனர். இந்த மேம்பாட்டில் பல அம்சங்களைச் சேர்த்திருப்பதுடன் புதிய பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும் உருமாற்றங்களையும் ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த அறிமுக நிகழ்வில் செல்லியலின் இணை நிறுவனரும், தொழில் நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் இந்தப் புதிய உருவாக்கத்தைப் பற்றி செயல்முறைக் காட்சிகளுடன் விளக்கங்களை வழங்குவார்.

அழைப்பிதழைப் பெற்றவர்கள் மட்டுமே இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியும் என்பதால், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைய முகவரி அல்லது செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களின் அழைப்பிதழை  உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இணைய முகவரி: editor@selliyal.com

செல்பேசி: +603-012-2326967