Home நாடு ‘நஜிப்பைக் கவிழ்க்கும் முயற்சியில் பின்னணியில் நான் இல்லை’ – மகாதீர்

‘நஜிப்பைக் கவிழ்க்கும் முயற்சியில் பின்னணியில் நான் இல்லை’ – மகாதீர்

411
0
SHARE
Ad

time_mahathir1ஜனவரி 31 – பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளில் முன்னாள் பிரதமர் மகாதீரின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என பிகேஆர் வியூக இயக்குநர் ரஃபிசி ரம்லியின் கருத்துக்கு மகாதீர் முகமட் மறுப்பு தெரிவித்துள்ளார். “இது ரஃபிசியின் சொந்த கருத்தாகும். அரசாங்கத் தலைமைத்துவத்தை கவிழ்க்கும் முயற்சி என்பது எனது காலம் தொட்டு இருந்து வருகின்றது. அரசாங்கத்தை கவிழ்த்து மாற்று அரசாங்கத்தைத் தோற்றுவிப்பது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் வேலை” என்று பெர்னாமா வானொலிக்கு வழங்கிய போட்டியொன்றில் மகாதீர் கூறினார். மலேசியாகினி இணைய செய்தித் தளத்திற்கு எழுதிய கடிதமொன்றில் அன்வார் இப்ராகிம் ஏன் காஜாங் சட்டமன்றத்திற்குப் போட்டியிடுகின்றார் என்பது குறித்து விளக்கியிருக்கும் ரஃபிசி ரம்லி, நஜிப்பின் தலைமைத்துவத்தை கவிழ்ப்பதற்கு மகாதீரும் அவரது ஆதரவாளர்களும் பின்னணியில் இருந்து செயல்படுகின்றார்கள் என்றும் அவ்வாறு மகாதீரின் ஆதரவாளர்கள் அம்னோவின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றினால் சிலாங்கூரில் பக்காத்தானைக் கவிழ்க்கும் முயற்சிகளில் அம்னோ ஈடுபடுவது மேலும் அதிகரிக்கும் என்றும் அதனை முறியடிக்கும் விதமாகத்தான் அன்வார் சிலாங்கூர் சட்டமன்றத்திற்குள் உறுப்பினராக நுழைய வேண்டியது அவசியமாகின்றது என்றும் அந்த கடிதத்தில் கூறியிருந்தார். அண்மையக் காலமாக அம்னோவிற்கு ஆதரவான இணையத் தளங்களில் நஜிப்பின் தலைமைத்துவத்தைக் குறை கூறும் போக்கு அதிகரித்து வருகின்றது. நஜிப்பின் தலைமைத்துவத்தைக் கவிழ்ப்பதற்கான மறைமுக முயற்சிகளின் ஒரு பகுதியே இது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ரஃபிசியின் கருத்துக்கு மறுப்பு சொல்லியிருக்கும் மகாதீர், அன்வாரின் உண்மையான நோக்கம் எதிர்காலத்தில் பிரதமராவதுதான் என்றும் அதற்கான தகுதி தனக்கு இருக்கிறது என்பதைக் காட்டத்தான் அவர் சிலாங்கூரின் மந்திரி பெசாராக முயல்கின்றார் என்றும் மகாதீர் கூறினார். இருப்பினும் அரசியலில் முடிவெடுக்க வேண்டியது அன்வாரின் தனிப்பட்ட உரிமை என்றும் மகாதீர் மேலும் கூறினார்.